அப்பாவி மக்களை ஒடுக்கும் பயங்கரவாத தடைச் சட்டம்!

அப்பாவி மக்களை ஒடுக்கும் பயங்கரவாத தடைச் சட்டம்!

-அப்ரா அன்ஸார்-

உலகின் பல நாடுகள் பலவகையான அரசியல் சித்தாந்தங்களை உருவாக்கி அதன் அடிப்படையில் ஆட்சி செய்கின்றனர்‌. அதில் சோசலிசம், பாசிசம், ஜனநாயகம், தாரளவாதம் என்பன பிரதானமானது.

அவையே இன்று நடைமுறை சாத்தியமானது. இவற்றில் சிலது அழிந்து கொண்டிருக்கின்றன. இதில் ஜனநாயகத்தை பொருத்தமட்டில் மக்களை சுதந்திரப் பிரஜையாக வாழ வைத்து, ஆரோக்கியமான பூரணத்துவமான விடயங்களை நாட்டு மக்களுக்கு வழங்குகின்றதோடு மக்களினை அடிமைப்படுத்தும் அடிமை வாழ்க்கையினையும் வாழவைக்கின்றது.

இது இன்று எமது நாட்டில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது நிகழ்காலத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. ஜனநாயகக் கொள்கைகளை பின்பற்றுகின்ற சில நாடுகள் மக்களை அடக்கி மக்களின் சுதந்திரத்தை இல்லாதொழித்து அவர்களை அடக்கி ஆளுகின்ற சர்வாதிகாரக் கொள்கைகளை சட்டங்களில் கொண்டுவர முயற்சி மேற்கொள்கின்றனர்.

CTA, PTA

அதாவது Counter Terrorism Act, பயங்கரவாத தடைச் சட்டம் (PTA) கடந்த காலங்களில் அதிகம் பேசப்பட்டு விடயமாக உள்ளது. குறிப்பாக 2019ஆம் ஆண்டு இந்த நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத குண்டு தாக்குதலின் பின்னர் இவை அதிகம் பயன்படுத்தப்பட்டது.

இந்த புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பற்றி அறியாத பலர் இருக்கின்றனர். மேலும் பலர் பயங்கரவாத தடைச் சட்டத்தினால் கைது செய்யப்பட்டனர். தேடுதல், கைது, விசாரணை, கடுங் கண்காணிப்பு ஆகிய அதிகாரங்களை பொலிசாருக்கும், ராணுவத்திற்கும் வழங்குவது உட்பட ஜனநாயக செயற்பாடுகளை ஒடுக்குகின்ற தன்மையை இத்ததைய சட்டங்கள் மனித உரிமைகளை அதிகமாக பாதிக்க கூடியது என்று சட்ட வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

எனினும் இதனால் பாரிய பிரச்சினைகள் ஏற்படப் போவதில்லை என்று ஒரு சிலர் கூறி வருகின்றார்கள். எனினும் இவை மிகப் பயங்கரமானதாகவே உள்ளது.

எந்த பொதுச் சேவையையும் அத்தியாவசிய சேவையாக வரையறுக்கின்ற முழுமையான அதிகாரம் ஜனாதிபதியிடமே இருக்கின்றது. எனவே ஜனாதிபதி எந்தவொரு பொதுப் போக்குவரத்துச் சேவையையும் அத்தியாவசிய சேவையாக வர்த்தமானியின் மூலம் அறிவித்து அது நடைமுறைக்கு கொண்டுவந்தால் அதற்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடும் மக்கள் அத்தியாவசிய சேவையொன்றிற்கு தடை ஏற்படுத்துவதாகவோ உட்கட்டமைப்பொன்றிற்கு தலையீடு செய்வதாகவோ கருதப்பட்டு புதிய பயங்கரவாத சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்தவர்களாக கருதப்படுவர்கள்.

