எதிர்ப்புகளை சந்திக்கும் பூநகரி குள சூரிய மின் உற்பத்தி திட்டம்

எதிர்ப்புகளை சந்திக்கும் பூநகரி குள சூரிய மின் உற்பத்தி திட்டம்

றிப்தி அலி

கடந்த வருடம் நாட்டில் ஏற்பட்ட மின்சார நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் புதுப்பிக்கத்தக்க சக்திகளின் ஊடாக மின்சார உற்பத்தியினை மேற்கொள்வதற்கான பல திட்டங்களை அமுல்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தற்போது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

"2050ஆம் ஆண்டளவில் இலங்கையில் 100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க சக்திகளின் ஊடாக மின்சார உற்பத்தி மேற்கொள்ளப்படும்" என சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதியினையும் இதன் ஊடாக நிறைவேற்ற அரசாங்கம் முயற்சிக்கின்றது.

இதற்கு தடையாகவுள்ள மின்சார சட்டத்தில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள தற்போதைய அரசாங்கம் பாரிய முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது. இது தொடர்பிலான சட்டமூலத்தினை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் கடந்த நவம்பர் மாதம் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் பாரிய எதிர்ப்புக்கு மத்தியிலேயே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அது மாத்திரமல்லாமல், காற்று மற்றும் சூரியன் ஆகிய புதுப்பிக்கத்தக்க சக்திகளின் ஊடாக நாட்டின் பல பிரதேசங்களில் மின்சார உற்பத்தியினை தனியார் துறையினர் மேற்கொள்வதற்கான அனுமதிகளும் தற்போது அமைச்சரவையினால் வழங்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான நிலையில், வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பூநகரி குளத்தில் சூரிய சக்தி அல்லது மின்கலங்கள் களஞ்சியப்படுத்தல் கருத்திட்டத்திற்கான முதலீட்டுக்கு கடந்த செப்டம்பர் மாதம் அமைச்சரவை அனுமதி வழங்கியது.

இதற்கமைய, 134 மெகாவோட் மின் சக்தியை வழங்குவதற்கு இயலுமான வகையில் இக்குளத்தில் மின்கலங்கள் களஞ்சியப்படுத்தல் தொகுதியுடன் கூடிய 700 மெகாவொட் சூரிய சக்தி மின் நிலையமொன்றை நிறுவுவதற்கான  முன்மொழிவொன்று United Solar Energy SL (PVT) Ltd எனும் கம்பனியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இக்கம்பனி அவுஸ்திரேலியாவின் United Solar Group எனும் நிறுவனத்தின் கீழ் செயற்படுகின்றது.  சுமார் 1,727 மில்லியன் அமெரிக்க டொலர்கள்  முதலீட்டுடன் 100 சதவீத நேரடி வெளிநாட்டு முதலீடாக இந்தக் கருத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது.

அதில் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உள்நாட்டு கருத்திட்ட ஆக்கக்கூறுக்காக பயன்படுத்துவதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக 13.5 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட செலவின் கீழ் கடல் நீர் உட்புகுவதை தடுப்பதற்காக பூநகரி குளத்தைச் சுற்றி 03 அணைக்கட்டுகள் நிர்மாணிக்கப்பட்டு, குறித்த குளத்தை புனரமைப்பதற்கும் இக்கருத்திட்ட கம்பனியினால் முன்மொழியப்பட்டுள்ளது.

இதற்குப் பதிலாக அக்குளத்தின் ஆழமற்ற பிரதேசத்தின் 1,080 ஏக்கரில் 700 மெகாவொட் சூரிய மின்சக்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கு 35 வருட கால குத்தகை அடிப்படையில் உரிய கம்பனிக்கு வழங்குவதற்கு தற்போது வட மாகாண சபையும் வட மாகாண நீர்ப்பாசன திணைக்களமும் கமநல அபிவிருத்தி திணைக்களமும் உடன்பாட்டைத் தெரிவித்துள்ளன.

