வரலாற்றில் ஒளிர்ந்த ஒர் அற்புத ஆளுமை ஹனீபா (பஹ்ஜி) ஆலிம்

வரலாற்றில் ஒளிர்ந்த ஒர் அற்புத ஆளுமை ஹனீபா (பஹ்ஜி) ஆலிம்

வரலாற்றில் மலர்ந்த சில ஆளுமைகள் மறைந்தாலும் மனித உள்ளங்களில் என்றுமே மணம் வீசுகின்றனர். அவ்வரிசையில் மிளிர்ந்தவர்கள்தான் ஹனீபா பஹ்ஜி ஆலிம் அவர்கள்.

1938ஆம் ஆண்டு கேகாலை மாவட்டத்தில் ஹெம்மாதகம தும்புலுவாவ எனும் எழில்மிகு கிராமத்தில் இப்ராஹிம் ஆலிம் சாஹிப் மற்றும் கதீஜா நாச்சியார் என்பவர்களுக்கு மகனாகப் பிறந்த அவர் மார்க்கப்பற்று நிறைந்த 11 பேர் கொண்ட குடும்பத்தில் இரண்டாவது பேருமாவார்.

இலங்கை ஆலிம்கள் வரலாற்றில் 5ஆவது தலைமுறையும் ஆலிம்களால் தடம்பதிக்கும் குடும்பமாக அன்னாரது குடும்பம் திகழ்வது குறிப்பிடத்தக்க அம்சமாகும். தனது ஆரம்ப பாடசாலை கல்வியை ஹெம்மாதகம ஹிஜ்ராகம அல்-அஸ்ஹர் கல்லூரியில் தொடர்ந்தார்.

சிறு வயதிலே விவேகம், துடிதுடிப்பு, ஆழ்ந்த மனனசக்தி போன்ற திறமைகள் அன்னாரது எதிர்காலம் ஜொலிக்க இருக்கின்றது என்ற நற்செய்தியை அன்றே புடம் போட்டுக் காட்டியது. தனது தந்தை இப்ராஹிம் ஆலிம் சாஹிப் அவர்களின் நேரிய வழிகாட்டலில் காலி கோட்டை பஹ்ஜதுல் இப்ராஹீமிய்யா அரபுக் கல்லூரியில் ஷரீஆ கற்கைக்காக இணைந்து கொண்டார்.

தனது ஆலிம் கற்கை நெறியை நிறைவு செய்தபின் உடுனுவர கெடகும்பர பள்ளிவாயலில் தனது தகப்பனாரால் ஸ்தாபிக்கப்பட்ட மத்ரஸதுர் ரப்பானிய்யாவின் முதன்மை உஸ்தாதாகவும் செயற்பட்டார். 1973 மற்றும் 1974 ஆம் ஆண்டுகளில் அட்டாளச்சேனை ஆசிரியர் பயிற்றுனர் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்த ஓர் பட்டதாரியுமாவார்.

மேலும் மௌலவி ஆசிரியர் சான்றிதழ் பரீட்சையில் சிறப்புச் சித்தி பெற்ற அவர் தெல்லங்க அஸ்ஸிராஜ் மகா வித்தியாலயம் கடுகண்ணாவ மத்திய கல்லூரி மற்றும் அல்-மனார் தேசிய பாடசாலை ஆகியவற்றில் இரண்டு தசாப்த காலம் சேவையாற்றி பல்லாயிரம் பாடசாலை மாணவர்களை கொண்ட கல்விசார் சமூகம் ஒன்றை உருவாக்கிய முன்மாதிரிமிக்க ஆசிரியரும் ஆவார்.

1968ஆம் ஆண்டு எலமல்தெனிய அப்துர்ரஹ்மான் லெப்பை ஸவ்தா உம்மா தம்பதியரின் அன்பு மகள் ரஹ்மத் பீபியை மணமுடித்து திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட ஹனீபா ஆலிம் அவர்கள் 8 பிள்ளைகளின் தகப்பனும் ஆவார்.

வரலாற்றில் சமூகத்திற்கு வரமாக தனது குழந்தைகளை அவதரித்தார் என்ற பெருமை அவரையே சாரும். பிரபல தஃவா பேச்சாளரும் ஸம்ஸம் நிறுவனத்தின் பணிப்பாளருமான அஷ் ஷேஹ் முப்தி யூசுப் ஹனீபா, தஸ்கர அல் ஹக்கானிய்யா அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷேஹ் லபீர் ஹனீபா, சிரேஷ்ட ஹதீஸ் உயர் கற்கை விரிவுரையாளர் அஷ்ஷேஹ் இன்ஸாப் ஹனீபா மற்றும் ஜமாலிய்யா அரபுக் கல்லூரியின் நிர்வாக உறுப்பினரும் தஃவா அழைப்பாளருமாகிய இனாம் ஹனீபா ஆகியோர் அன்னாரது அன்பு புதல்வர்கள் என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

முன்மாதிரிமிக்க தகப்பனுக்கு கலங்கரை விளக்கு போல் அவர்கள் திகழ்ந்தமை அன்னாரது சீரிய பயிற்சிப் பாசறைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். 1987ஆம் ஆண்டு கொழும்பு மர்கஸ் மத்ரஸதுர் ரஷாத் அரபுக் கல்லூரியில் ஒரு வருடம் பணியாற்றிய உஸ்தாதுமாவார்.

