அநியாயமாக எரிக்கப்பட்ட ஜனாஸா; குடும்பத்திற்கு நீதி கிடைக்குமா?

அநியாயமாக எரிக்கப்பட்ட ஜனாஸா; குடும்பத்திற்கு நீதி கிடைக்குமா?

றிப்தி அலி

"நெஞ்சு வலி என்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட எனது உம்மா கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டு புனித ரமழான் மாதத்தில் தகனம் செய்யட்டார்.

எனினும், அவர் கொரோனா வைரஸினால் உயிரிழக்கவில்லை என சில அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இன்று வரை எனது தாயின் மருத்துவ அறிக்கைகள் எதுவும் எமக்கு வழங்கப்படவில்லை.

இந்த பொய்யான அறிவிப்பினால், எதிர்பாராதா பல்வேறு சொல்லெண்ணாத் துயரங்களை கடந்த ஒரு வார காலமாக எனது குடும்பம் அனுபவித்து வருகின்றது. இன்று நானும் தொழிலினை இழந்து தவிக்கிறேன். கர்ப்பிணியான எனது மனைவி தலைப் பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்குளி என்றவுடன் அப்பாவியான எனது மனைவி கொரோனா வைரஸ் தொற்றாள்களை தனிமைப்படுத்தும் வார்ட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனது மனைவினைப் பார்ப்பதா அல்லது இழந்துள்ள தொழிலினை மீளப் பெற முயற்சிப்பதா என்று தத்தளித்துக் கொண்டிருக்கிறேன். இவற்கெல்லாம்  நீதி தேடுகிறது எம குடும்பம்".

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட பாத்திமா றினோசாவின் இரண்டாவது புதல்வாரன முஹம்மத் சபீக் முஹம்மத் சப்ரியின் உள்ளக் குமுறலே இவையாகும்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய முதலாலது நோயாளி கடந்த மார்ச் 10ஆம் திகதி இலங்கையில் அடையாளம் காணப்பட்டதிலிருந்து நேற்று (14) வியாழக்கிழமை பிற்பகல் 1.00 மணி வரை 915 பேருக்கு இந்த வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளது.

இதில் 445 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். "கடந்த மே 5ஆம் திகதி இடம்பெற்ற ஒன்பதாவது மரணம், கொழும்பு – 15, மட்டக்குளி பிரதேசத்தினைச் சேர்ந்த 52 வயதான பெண்மணி" என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அனில் ஜயசிங்கவினை மேற்கோள் காட்டி அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாலக களுவேவ உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.

சுகாதார அமைச்சினால் மரணமானவரின் பெயர் உத்தியோகபூர்வமாக  அறிவிக்கப்பட்டாத நிலையில் சமூக ஊடகங்களின் வாயிலாக பாத்திமா றினோசா என அறிய முடிந்தது. 1976ஆம் ஆண்டு பிறந்த பாத்திமா றினோசா 1991ஆம் ஆண்டு மே நடுப் பகுதியில் முஹம்மத் சபீக் என்பவரை மண முடித்துள்ளார்.

இவர்கள் இருவருக்கும் நான்கு ஆண் பிள்ளைகளும் இரண்டு பெண் பிள்ளைகளும் உள்ளனர். இதில் மூவர் உலமாக்களாவர். இவர்களின் 19ஆவது வருட திருமண பூர்த்தியினை இந்த மாதம் கொண்டாடவுள்ள நிலையிலேயே இவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

"அரசாங்கம் அறிவித்தது போன்று தனது மனைவிக்கு 52 வயதில்லை. அவர் 44 வயதிலேயே உயரிழந்தார்' என அவரது கணவரான ஆட்டோ சாரதி முஹம்மத் சபீக் தெரிவித்தார்.
'கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக நெஞ்சு வலி காரணமாக தேசிய வைத்தியசாலையில் மனைவியினை நானே அனுமதித்தேன். அதன்போது, மனைவியினை கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் விடுதியில் வைத்தே சிகிச்சை வழங்கியுள்ளனர்.

