தென் கிழக்கு பல்கலைக்கு தகுதி வாய்ந்த அதிகாரி நியமிக்கப்படுவாரா?

தென் கிழக்கு பல்கலைக்கு தகுதி வாய்ந்த அதிகாரி நியமிக்கப்படுவாரா?

"தென் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தகுதி வாய்ந்த அதிகாரி நியமிக்கப்படுவது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது" என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குவின் தலைவரான சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க   விடியல் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.  

பேராதனைப் பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் ஆனந்த ஜயவிக்கிரம, தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் தகுதி வாய்ந்த அதிகாரி நியமிக்கப்படவுள்ளதாக பேஸ்புகில் நேற்று (14) சனிக்கிழமை பல பதிவுகள் பகிரப்பட்டிருந்தன.

இது தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குவின் தலைவரை தொடர்புகொண்டு வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதேவேளை, "தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் தகுதி வாய்ந்த அதிகாரியாக தன்னை நியமிக்கவுள்ளதாக பேஸ்புகில் வெளியான செய்தியில் எந்தவித உண்மையுமில்லை" என பேராதனைப் பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் ஆனந்த ஜயவிக்கிரம தெரிவித்தார்.

இந்த நியமனம் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது. இது தொடர்பில் தன்னுடன் யாரும் கலந்துரையாடவுமில்லை எனவும் அவர் விடியல் இணையத்தளத்திடம் குறிப்பிட்டார்.

இதேவேளை, தென் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தகுதி வாய்ந்த அதிகாரியாக தன்னை நியமிக்குமாறு இந்த பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தர் ஒருவர் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.