போதைப்பொருளினை இல்லாதொழிக்க அனைவரும் ஒன்றுபடுவோம்

போதைப்பொருளினை இல்லாதொழிக்க அனைவரும் ஒன்றுபடுவோம்

அறிவும், செல்வமும், இயற்கை வளமும் இஸ்லாமிய வாழ்க்கை வழிமுறையும் கொண்ட முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பூமியாக கல்முனை மாநகர் உள்ளது.

தமிழ் மற்றும் சிங்கள் மக்களுடன் நல்லுறவுகளோடு கௌரவமாக வாழும் இந்த பிரதேசத்தில் பல அரசியல் தலைவர்களும், புத்திஜீவிகளும், உலமாக்களும், தனவந்தர்களும் வாழ்ந்து வருகின்றனர்.

கொரனா பேரிடர் காரணமாக வாழ்வாதாரங்களை இழந்து புனிதமிகு ரமழான் மாதத்தில் மார்க்க கடமைகளை நிறைவேற்ற முடியாத நிலையில் பல துன்பங்களை அனுபவித்து வீடுகளில் இருந்து கொண்டு இறைவனிடம் அழுது துஆ கேட்ட வண்ணம் மக்ககள் நாட்களை கழித்து கொண்டிருக்கின்றனர்.

இந்த புனிதமிகு ரமழான் மாதத்தில் தௌபாக்களில் ஈடுபட வேண்டிய முஸ்லிம் என்று கூறிக்;கொள்ளும் சில ஆண்களும், பெண்களும் சிறைச்சாலை சென்றிருப்பது மனவேதனையையளிக்கிறது.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கல்முனையில் போதைப்பொருள் விற்பனை செய்யும் சில பகுதிகளில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடி படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் சில பெண்களும், ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புனிதமிகு ரமழான் மாதத்தில் இவ்வாறான தொழிலில் ஈடுபட்டிருப்பது கவலையளிக்கிறது. போதைப்பொருள் வியாபாரத்தை இல்லாது ஒழிப்பது என்றால் சமுகத்திலுள்ள உலமாக்கள், புத்திஜீவிகள், அரசியல் தலைவர்கள் மற்றம் வசதி படைத்தவர்கள் என அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.

'ஒரு முஸ்லிம் காலையில் எழும்பும் போது சமூகத்தைப் பற்றி சிந்திக்கவில்லை எனின் உண்மை முஃமீனாக மாற முடியாது' என்ற நபிமொழிக்கமைய நாம் எல்லோரும் போதைப் பொருளற்ற சமூகத்தை உருவாக்க சிந்தித்து செயற்பட வேண்டும்.

அத்துடன் போதைப் பொருள் ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படையினருக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்க வேண்டியது எம்மனைவரினதும் கடப்பாடாகும்.

புனித ரமழான் மாதத்தின் இறுதிப் பத்தில் இருக்கும் நாம், போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கும், அதற்கு உடந்தையாக இருப்பவர்களுக்கும், அதனைப் பாவிப்பவர்களுக்கும் அல்லாஹ் நேர்வழியைக் காட்டி அதிலிருந்து மீண்டு வர இறைவனிடத்தில் இரு கரம் ஏந்தி பிரார்த்திப்போம்.

என். முஹமட் நௌஸாத்
உளவளத்துணையாளர், கல்முனை