சாய்ந்தமருது நகர சபை விவகாரம்: 'அமைச்சரவை தீர்மானத்திற்கமையவே வர்த்தமானி ரத்து'

சாய்ந்தமருது நகர சபை விவகாரம்: 'அமைச்சரவை தீர்மானத்திற்கமையவே வர்த்தமானி ரத்து'

றிப்தி அலி

சாய்ந்தமருது நகர சபை உருவாக்கம் தொடர்பாக வெளியிடப்பட்ட 2162/50ஆம்  இலக்க அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் அமைச்சரவையின் தீர்மானத்திற்கமைய இரத்துச் செய்யப்பட்டுள்ளது என பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்தது.

கடந்த பெப்ரவரி 18ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை தீர்மானித்திற்கமையவே குறித்த வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட்டுள்ளது என பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிக்கு பொறுப்பான மேலதிக செயலாளர் பி.எஸ்.பி. அபேயவர்த்தன தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபை உட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்திற்கு புதிய நகர சபையொன்றினை உருவாக்குவதற்கான அதி விஷேட வர்த்தமான அறிவித்தல் கடந்த பெப்ரவரி 14ஆம் திகதி உள்நாட்டலுவல்கள், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனினால் வெளியிடப்பட்டது.

2001.06.11ஆம் திகதி வெளியிடப்பட்ட 1188/1ஆம் இலக்க அதி விஷேட வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள உத்தரவின் பிரகாரம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள கல்முனை மாநகர சபையின் எல்லைகளை மாற்றியமைப்பதற்கும் புதிய உள்ளுராட்சி நிறுவனங்களை உருவாக்குவதற்குமாக கல்முனை மாநகர சபையினை 2022ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் திகதியிலிருந்து கலைத்துவிடுகிறேன் எனவும் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

புதிதாக உருவாக்கப்பட்ட இந்த சாய்ந்தமருது நகர சபையின் பதவிக் காலம் 2022ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் திகதி முதல் ஆரம்பிக்கும் எனவும் இந்த வர்த்தமானியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் குறித்த வர்த்தமானி அறிவித்தல் தற்போது இரத்துச் செய்யப்பட்டுள்ளது என இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களத்தினால் உத்தியோகபூர்வமாக அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிடும் http://documents.gov.lk/ எனும் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக விடியல் இணையத்தளம் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிடம் விடுத்த வேண்டுகோளிற்கு பதிலளிக்கையிலேயே, "சாய்ந்தமருது நகர சபை உருவாக்கம் தொடர்பாக வெளியிடப்பட்ட 2162/50ஆம்  இலக்க அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல், கடந்த பெப்ரவரி 18ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை தீர்மானித்திற்கமைய இரத்துச் செய்யப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.