பணிநீக்கம் செய்யப்பட்ட ஊடகவியலாளருக்கு நட்டஈடு

பணிநீக்கம் செய்யப்பட்ட ஊடகவியலாளருக்கு நட்டஈடு

லைகா மொபைல் நிறுவனத்திற்குச் சொந்தமான ஆதவன் ஊடக நிறுவனத்திலிருந்து எவ்வித முன்னறிவித்தலும், காரணமும் இன்றி பணிநீக்கம் செய்யப்பட்ட அதன் முன்னாள் செய்தி முகாமையாளர் கலாவர்ஷ்னி கனகரட்ணத்திற்கு இன்று (18) ஒரு மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்கப்பட்டது.

கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் திகதி குறித்த நிறுவனத்தின் உயர்மட்ட பதவிகளில் இருந்த சிலரை பணிநீக்கம் செய்த ஆதவன் நிறுவனம், அது தொடர்பாக எவ்வித காரணத்தையும் தெரிவிக்கவில்லை.

உடனடியாக வேலையிலிருந்து விலக வேண்டும் என அதன் லண்டன் தலைமையகத்தின் பல்வேறு அதிகாரிகளும், கொழும்பு அலுவலகத்தின் அதிகாரிகளும் அழுத்தம் கொடுத்த போதும், உரிய காரணமின்றி பதவி விலக முடியாதென இவர் குறிப்பிட்டார்.

அதன் பின்னர், அலுவலக அனுமதி, செய்தி பதிவேற்றும் தளத்திற்கான அனுமதி என்பன இரத்துசெய்யப்பட்டு பலவந்தமாக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

ஒரு வாரத்தின் பின்னர் ஆதவன் நிறுவனத்திலிருந்து அனுப்பப்பட்ட கடிதத்தில், குறித்த நிறுவனம் பாரிய நிதி நெருக்கடியில் உள்ளதாகவும் அதனால் பணிநீக்கம் செய்ததாகவும் தெரிவித்திருந்தனர்.

இந்த அநீதியான செயற்பாட்டிற்கு எதிராக கொழும்பு - 07, பொரளையிலுள்ள தொழில் நியாயாதிக்கச் சபையில் கலாவர்ஷ்னி வழக்குத் தாக்கல் செய்திருந்தார். அத்தோடு பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினையும் பதிவுசெய்திருந்தார்.

சுமார் 4 வருட காலமாக இந்த வழக்கு நீடித்திருந்த இருந்த நிலையில், ஒரு மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்குவதற்கு கடந்த ஜூன் மாதம் 23ஆம் திகதி லைகா மொபைல் நிறுவனத்திற்குச் சொந்தமான ஆதவன் ஊடக நிறுவனம் ஒப்புக்கொண்டது.

அதன் பிரகாரம் இன்று தொழில் நியாயாதிக்கச் சபையின் தலைவர் முன்னிலையில் குறித்த நட்டஈடு வழங்கப்பட்டது. லண்டனில் தொலைதொடர்பு துறையில் முன்னணி வகிக்கும் லைகா மொபைல் நிறுவனம், இலங்கையில் பென் ஹோல்டிங் உள்ளிட்ட பல நிறுவனங்களை வாங்கியுள்ளதோடு, ஆதவன் தொலைக்காட்சி, ஆதவன் இணையம், ஆதவன் ரேடியோ போன்ற ஊடக தளங்களுக்கு மேலதிகமாக, தமிழ் எப்.எம்., ஒருவன் ஆகிய ஊடக நிறுவனங்களை புதிதாக ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.