20க்கு வாக்களித்த மு.கா எம்.பிக்கள் பொது மன்னிப்பு கோர இணக்கம்: ஹக்கீம்

 20க்கு வாக்களித்த மு.கா எம்.பிக்கள் பொது மன்னிப்பு கோர இணக்கம்: ஹக்கீம்

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேரும் பொதுமக்களிடம் மன்னிப்பு கோர இணக்கம் வெளியிட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட கூட்டம் நேற்று (13) சனிக்கிழமை நள்ளிரவு தாண்டி இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகவியலாளர் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம்,

"எங்களுடைய கட்சியின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் 20ஆவது திருத்தத்திற்கு வாக்களித்தது சம்பந்தமாக உயர்பீடக் கூட்டத்தில் விளக்கமளிப்பதற்காக குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களை நாங்கள் அழைத்திருந்தோம்.

இதன்போது, குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வரும் தங்களது சுய விளக்கங்களை வழங்கினார்கள். தங்களது பிரதேசங்களிலும் அதேநேரம் தங்களுக்கு வாக்களித்த மக்கள் சார்பாகவும் சில விடயங்களை அரசங்கத்தினூடாகச் செய்து கொள்வதற்கான தேவைப்பாடு இருக்கின்ற விவகாரங்களைச் சாதித்துக் கொள்ளவே அவ்வாறு நடந்து கொண்டதாகவும் அவர்கள் கூறினர்.

அதேநேரம், கடந்த காலங்களிலும் மாறி மாறி அரசாங்கங்களுக்கு ஆதரவளித்திருந்த போதிலும் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல்  அரசாங்கங்கள் தவறு விட்டிருக்கின்றன அந்த வகையில் தாங்கள் செய்தது தவறல்ல என்ற தோரணையிலும் பதிலளித்திருந்தார்கள்.

இருந்த போதிலும் குறிப்பாக இந்த சந்தர்ப்பத்தில் முழு நாட்டிலும் வாழ்கின்ற முஸ்லிம்கள் தங்களுடைய மன உணர்வுகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்ற நிலைமையில், இந்த ஜனாஸா எரிப்பு விவகாரத்திற்கு முடிவு காணாமல் இருக்கின்ற விவகாரத்திலும் தாங்கள் அந்தக் கோரிக்கையை முன்னிருத்தித்தான் இந்த 20ஆவது திருத்தச்சட்டத்திற்கு வாக்களித்தேம் என்றனர்.

இருந்தும் தாங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தினால்  ஏமாற்றப்பட்டு விட்டதாகவும், அது குறித்து தாங்கள் உயர்பீடத்திலும், மக்களிடத்திலும் மன்னிப்புக் கோர விரும்புவதாகவும் உறுதிபடக் கூறினர்.

அந்த அடிப்படையில் அதை அவர்கள் பகிரங்கமாக   செய்தியாளர் மத்தியில் தெரிவிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எதனையும் எடுக்கப்படுவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் குறித்த சுய விளக்கத்தை அவர்கள் மக்களிடத்தில் தாங்கள் விட்ட இந்த தவறுக்கான அந்த மன்னிப்பை கோருகின்ற சந்தர்ப்பத்தில், தொடர்ந்தும் கட்சியின் உறுப்பினர்களாக பயணிப்பதற்கான ஏற்பாட்டையும் ஒரே குழுவாக இருந்து இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்படுவதற்கான அந்த உறுதியையும் அவர்களிடத்திலிருந்து நாங்கள் எதிர்பார்க்கின்றோம்" என்றார்.

மு.கா ஊடகப் பிரிவு