ஓர் அடிப்படை உரிமையைச் சட்டமுறையாகப் பிரயோகிப்பதில் ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட ஏதேனும் நடவடிக்கை இச்சட்டத்தின் கீழாக தவறொன்றாக அமையாது என இச் சட்டம் தெரிவிக்கின்றது.

எனினும் தேசிய பாதுகாப்பு, தேசிய பொருளாதாரம், பொது ஒழுங்கு மற்றும் பொதுசன பாதுகாப்பு ஆகிய காரணங்களுக்காக அடிப்படை உரிமைகளை மறுப்பதற்கான உரிமையை அரசியலமைப்பு அரசிற்கு வழங்குகின்றது.

பொதுப் பாதுகாப்பு தொடர்பில் கொண்டுவரப்படும் ஒழுங்கு விதிகளாலும் சட்டங்களாலும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்ற நிலையை அரசியலமைப்பு இயலுமாக்குகிறது.

அதனால் அடிப்படை உரிமைகள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளமை இச் சட்டத்தின் கீழ் சந்தேக நபர்களாக அடையாளங் காணப்படுபவர்களுக்கு நடைமுறையில் மிகக் குறைந்தளவிலான பாதுகாப்பையே வழங்குகின்றது.

பயங்காரவாதம் தொடர்பான எந்தச் சட்டங்களிலும் இடம்பெறும் மனித உரிமை மொழியமைப்பு, அர ஒடுக்குமுறையை அங்கீகரிக்கின்ற கடுமையான ஏற்பாடுகளை திரையிட்டு மறைக்கின்ற வேலையையே செய்கின்றது. அந்த வகையில் புதிய பயங்கரவாத சட்டமும் இங்கு ஒரு விதிவிலக்கு அல்ல.

புதிய பயங்கரவாத சட்டத்திற்கு கீழான விசாரணைகள்

பழைய பயங்கரவாத சட்டத்தின் கீழ் அமைச்சரின் சந்தேகத்தின் பெயரில் எவரையும் தடுத்து வைக்க முடியும் என்ற சட்ட ஏற்பாடு காணப்படுகிறது.

புதிய சட்டத்தின் கீழ் இச்சட்ட ஏற்பாடு மருவி எந்த பொலிஸ் அதிகாரியும் எந்த இராணுவ அதிகாரியும் எந்த எல்லையோர பாதுகாப்பு அதிகாரியும் சந்தேகத்தின் பெயரில் எவரையும் கைது செய்யலாம் என்ற சட்ட ஏற்பாடு காணப்படுகிறது.

கைது செய்ததன் பின்னர் கைதி அவர் குறித்த குற்றத்தோடு தொடர்புபட்டுள்ளார் என ஏதேனும் ஒரு பிரதி பொலிஸ் மா அதிபர் திருப்தியடைவாரானால் அவரினால் இந்த பயங்கரவாத சட்டத்தின் கீழ் குறித்த சந்தேக நபரை தடுத்து வைப்பதற்கான உத்தரவை பிறப்பிக்க முடியும்.

மேற்கூறப்பட்ட அதிகாரிகளுக்கு எவரையும் கைது செய்வதற்கு இந்த சட்டத்தின் கீழ் பிடியாணை தேவை இல்லை. எந்த இடத்திற்குள்ளும் சந்தேகத்தின் பெயரில் உள்நுழைந்து தேடுதல் நடாத்த இந்த அதிகாரிகளுக்கு உரிமை இருக்கிறது.

எந்த ஒருவரினது உடமையை சந்தேகத்தின் பெயரில் கையகப்படுத்துவதற்கும் மேற்கூறப்பட்ட அதிகாரிகளுக்கு இச் சட்டத்தின் கீழ் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.

இச்சட்டத்தின் தற்போதைய நிலையில் இந்த சட்டத்தினால் ஏற்படப்போகும் அதிகார துஷ்பிரயோகத்தை கட்டுப்படுத்தக் கூடிய சட்ட ஏற்பாடுகள் அரச அதிகாரிகளின் விருப்புத் தேர்வுக்கு விடப்பட்டுள்ளது.

