வட்டிலப்பம் எடுத்துச்சென்ற விவகாரம்; உள்ளக விசாரணைக்கு உலமா சபையினால் குழு நியமனம்

வட்டிலப்பம் எடுத்துச்சென்ற விவகாரம்; உள்ளக விசாரணைக்கு உலமா சபையினால் குழு நியமனம்

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். றிஸ்வி முப்திக்கு எதிராக உள்ளக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நிறைவேற்றுக் குழுவின் தீர்மானத்திற்கமைய ஜம்இய்யதுல் உலமாவின் உப தலைவர்களில் ஒருவரான அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.றிழா தலைமையில் இந்த விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை தாக்குதல் தொடர்பில் விசாரணகளை முன்னெடுத்துள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு வழங்குவதற்காக, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் றிஸ்வி முப்தி கடந்த 10ஆம் திகதி வட்டிலப்பம் கொண்டு சென்றார் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இதனைத் தொடர்ந்தே, குறித்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து நிறைவேற்றுக் குழுவிற்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காவே இந்த விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினை நியமிப்பது தொடர்பில் ஜம்இய்யதுல் உலமாவின் நிறைவேற்றுக் குழு கடந்த வாரம் ‘சூம்’ தொழில்நுட்பத்தின் ஊடாக கூடியமை குறிப்பிடத்தக்கது. இந்த குழுவின் அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் முன்னாள் உப செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.எம்.முர்சித் முழப்பர், ஆணைக்குழுவுக்கு இரகசியமாக கையடக்கத் தொலைபேசி எடுத்துச் சென்ற விவகாரம் சர்ச்சையைத் தோற்றுவித்ததையடுத்து அவர் பதவி விலகினார்.

அவரது இச்செயற்பாடு குறித்து விசாரிப்பதற்காக உலமா சபை குழுவொன்றை நியமித்துள்ளதாக 10.09.2020 அன்று உலமா சபை வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அவர் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது பற்றி இதுவரை வெளியில் அறிவிக்கப்படவில்லை.  

கடந்த இரண்டு மாத காலப் பகுதிக்குள் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஊடகங்கள் வாயிலாக கடுமையான விமர்சனத்திற்குள்ளானது.  அஷ்ஷெய்க் எம்.எம்.எம்.முர்சித் இரகசியமாக தொலைபேசி கொண்டு சென்றமை, கொவிட் - 19 காரணமாக உயிரிழப்போரை அடக்கம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கிவிட்டது என றிஸ்வி முப்தி குரல் பதிவாக வட்ஸ்அப்பில் அவசரப்பட்டு பகிர்ந்தமை போன்றன காரணமாக கடுமையாக விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையிலேயே தற்போது வட்டிலப்பம் கொண்டு சென்ற விவகாரம் சர்ச்சையை தோற்றுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி: விடிவெள்ளி