அதன் பொருட்டு United Solar Energy SL (PVT) Ltd கம்பனியினால் சமர்ப்பிக்கப்பட்ட கருத்திட்ட பிரேரிப்பினை கொள்கை ரீதியில் ஏற்றுக்கொள்வதற்கும் குறித்த பிரேரிப்பின் மதிப்பிட்டு சிபாரிசுகளை முன்வைக்கும் பொருட்டும் வலுசக்தி கொள்வனவு கட்டணங்களைத் தீர்மானிப்பதற்குமாக இணக்கப் பேச்சுக் குழுவொன்றை நியமிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியது.

குறித்த இணக்கப் பேச்சுக் குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள சிபாரிசுகளை அடிப்படையாகக் கொண்டு United Solar Energy SL (PVT) Ltd கம்பனிக்கு உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் அதற்குரியதாக மின்சாரம் கொள்வனவு செய்யும் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கான அங்கீகாரம் அமைச்சரவையினால் கடந்த டிசம்பர் 11ஆம் திகதி வழங்கப்பட்டது.

இதனையடுத்து, குறித்த மின் நிலையம் அமைப்பதற்கு தேவையான பொதுமக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல்களும் காணி மற்றும் சுற்றுல்லா அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோவினால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த சூரிய மின் உற்பத்தி செயற்திட்டத்திற்கு இலங்கை மின்சார சபை மற்றும் எதிர்க்கட்சிகள் பாரிய எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றன. குறிப்பாக விலைமனு நடைமுறையின்றியே இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க அண்மையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போது குற்றஞ்சாட்டியிருந்தார்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் ஒரு அலகு மின்சாரத்தினை சுமார் 50 ரூபா செலுத்தி ஒன்பது வருடங்களுக்கு கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனை விட குறைந்த 22 ரூபாவினைச் செலுத்தி அனல் மின் நிலையத்திலிருந்து ஒரு அலகு மின்சாரத்தினைப் பெற முடியும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, 500 மில்லியன் அமெரிக்க டொலரை முதற் கட்டமாக எதிர்வரும் மார்ச் மாதம் இத்திட்டத்திற்காக இலங்கையில் முதலீடு செய்ய இந்நிறுவனம் தயாராகவுள்ளது.

எனினும், குறித்த நிறுவனத்திடமிருந்து மின்சாரத்தினை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் இதுவரை இலங்கை மின்சார சபையினால் இறுதி செய்யப்படவில்லை.

அத்துடன், அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பில் இதுவரை மின் சக்தி அமைச்சின் செயலாளரினால் இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளருக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த அமைச்சின் செயலாளர் இன்னும் சில நாட்களில் குறித்த பதவியில் இருந்து ஓய்வுபெறவுள்ளார். அமைச்சரவையின் அனுமதிக்காக இந்த திட்டத்தினை சமர்ப்பிதற்கு முன்னர், குறித்த இரண்டு தரப்பினரும் கொள்வனவு தொடர்பான ஒப்பந்த்தில் கைச்சாத்திட்டிருக்க வேண்டும் என இலங்கை மின்சார சபையின் தொழிற் சங்கங்கள் தெரிவித்து வருகின்றன.

இதனால், குறித்த அமைச்சரவை தீர்மானம் சட்ட ரீதியற்றதாகும். இந்த அமைச்சரவை தீர்மானம் தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாக பெயர் குறிப்பிட்ட விரும்பாத இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

அத்துடன் குறித்த மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் ஒரு அலகு மின்சாரத்தினை 50 ரூபாவிற்கும் 70 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலையில் கொள்வனவு பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த குற்றச்சாட்டினை நிராகரித்த மின் சக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர, ஒரு அலகு மின்சாரம் 49 ரூபாவிற்கே கொள்வனவு செய்யப்படும் என்றார்.

இந்த செலவில் சோலார் பேனல்கள் மட்டுமின்றி, இரவில் பயன்படுத்த சூரிய சக்தியை சேமித்து வைப்பதற்கான பேட்டரி ஆற்றல் சேமிப்பும் அடங்கும் என்று அவர் வலியுறுத்தினார்.