எங்களுக்கு ஆங்கிலம் எதுவும் தெரியாமையினால் இந்த விடயமும் தெரியாமலிருந்தது. இந்த நிலையில் கடந்த மே 5ஆம் திகதி மனைவி உயிரிழந்தாhக அறிவிக்கப்பட்டது" என அவர் கூறினார்.

இதனையடுத்து, மனைவியின் ஜனாஸாவினை கணவர் என்ற அடிப்படையில் தனக்கோ, பிள்ளைகளுக்கோ கூட காட்டப்படாமலே தகனம் செய்யப்பட்டது' என அழுது கொண்டவாரே முஹம்மத் சபீக் குறிப்பிட்டார்.

"மனைவியின் உயிரிழப்பினை அடுத்து எமது குடும்பத்தினை கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமிற்கு அதே தினம் பி.ப 3.30 மணியளவில் அழைத்துச் சென்றனர். இரவு 10.30 மணியளவில் அங்கு சென்ற எம்மை இராணுவத்தினர் நன்றாக வரவேற்றனர்.

மறு நாள் நண்பகல் வேலையில் அங்கு நாம் தொழுகைக்காக தயாரான போது, உங்களுக்கு கொரோனா தொற்றில்லை. வீடு செல்லத் தயாராகுமாறு அதிகாரியொருவர் அறிவித்தார்" எனவும் கூறினார்.

"இதனால் மே 7ஆம் திகதியே நாம் வீடு திரும்பிவிட்டோம். எனினும் இன்று வரை வீட்டில் சுய தனிமைப்படுத்தலிலேயே உள்ளோம். ஐ.டி.எச். வைத்தியசாலையின் அறிக்கை வரும் வரை நாங்கள் சுய தனிமைப்படுத்தில் இருக்க வேண்டும் எமது பிரதேசத்திற்கு பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

நான் கூலிக்கு முச்சக்கர வண்டி ஓட்டுபவர். இந்த சம்பவத்தினால் தொழில் எதுவுமின்றி வீட்டிலேயே முடங்கியுள்ளேன். எமது குடும்பத்திற்கு ஏற்பட்ட நிலை வேறு எவருக்கும் ஏற்படக்கூடாது" என அழுதுகொண்டே அவர் கூறினார்.

கொழும்பு, தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாத்திமா றினோசா, கொரோனா வைரஸ் தொற்றாளர் எனத் தெரிவித்து ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு வைத்தே அவர் உயிரிழந்துள்ளார்.

அவருடைய ஜனாஸாவினை அவரின் இரண்டாவது புதல்வாரன முஹம்மத் சபீக் முஹம்மத் சப்ரி மற்றும் அவருடைய நண்பரொருவர் ஆகியோருக்கு மாத்திரமே காண்பிக்கப்பட்டுள்ளது.

திருமணமாகிய சப்ரி, மனைவியின் குடும்பத்தாருடன் இடத்தில் வசிப்பதனாலேயே குடும்பத்தில் அவருக்கு மாத்திரம் ஜனாஸாவை பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது.
"வைத்தியசாலையில் தன்னிடம் பலத்தகாரமாக கையொழுத்து பெறப்பட்ட பின்னரே உம்மாவின் ஜனாஸா தகனம் செய்யப்பட்டது" என சப்ரி கூறினார்.

"எனினும் உம்மாவிற்கு கொரோனா தொற்றில்லை என ஊடகங்கள் வாயிலான அறிவிக்கப்பட்டதை பார்த்தோம். அதிகாரிகள் செய்த தவறின் காரணமாக இன்று நான் தொழிலினை இழந்து தவிப்பதுடன் எனது குடும்பம் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளது" என அவர் குறிப்பிட்டார்.

