நட்டத்தில் இயங்கிய போதிலும் மக்களுக்கான சேவையினை தொடரும் நிந்தவூர் பிரதேச சபை

நட்டத்தில் இயங்கிய போதிலும் மக்களுக்கான சேவையினை தொடரும் நிந்தவூர் பிரதேச சபை

முன்னாள் அமைச்சரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்டுப்பாட்டிலுள்ள நிந்தவூர் பிரதேச சபை, கடந்த மூன்று வருடங்களாக நட்டத்தில் (வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை) செயற்படும் விடயம் தகவல் அறியும் விண்ணப்பத்தின் ஊடாக வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் நிந்தவூர் பிரதேச சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல் அறியும் விண்ணப்பத்திற்கு பிரதேச சபையின் தகவல் அதிகாரியான சபைச் செயலாளரினால் வழங்கப்பட்ட தகவலுக்கமையவே இந்த விடயம் வெளிப்பட்டுள்ளது.

இதற்கமைய கடந்த மூன்று வருடங்களில் மக்களின் வரிப் பணத்தின் ஊடாக நிந்தவூர் பிரதேச சபைக்கு ஒரு கோடி 27 இலட்சத்து 27 ஆயிரத்து 977 ரூபாவும் 71 சதமும் வருமானமாகக் கிடைத்துள்ளது.

எனினும், இப்பிரதேச சபையினால் கடந்த மூன்று வருடங்களில் 3 கோடி 6 இலட்சத்து 4 ஆயிரத்து இரண்டு ரூபாவும் 75 சதமும் செலவளிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஒரு கோடி 78 இலட்சத்து 76 ஆயிரத்து 25 ரூபாவும் 04 சதம் நஷ்டம் நிந்தவூர் பிரதேச சபைக்கு கடந்த மூன்று வருடத்தில் ஏற்பட்டுள்ளது.      

இதேவேளை, கடந்த மூன்று வருட காலப் பகுதியில் நிந்தவூர் பிரதேச சபையினால் அமையா ஊழியர்களுக்கான சம்பளத்திற்காக மாத்திரம் 2 கோடி 21 இலட்சத்து 33 ஆயிரத்து 670 ரூபாவும் 75 சதமும் அதிகூடிய செலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் வீதி மின் விளக்கு உபகரணங்களின் கொள்வனவிற்காக 65 இலட்சத்து 53 ஆயிரம் ரூபா கடந்த மூன்று வருடங்களில் நிந்தவூர் பிரதேச சபையினால் செலளிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, திண்மக் கழிவுகளை சேகரித்து அகற்றுவதற்காக இப்பிரதேச சபையினால் கடந்த மூன்று வருடங்களில் 12 இலட்சத்து 56 ஆயிரத்து 928 ரூபா  செலவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

எவ்வாறாயினும், குறித்த நஷ்டத்திற்கு மத்தியிலும் பொதுமக்களுக்காக நிந்தவூர் பிரதேச சபையினால் கடந்த மூன்று வருடங்களில் 30,604,002.25 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

"நிந்தவூர் பிரதேச சபையின் பிரதான வருமானமாக வருமான வரிப் பணமே காணப்படுகின்றது. எனினும் இப்பணம் மக்களுக்கு தேவையான சேவையினை மேற்கொள்ள போதுமானதாக இல்லை" என பிரதேச சபையின் தவிசாளர் அஷ்ரப் தாஹீர் தெரிவித்தார்.

கொவிட் - 19க்கு பின்னர் ஏற்பட்ட பொருளாதார சுமை காரணமாக குறித்த வரிப் பணத்தினை செலுத்துபவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. எனினும் குறித்த நிதியினை சேகரிப்பதற்கான நடவடிக்கையினை பிரதேச சபை முன்னெடுத்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இதற்கு மேலதிகமாக இறைச்சிக் கடைகள் மற்றும் சந்தை ஆகியவற்றினை குத்தகைக்கு வழங்குவதினால் கிடைக்கும் வருமானமும், கொவிட் - 19 பரவலை அடுத்து குறைவடைந்துள்ளதாக தவிசாளர் கூறினார்.

"இது போன்ற காரணங்களினால் பிரதேச சபையின் வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் பொதுமக்களுக்கான சேவையினை வினைத்திறனாக மேற்கொள்ள வேண்டும் என்பதில் எமது பிரதேச சபை உறுதியாக இருக்கின்றது" என அவர் குறிப்பிட்டார்.

இதனால் மக்களுக்கு தேவையான சேவைகளை தொடர்ச்சியாக எந்தவித தடங்களுமின்றி மேற்கொண்டு வருகின்றோம் என  நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் அஷ்ரப் தாஹீர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, பிரதேச சபைகளின் வரவு - செலவுத் திட்டத்தில் பற்றாக்குறை ஏற்படுகின்ற விடயம் பொதுமக்களுக்கு ஒருபோதும் தெரிவதில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினை பயன்படுத்தி கேள்வி கேட்கும் போதே இந்த விடயம் தெரிய வருகின்றது என தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொருளியல் விரிவுரையாளர் எஸ். சந்திரகுமார் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றமொன்றின் எல்லைக்குள் புதிய வரிகளை அறிமுகப்படுத்தல் மற்றும் தற்போதைய வரிகளை அதிகரித்தல் போன்ற செயற்பாடுகளிற்காக வரவு - செலவுத் திட்டத்தில்  பற்றாக்குறையினை காட்டுவதும் வழமையாகும் என அவர் குறிப்பிட்டார்.

எனினும், வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை காணப்படுகின்ற உள்ளூராட்சி மன்றங்கள், அதன் வருமானத்தினை அதிகரிக்கின்ற செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். துறைசார்ந்த நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று இதனை முன்னெடுக்க முடியும் என விரிவுரையாளர் சந்திரகுமார் மேலும் கூறினார்.