இதேவேளை, டீசல் மற்றும் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் வாயிலாக இலஞ்சம் பெற்றுக்கொள்ள கூடியதாக இருந்தாலும், சூரிய மற்றும் காற்றாலை வேலைத்திட்டங்களின் ஊடாக இலஞ்சம் பெற முடியாது என்பதாலேயே அவ்வாறான திட்டங்களுக்கு சில மின்சார சபையின் பொறியியலாளர்களினால் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இத்திட்டத்தின் மூலம் ஆசியாவின் மிகப் பெரிய சூரிய சக்தி கட்டமைப்பு  முதன் முறையாக இலங்கைக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம், ஏரியொன்றை அமைத்து 20,000 ஏக்கரில் மீண்டும் கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயம் செய்ய வாய்ப்பு உள்ளது எனவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், இந்த திட்டத்தினை முன்னெடுப்பதற்கு கிளிநொச்சி மாவட்ட மக்களும் பாரிய எதிர்ப்பினை மேற்கொண்டு வருகின்றர். இந்த மின் நிலையத்தின் ஊடாக கிளிநொச்சி மாவட்டத்தின் சுற்றுசூழலுக்கும் பாரிய பாதிப்பு ஏற்படும் என குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இதேவேளை, குறித்த செயற்திட்டத்தினை மேற்கொள்ள பூநகரி தெரிசெய்யப்பட்டமைக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை என வவுனியா பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், சூழலியலாளருமான கலாநிதி எஸ். விஜயமோகன் தெரிவித்தார்.

இதனால், இப்பிரதேசம் தெரிவுசெய்யப்பட்டமைக்கான காரணம் முதலில் மக்கள் மயப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இந்த செயற்த்திட்டம் எமது பிரதேச மக்களுக்கு புதிய விடயம் என்பதனால், இது தொடர்பில் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் பின்னரே குறித்த செயற்திட்டத்தினை ஆரம்பிப்பது சிறப்பாக இருக்கும் என சூழலியலாளர் கலாநிதி விஜயமோகன் கூறினார்.

"இந்த திட்டத்தின் ஊடாக பூநகரி குளத்திற்கு இதுவரை இலவசமாக கிடைக்கப் பெற்று வந்த சூரிய சக்தியை மின் சக்தியாக மாற்றப்பட்டவுள்ளது. இதன் காரணமாக சூரிய சக்தியினால் இதுவரை நடந்த வேலைகள் எதுவும் இனிமேல் நடைபெறாது" என அவர் குறிப்பிட்டார்.

"இதனால், இக்குளத்தினை அண்டியுள்ள சூழல் தொகுதிகள் குறித்த சக்தியினை இழப்பதனால் அவை அனைத்தும் அழிந்து விடும். இது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்" எனவும் அவர் தெரிவித்தார்.

எமது நாட்டுக்கு அபிவிருத்தி அவசியமாகும். இதனால் சிலவற்றினை இழக்கத் தான் வேண்டும். ஆனால் இந்த சூரிய மின் உற்பத்தி செயற்திட்டத்தினால் கிடைக்கும் நன்மையினை விட இழப்பே அதிகமாகும் என வவுனியா பல்கலைக்கழக விரிவுரையாளர் கூறினார்.

அத்துடன், இக்குளத்தின் அடிப்படை உற்பத்தி அளவு குறைவான இடத்தில் தான் சூரிய கலத்தினை போட வேண்டும். மாறாக அடிப்படை உற்பத்தி அதிகமாக உள்ள இடத்தில் சூரிய கலத்தினை போட்டால் சூழல் தொகுதிகளுக்கு பாரிய பாதிப்பு ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான காரணங்களினால், குறித்த செயற்திட்டத்தினை கைவிட்டுவிட்டு வீட்டுக் கூரையின் மேல் சூரிய கலத்தினை பொருத்தி மின்சார உற்பத்தினை மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்" என சூழலியலாளர் கலாநிதி விஜயமோகன் வேண்டுகோள் விடுக்கின்றார்.

இவ்வாறு பல்வேறு சவால்களை எதிர்நோக்கியுள்ள பூநகரி குள சூரிய மின் உற்பத்தி தொடர்பில் அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டியது காலத்தின் தேவையாகும்.

அத்துடன், இது போன்ற பாரிய செயற்திட்டங்களை முன்னெடுக்கும் போது அதனுடன் தொடர்புடைய தரப்பினரின் ஆலோசனைகளை பெறுவதுடன் விரிவான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.