ஆகையால் இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்ற ஒருவருக்கு கைது செய்வதற்கான காரணத்தை தெரிவிக்காது இருப்பதோ அல்லது கைது செய்யப்படுகின்றவருக்கு புரிகின்ற மொழியில் விளங்கப்படுத்தாமல் இருப்பதோ இச் சட்டத்தின் கீழ் சட்டத்திற்கு புறம்பானதாக கருதப்படவில்லை.

மேலும் ஆண் பொலிஸ் உத்தியோகத்தர்களினால் பெண் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்படுவதோ, விசாரணைக்கு உட்படுத்தப்படுவதோ சட்டத்திற்கு புறம்பானதாக கருதப்படவில்லை.

இந்தச் சட்டமானது சாதாரண உண்மை நிலையை கவனத்தில் கொள்ளாத ஒன்றாக இருக்கின்றது. ஏனெனில் கைது செய்யப்பட்ட ஒருவர் ஏதாவது காயங்களுக்கு உள்ளாகி இருக்கிறாரா என பரீட்சித்து சட்ட வைத்திய அதிகாரிக்கு அறிவிக்கும் அதிகாரம் காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதாவது நடைமுயைறில் சித்திரவதையை யார் செய்கிறார்களோ அவர்களுக்கே சித்திரவதைக்கான காயங்கள் கைதியின் உடலில் இருக்கிறதா இல்லையா என்ற தீர்மானத்தை எடுக்க இச்சட்டம் அதிகாரம் வழங்குகிறது.

மேலும், பிரதி பொலிஸ்மா அதிபரினால் வழங்கப்படும் தடுப்புக் கட்டளையை கேள்விக்குள்ளாக்குவதற்கு நீதவானுக்கு எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை. பிரதி பொலிஸ்மா அதிபரின் கட்டளையை நீதித்துறையால் நியாயப்படுத்தும் ஒரு கருவியாக நீதவான் ஒடுக்கப்படுகிறார்.

எனவே, கைது செய்வதற்கான காரணங்கள் அற்பமாக, சட்டத்திற்கு முரணாக இருந்தாலும் குற்றச்சாட்டுக்களில் இருந்து முற்று முழுதாக கைதியை விடுதலை செய்வதற்கு நீதவானுக்கு எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை. பிணையில் கூட ஒருவரை விடுதலை செய்வதற்கு பொலிஸ் அதிகாரியின் ஆலோசனையை கேட்டு முடிவெடுக்க வேண்டிய நிலைக்கு நீதவான் தள்ளப்படுகிறார்.

இதற்கு மேல் ஒருவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்பதை நீதவான் கண்டுபிடித்தாலும் அந் நபரை விடுவிக்கும் அதிகாரம் நீதவானுக்கு இல்லை. அந் நபரை சிகிச்சைக்குப் பின் மீண்டும் சிறைக்கு அனுப்ப வேண்டியிருக்கும்.

சித்திரவதையினைச் செய்த அதிகாரி, தடுத்துவைக்கப்பட்டவரை நேரடியாக அணுகுவதை தடுப்பதற்கான அதிகாரத்தை இச்சட்டம் நீதவானுக்கு வழங்குகிறது.

ஆயினும், யதார்த்தத்தில் சித்திரவதை என்பது பரந்த அளவில் நடைபெற்றுவரும் ஒரு குற்றச்செயல். விசாரணைகளின் பொது கைதிகள் சித்திரவதைக்குள்ளாக்கப்படுவார்கள் என்பதே நடைமுறை.

சித்திரவதை செய்த பொலிஸ் அதிகாரியை கைதியை அணுகுவதில் இருந்து தடுத்தாலும் விசாரணை செய்யும் அடுத்த அதிகாரியும் மீண்டும் இதையே செய்வார் என்பதில் எந்தவித சந்தேகத்திற்கும் இடம் இல்லை.