"உம்மாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதால் தனக்கு கொரோனா ஏற்பட்டிருக்கு வாய்ப்புள்ளது. இதனால் எனக்கு கொரோனா தொற்றில்லை என உறுதிப்படுத்தி பொதுச் சுகாதார பரிசோதகரிடமிருந்து அறிக்கையொன்றினை பெற்று வருமாறு நான் பணிபுரியும் இடத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அது மாத்திரமல்லாமல் எனக்கு உதவிக்காக வந்த நண்பரும், அவரின் குடும்பத்தினரும் இன்று சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்" என சப்ரி மேலும் தெரிவித்தார்.

இந்த நிலையில், யாரும் எதிர்பாராத அதிர்ச்சியான தகவலொன்றினை இலங்கை மருத்துவ ஆய்வக விஞ்ஞான சங்கத்தின் தலைவரான ரவி குமுதேஷ் ஊடகங்களுக்கு கடந்த வாரம் வழங்கியிருந்தார்.

அதாவது, கடந்த மே 5ஆம் திகதி கொரோனா வைரஸ் என அடையாளம்  காணப்பட்டு உயிரிழந்த மட்டக்குளி பெண்மனிக்கு கொரோனா தொற்றில்லை என்பதே அந்த அறிவிப்பாகும்.

அது மாத்திரமல்லாமல் குறித்த தினம் கொரோனா தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்ட ஏனைய மூவருக்கும் கொரோனா தொற்றில்லை எனவும் குறித்த அறிவிப்பில் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர், உயிரிழந்த மட்டக்குளி பெண்மனி, கொலன்னாவ - சாலமுல்ல பிரதேசத்தவர் ஒருவர் மற்றும் ராஜகிரிய - பண்டாரநாயக்கபுர பிரதேசத்தவர் ஒருவர் ஆகியோருக்கே கொரேனா தொற்று என சுகாதார அமைச்சினால் உத்தியோகபூர்வமாக கடந்த மே 5ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் மறுநாள் 6ஆம் திகதி உயிரிழந்த மட்டக்குளி பெண்மனி தவிர்ந்த ஏனைய மூவருக்கும் கொரோனா தொற்றில்லை என சுகாதார அமைச்சு அறிவித்திருந்தது.

எனினும் உயிரிழந்த பாத்திமா றினோசா தொடர்பில் சுகாதார அமைச்சினால் எந்தவித அறிவிப்பும் மேற்கொள்ளாத நிலையிலேயே இலங்கை மருத்துவ ஆய்வக விஞ்ஞான சங்கத்தின் தலைவரான ரவி குமுதேஷ் இந்த தகவலினை வழங்கியிருந்தார்.

அவரின் இந்த அறிவிப்பு வெளியாகி தற்போது ஒரு வாரங்கள் கடந்துள்ள நிலையில் சுகாதார அமைச்சினாலோ அல்லது சுகாதார அமைச்சர் பவித்ரான வன்னியாராச்சியனாலே அல்லது சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அனில் ஜயசிங்கவினால் இதுவரை இதற்கு பதிலறிக்கை எதுவும் வழங்கப்படாமல் மௌனம் காக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரை நாம் தொடர்புகொண்டு வினவிய போதும், அவர்கள் இது தொடர்பில் கருத்துக் கூற மறுத்து விட்டனர். இவ்வாறு அநியாயமாக தகனம் செய்யப்பட்ட பாத்திமா றினோசாவின் ஜனாஸாவிற்கு எதிராக எவ்வாறு சட்ட நடவடிக்கை எடுப்பது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கின்றனர் அவருடைய கும்பத்தினர்.

இதேவேளை, இவ்வாறு பெண் ஒருவரது சடலம் எரிக்கப்பட்டமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறித்த பெண்ணின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வகையில் கொரோனா தொற்று இல்லாத நிலையில் அநியாயமான முறையில் எரிக்கப்பட்ட மேற்படி பெண்ணின் ஜனாஸா விடயத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டியது அனைவரதும் கடப்பாடாகும்.