அமைச்சின் தீர்மானத்தினை மீறி கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என அழைப்பு

அமைச்சின் தீர்மானத்தினை மீறி கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என அழைப்பு

றிப்தி அலி

பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தீர்மானத்தினை மீறி கல்முனை 'வடக்கு உப பிரதேச செயலகம்', 'கல்முனை வடக்கு பிரதேச செயலகம்' என அழைக்கப்படுகின்ற விடயம் தகவலறியும் கோரிக்கையின் ஊடாக வெளியாகியுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் 19 பிரதேச செயலகங்களும் 'கல்முனை வடக்கு' எனும் ஒரு உப பிரதேச செயலகமும் காணப்படுவதாக அமைச்சு தெரிவிக்கின்றது. இவ்வாறன நிலையிலேயே – 'கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம்', 'கல்முனை வடக்கு பிரதேச செயலகம்' என கடந்த பல வருடங்களாக சட்ட ரீதியற்ற முறையில் அழைக்கப்பட்டு வருகின்றது.

அது மாத்திரமல்லாமல், குறித்த உதவிப் பிரதேச செயலகத்தின் பொறுப்பாளராக செயற்படுகின்ற உதவிப் பிரதேச செயலாளர், 'பிரதேச செயலாளர்' என்ற பதவி முத்திரையினை பயன்படுத்துவதும் தெரியவந்துள்ளது.

இதேவேளை, 'கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம்' தொடர்பான எந்தவொரு தகவலும் அமைச்சிலில்லை என பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்தது.

குறிப்பாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் ஸ்தாபிக்கப்பட்ட திகதி, இதற்கான அங்கீகாரம் வழங்கியது யார்?, இந்த உப பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டமைக்கான காரணம் போன்ற எந்தவொரு தகவலும் அமைச்சில் இல்லை என தகவலறியும் விண்ணப்பத்திற்கான பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த உப பிரதேச செயலகத்தின் கீழ் 29 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் காணப்படுவதாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தெரிவிக்கின்றது.

எனினும், குறித்த உப பிரதேச செயலகத்தின் கீழ் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை கொண்டு வரும் நோக்கில் எந்தவொரு வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்படவில்லை என அமைச்சு குறிப்பிடுகின்றது.

எவ்வாறாயினும், 2001.02.20ஆம் திகதி வெளியிடப்பட்ட 1172/8ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் கீழ் கிராம சேகவர் பிரிவுகள் அனைத்தும் கல்முனை பிரதேச செயலகத்தின் கீழே காணப்படுவதாக அமைச்சு தெரிவிக்கின்றது.

தகவலறியும் ஆணைக்குழுவினால்  2022.11.03ஆம் திகதி வழங்கப்பட்ட உத்தரவின் பிரகாரம் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உள்நாட்டலுவல்கள் பிரிவின் தகவல் அதிகாரியும், மேலதிக செயலாளருமான பீ.எஸ்.பீ. அபேயகோனினால் 2022.11.28ஆம் திகதி வழங்கப்பட்ட தகவலறியும் விண்ணப்பத்திற்கான பதிலேயே மேற்கண்டாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்முனை பிரதேச செயலகம் மற்றும் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தொடர்பில் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சிற்கு 2021.03.31ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட தகவறியும் விண்ணப்பத்திற்கு பதில் வழங்க முடியாது என 2021.12.14ஆம் திகதி இராஜாங்க அமைச்சு தெரிவித்தது.

"கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தொடர்பில் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைகள் இடம்பெறுகின்றமையினாலேயே குறித்த தகவல்களை வழங்க முடியாது" எனவும் இராஜாங்க அமைச்சு குறிப்பிட்டது.

இதற்கு எதிராக இராஜாங்க அமைச்சின் குறித்தளிக்கப்பட்ட அதிகாரியிடம் 2021.12.22ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட மேன் முறையீடும், மேற்படி காரணத்தின் அடிப்படையில் 2022.01.04ஆம் திகதி நிராகிக்கப்பட்டது.

இதற்கு  எதிராக 2022.01.13ஆம் திகதி தகவலறியும் ஆணைக்குழுவிடம் மேன் முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பான மேன் முறையீடு விசாரணையினை கடந்த 2022.10.19ஆம் திகதி ஆணைக்குழு முன்னெடுத்திருந்தது.

'இந்த விடயம் தொடர்பில் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையினால் இந்த தகவலறியும் விண்ணப்பத்திற்கான பதில் வழங்கப்படவில்லை என அமைச்சு இதன்போது தெரிவித்தது.

இதனையடுத்து குறித்த மனுவின் பிரதியினை சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழு உத்தரவிட்டது. இவ்வாறான நிலையில் குறித்த மேன் முறையீடு தொடர்பான விசாரணைகள் 2022.11.03ஆம் திகதி இடம்பெற்றது.

ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேயரத்ன தலைமையில் அதன் உறுப்பினர்களான ஓய்வுபெற்ற நீதியரசர் ரோஹினி வல்கம், சட்டத்தரணி கிஷாலி பிண்டோ ஜயவர்த்த, சட்டத்தரணி ஜகத் லியனாராச்சி மற்றும் ஓய்வுபெற்ற சிவில் அதிகாரி ஏ.எம். நஹ்யா ஆகியோர் முன்னிலையில் இடம்பெற்றது.

இதன்போது அமைச்சின் பிரதிநிதிகள் எவரும் பங்கேற்றிருக்கவில்லை. இதனால் மேற்படி அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட 300ஃ2018 இலக்க மேன்முறையீட்டு நீதிமன்ற மனுவின் பிரதியின் உண்மைத் தன்மையினை ஆணைக்குழுவினால் உறுதிப்படுத்த முடியாமல் போனது.

அத்துடன், குறித்த மனுவிற்கும், கோரப்பட்ட தகவல் விண்ணப்பத்திற்கும் இடையில் எந்தவித நேடித் தொடர்பும் காணப்படாத நிலையில் இந்த தகவல் கோரிக்கை தொடர்பில் ஆணைக்குழு விரிவாக ஆராய்ந்த போது, பொது அதிகார சபையினால் தகவல் வெளியிடுவதற்கு எந்தவித எதிர்ப்பும் வெளியிடவில்லை.

மாறாக, மேன் முறையீட்டு நீதிமன்றில் உள்ள வழக்கு விசாரணைகள் தொடர்பில் மாத்திரம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமையினால் தகவலறியும் சட்டத்தின் 5 (1)ஆவது பிரிவின் கீழ் எந்தவித வரையறைகளையும் விதிக்காமல் கோரப்பட்ட தகவல்களை 2022.11.25ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு ஆணைக்குழு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.