எனவே, இச்சட்டத்தின் கீழ் நீதவானுக்கு கொடுக்கப்படவிருக்கும் இந்த அதிகாரம் கைதியை ஒருபோதும் சித்திரவதையில் இருந்து பாதுகாக்காது என்பதே உண்மை.

பயங்காரவாத சட்டமூலத்தின் கருத்தியல்

மிக முக்கியமாக இந்த புதிய சட்டமானது அரசு தனது மக்கள் மீது அவிழ்த்துவிடக்கூடிய அடக்குமறை அதிகாரத்தை பன்மடங்காக அதிகரிக்கிறது. ஒரு ஜனநாயக நாட்டில் மக்களுக்கிடையே காணப்படும் சமூக புரிந்துணர்வு மற்றும் இணக்கத்தை சின்னாபின்னமாக்கி ஒருவரை ஒருவர் சந்தேகக் கண்ணுடன் பார்க்கும் யதார்த்தத்தை ஏற்படுத்த இச்சட்டம் முனைகிறது என்பதே உண்மை.

பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டவர் என சந்தேகிக்கப்படும் ஒருவருக்கு அடைக்கலமளிப்பதையும் அவரோடு தொடர்பு வைத்துக் கொள்வதையும் Counter Terrorism Act (CTA) குற்றமாக்குகிறது.

ஓர் ஆள் மீது சந்தேகம் தெரிவிக்கப்பட்டால் இந்தச் சட்டத்தைப் பொறுத்தவரை ஒரு பொலிஸ் அதிகாரியின் மனவிருப்பின்படி இவ்வாறு சந்தேகம் தெரிவிக்கப்பட முடியும்.

பயங்கரவாத சந்தேக நபருடன் தொடர்பு வைத்திருக்கும் அனைவரையும் அவரது சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் பற்றி அதிகாரிகளுக்கு அறிவிக்கும் படியும் இந்த சட்டம் வலியுறுத்துகிறது. குடிமக்கள் எவராவது அவ்வாறு செய்யத்தவறுமிடத்து, அதற்குரிய தண்டனையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சட்டத்தின் கீழ் ஊரடங்கினை அறிவிக்கவும், பொது வாழ் அமைதியை பேணுவதற்கு ஆயுதப்படைகளை அழைக்கவும் ஜனாதிபதிக்கு அதிகாரத்தை வழங்குகிறது. 

இச்சட்டத்தின் கீழ் பொலிசாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை ஆயுதப்படைகளுக்கு கொடுக்கும் அதிகாரம் கூட ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர் எந்தவொரு இடத்தையும் தடுக்கப்பட்ட இடமாக அறிவித்து அங்கே மக்கள் நடமாட்டத்தை தடுத்துவிட முடியும். இதற்கு காரணமொன்றைச் சொல்ல வேண்டிய எந்தத் தேவையும் இல்லை.

தடுக்கப்பட்ட இடங்களாக எதையும் அமைச்சர் பிரகடனம் செய்யலாம். மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகள், மக்கள் பயன்படுத்தும் பொதுக் கட்டிடங்கள் போன்ற இடங்கள் கூட தடுக்கப்பட்ட இடங்களாக பிரகடனம் செய்வதற்கு இந்த புதிய சட்டம் வழிவகுக்கிறது.

ஜனாதிபதி, அமைச்சர் என்பவர்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரங்களுக்கு மேல் பொலிசாருக்கும் தனிப்பட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

மக்களின் நடமாட்டம், ஒன்றுகூடல், சட்டத்தில் வரையறுக்கப்படாத மக்கள் செயற்பாடுகள் உட்பட அனைத்து மக்கள் செயற்பாடுகள் அல்லது நடவடிக்கைகளையும் வழிகாட்டல்கள் மூலம் கட்டுப்படுத்துவதற்கு காவல்துறைக்கு அதிகாரம் வழங்குகிறது.

