மூத்த கல்விமான் கலாநிதி சுக்ரி காலமானர்

மூத்த கல்விமான் கலாநிதி சுக்ரி காலமானர்

பேருவளை ஜாமியா நளீமிய்யா கலாபீடத்தின் பணிப்பாளரும் தலைசிறந்த மூத்த கல்விமானாகியுமான கலாநிதி எம்.ஏ. சுக்ரி இன்று (19) செவ்வாய்க்கிழமை கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் காலமானார்.

இவரின் ஜனாஸா தொழுகை தெஹிவலை, களுபோவில ஜும்ஆ பள்ளிவாசலில் கலாபீடத்தின் பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.சீ. அஹார் முகம்மத்தினால் நடத்தப்பட்டது.

15 பேர் மாத்திரம் அனுமதிக்கப்பட்ட ஜனாஸா தொiழுகையில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தற்போது ஜனாஸா அவரின் சொந்த ஊரான மாத்தறைக்கு கொண்டு செல்லப்பட்டு மக்ரிப் தொழுகையின் பின்னர் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

அறிவுத் தந்தை நளீம் ஹாஜியாரோடு இணைந்து நளீமிய்யாவை ஸ்தாபிப்பதிலும் அதனை வளர்ப்பதிலும் சர்வதேச அந்தஸ்துக்கு அதனை உயர்த்துவதிலும் இலங்கையில் நடுநிலை சிந்தனையை அறிமுகப் படுத்துவதிலும் பெரும் பங்களிப்புச் செய்த கல்விமான் அறிஞர் கலாநிதி சுக்ரியாவார்.

அவர்களது ஆற்றொழுக்கான உரைகளும், ஆழமான கருத்துக்கள் கொண்ட எழுத்துக்களும், பரந்த சிந்தனையும் இலங்கை முஸ்லிம்களது வரலாற்றில் தடம் பதித்திருக்கின்றன. இவர், தனது கலாநிதிப் பட்டத்தை Edinburgh பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்துள்ளார்.

இவரின் மறைவினால் அறிவும், ஆன்மிகமும், அந்தஸ்தும், நல்லொழுக்கமும், எளிமையும், பணிவும் நிரம்பப் பெற்ற ஒரு கல்விமானை முஸ்லிம் சமூகம் இன்று இழந்து நிற்கிறது.

எத்தனையோ பெரிய பதவிகள், சலுகைகள் தன்னைத் தேடிவந்த போதும் ஜாமிஆ நளீமியாவிற்காக அர்ப்பண சேவையாற்றியவர் இவர்.

ஜாமிஆ நளீமிய்யாவின் வளர்ச்சிக்கு நளீம் ஹாஜியார் எந்தளவிற்கு பொருளாதார பங்களிப்புக்களை செய்தாரோ அதே அளவிற்கு கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அறிவியல் பங்களிப்புக்களை வழங்கி இருந்தார்.

ஜாமியா நளீமியாவுடன் மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் இலங்கை முஸ்லிம்களின் ஒட்டுமொத்த கல்வித்துறையிலும் பாரிய பங்களிப்பினை இவர் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.