1999ஆம் ஆண்டு பல்வகைமை கொண்ட ஆலிம்கள் எனும் ஆளுமைகளை சமூகத்திற்கு அறுவடை செய்ய வேண்டும் என்ற நன்நோக்கில் 21 மாணவர்களோடு தஸ்கர அல் ஹக்கானிய்யா அரபுக்கல்லூரியை ஸ்தாபித்தார். அல்லாஹ்வின் அருளால் தற்போது இலங்கையின் மிகப் பெரும் அரபுக்கல்லூரியாக பரிணமித்திருப்பது அன்னாரது உயர் இஹ்லாஸ் எனும் மனத்தூய்மை என்றால் அது மிகையாகாது.

அனைத்து பாடங்களிலும் முதிர்ச்சியும் தேர்ச்சியும் பெற்ற அவர் இறுதி மூச்சு வரை தனது வாழ்வை இல்முக்காகவே அர்ப்பணித்தார். இஸ்லாமிய அழைப்புப் பணிக்காக பல நாடுகள் பயணம் செய்து பல்லாயிரம் அழைப்பாளர்களை உருவாக்கிய ஹனீபா பஹ்ஜி ஆலிம் அவர்கள் இலங்கையின் தப்லீக் அழைப்புப் பணியின் சூரா சபை முக்கிய உறுப்பினராகவும் செயற்பட்டார்.

நபிகளாரின் அடிச்சுவட்டுக்களை அனுவும் பிசகாது பின்பற்றிய அவர் ஷமாஇலுத் திர்மிதி எனும் நபிகளாரின் வர்ணணைகள் பற்றிய கிரந்தத்தை கண் கலங்கக் கற்றுக்கொடுத்த ஆசானுமாவார். எப்போதும் தலைப்பாகை அணிந்த வதனமும் நிறைந்த தாடியும் அன்னாரது முகத்தின் பிரகாசத்தை மேலும் இலங்கச்செய்தது.

40 வருடங்களாக தஹஜ்ஜுத் எனும் உயர் வணக்கத்தை மறவாமல் தொழுதவர், திங்கள் வியாழன் விடாமல் நோன்பு நோற்றவர், ஸூரா வாகிஆவை பல்லாண்டுகளாக தவறாமல் ஓதியவர் மட்டுமல்லாது இந்த ரமழானில் 15 குர்ஆன் களை பூர்த்தி செய்தவர் என்ற செய்திகள் எம்மை மெய்சிலிர்க்க வைப்பது மட்டுமல்லாது அன்னார் இந்தளவிற்கு ஆத்மீகத்திலும் உயர்ந்திருந்தார் என்பதை படம் பிடித்துக் காட்டுகின்றது.

கம்பீரம் நிறைந்த பேச்சு, புன்முறுவல் பூத்த வதனம், வாரிவழங்கும் பரோபகாரம், வந்தோரை உபஷரிக்கும் விருந்தோம்பல், மனிதர்களின் குறைகளை மறைத்தல், தயாளத்தன்மை மற்றும் மனிதநேயம் போன்ற மனிதத்துவத்தின் மாண்புகள் அன்னாரது வாழ்வின் அனிகலன்களாக அலங்கரித்தன.

சுருங்கக் கூறின் அவர் ஒரு மனிதப் பழம். ஹனீபா பஹ்ஜி ஆலிம் அவர்களால் உருவாக்கப்பட்ட பல நூறு மாணவர்கள் முஸ்லிம் சமூகத்தின் மறுமலர்ச்சிக்காக காத்திரமான சேவைகளை ஆற்றுகின்றமை முக்கிய அம்சமாகும்.

பல்லாயிரம் மனித உள்ளங்களில் நீங்காத இடம் பிடித்த தன்னிகரற்ற சன்மார்க்க ஜோதி ஹனீபா பஹ்ஜி ஆலிம் அவர்கள் 04.06.2020 (வியாழக்கிழமை) வபாத்தானார்கள். அன்னாரது மறைவு இலங்கை வாழ் முஸ்லிம்களால் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

வின்னிலே ஒளிர்ந்த தாரகை ஒன்று மறைந்தது.
உங்கள் பிரிவால் முழு உலகமுமே கண்ணீர் சிந்துகின்றது.

யா அல்லாஹ்! அன்னாரது மண்ணறையை பொண்ணறையாக ஆக்கி உயர் சொர்க்கத்தின் சொந்தக்காரராக ஆக்கி வைப்பாயாக!

ஆமீன்

அரபாத் ஸைபுல்லாஹ் (ஹக்கானி)
திஹாரி