இவ்வழிகாட்டல்களை மீறப்படுமிடத்து மீறுபவரை இரண்டு ஆண்டுகள் வரை சிறையிலடைத்தும் தண்டப்பணம் அறவிட்டும் தண்டிக்க முடியும்.

Counter Terrorism Act (CTA) ஆனது பயங்கரவாதத்தை முறியடித்தல் எனும் போர்வையில் தனது குடிமக்கள் மீது அரசு ஒடுக்குமுறையைக் கட்டவிழ்ப்பதற்கு நிறைவேற்று அதிகாரத்தினுடைய கைகளைப் பலப்படுத்துகிறது.

அந்நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதியாகவோ, பொலிசாராகவோ, ஆயுதப் படைகளாகவோ இருக்கலாம். இச்சட்டமூலம் சட்டமாக்கப்பட்டால், ஏற்கனவே பரவலாக நடைபெறும் சித்திரவதைகள் தொடர்வதும் வரைமுறையற்ற கைதுகளும் கண்காணிப்பும் ஜனநாயகம் இயங்குவதற்கு தடையாக அமையும்.

Counter Terrorism Act (CTA) இன் கீழ் பொலிஸ் அதிகாரி ஒருவரினதோ, படைவீரர் ஒருவரினதோ தீர்மானத்தின்படி எந்தவொரு பிரசையும் பயங்கரவாதி என அடையாளம் காணப்படலாம். மேலும், Counter Terrorism Act (CTA) இன் கீழ், அமைச்சர் ஒருவரின் மனவிருப்பத்தின் பேரில் எந்தவொரு அமைப்பும் பயங்கரவாத அமைப்பாக முத்திரைகுத்தப்பட்டு தடைசெய்யப்படலாம்.

எழுதுவதும், கவனயீர்ப்புப் போராட்டம் நடத்துவதும், பொது இடங்களை அணுகுவதும், நட்புக் கொள்வதும், சக மனிதர்களை நம்புவதும் கூட பயங்கரவாத செயலாக அடையாளம் காணப்படலாம்.

எனவே, இந்த பயங்கரவாத சட்டமூலத்தினை பாராளுமன்றத்திற்கு கொண்டுவருவதும் அதனை சட்டமாக்குவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளும் மக்களால் அதிகாரம் வழங்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அந்த அதிகாரத்தை மக்களுக்கு எதிராக துஷ்பிரயோகிக்கும் செயலாகும் செயலாகவே நோக்க வேண்டியுள்ளது.

எந்தவொரு பயங்கரவாத சட்டவாக்கமும் மக்களுக்கு எதிரானதே. அதனை முற்போக்கானது என்று வாதிட முடியாது. இச்சட்டத்தை ஒப்பிட்டுப் பார்க்கையில் இந்த சட்டமானது குறிப்பாக பொருளாதார, சமூக, அரசயில் பலம் குன்றிய சாதாரண மக்களையே அதிகமாக பாதிக்கப் போகிறது என்பது தெளிவானது.

இன்று நாட்டு மக்கள் அனைவரும் ஜனநாயக ரீதியாக ஒன்றினைந்து இனவாத, கொடுங்கோல் ஆட்சியாளர்களான ராஜபக்ஷ குடும்பத்தை இந்த நாட்டிலிருந்து விரட்டியடித்துள்ளனர்.

இது இலங்கை தேசம் அடைந்த இரண்டாவது சுதந்திர தினமாக கொண்டாடப்படுகிறது.எனவே இனி வரும் காலங்களில் இந்த நாட்டை ஆளப் போகின்ற ஜனாதிபதி மக்கள் தலைவனாக செயற்பட வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பு.

அப்பாவி மக்களுக்கு எதிரான இந்த பயங்கரவாத சட்டங்கள் இனி வரும் காலங்களில் முற்றாக நீக்கப்பட வேண்டும், நாட்டில் அமைதி நிலைநாட்டப்பட வேண்டும்.