மட்டக்களப்பு கொம்பஸ் விவகாரம்; அரசுடன் இணைந்து செயற்பட தயார்: ஹிஸ்புல்லாஹ்

மட்டக்களப்பு கொம்பஸ் விவகாரம்; அரசுடன் இணைந்து செயற்பட தயார்: ஹிஸ்புல்லாஹ்

மட்டக்களப்பு கொம்பஸினை ஒருபோதும் அரசாங்கத்தினால் சுவீகரிக்க முடியாது. எனினும் இந்த விவகாரத்தில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட எப்போதும் தயாராக இருப்பதாக கொம்பஸின் ஸ்தாபகரான கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இந்த பல்கலைகழகத்தின் முகாமைத்துவ செயற்பட்டில் 50:50 என்ற அடிப்படையில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு - 03, கொள்ளுப்பிட்டியில் மட்டக்களப்பு கொம்பஸ் விவகாரம் தொடர்பில் நேற்று (30) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

"சவூதி அரேபியாவின் ஜித்தா நகரினை தளமாகக் கொண்டு செயற்படும் அல் ஜுபைல் நன்கொடை மன்றத்தின் ஊடாகவே இந்த பல்கலைக்கழக நிர்மணத்திற்கான நிதியுதவி கிடைக்கப்பெற்றது.

குறித்த அமைப்பினால் உலகிலுள்ள பல நாடுகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக நிதியுதவி வழங்கப்படுகின்றது. அந்த அடிப்படையிலேயே இலங்கையில் மட்டக்களப்பு கொம்பஸினை குறித்த அமைப்பு தெரிவுசெய்தது.

இந்த அல் ஜுபைல் நன்கொடை மன்றம் சவூதி அரேபியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பு என சில பொய்ப் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். குறித்த அமைப்பினை சவூதி அரசாங்கம் ஒரு போதும் தடை செய்யவில்லை.

இந்த நிதியுதவி குறித்த அமைப்பினால் வட்டியின்றி இலகு கடன் அடிப்படையில் வழங்கப்பட்டது. இந்த நிதியினை பல்கழைக்கழக கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட திகதியிலிருந்து ஐந்து வருடங்களின் பின்னர் 15 வருடங்களுக்குள் செலுத்தி முடிக்க வேண்டும்.

இந்த அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நிதி நடவடிக்கைகளும் மத்திய வங்கி மற்றும் இலங்கை வங்கி ஆகியவற்றின் ஊடாக சட்ட ரீதியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில் தடை செய்யப்பட்ட அமைப்பினால் எவ்வாறு வங்கியின் ஊடாக நேரடியாக பணப் பறிமாற்றத்தினை மேற்கொள்ள முடியும் என அவர் கேள்வி எழுப்பினார்.

மட்டக்களப்பு கொம்பஸினை ஒருபோதும் அரசாங்கத்தினால் சுவீகரிக்க முடியாது. அவ்வாறு சுவீகரிப்பதற்கு நான் ஒரு போதும் அனுமதிக்கமாட்டேன். இங்கு எந்தவித ஷரீஆ கற்கைநெறியும் கற்பிக்கப்படவில்லை.

அதேபோன்று சவூதி நிதியத்தின் ஒரு தலையீடும் இந்த பல்கலைக்கழகத்தில் இல்லை. இந்த நிர்வாகிகளாக எமது நாட்டினை சேர்ந்தவர்களே உள்ளனர்.

இந்த மட்டக்களப்பு கொம்பஸிற்கான காணி ஒதுக்கீடு மற்றும் கட்டுமாண பணிகள் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் சட்ட ரீதியான முறையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் காரணமாக நாங்கள் எந்தவித அச்சமும் அடையத் தேவையில்லை. இலாப நோக்கமற்ற அடிப்படையிலான இந்த பல்கலைக்கழகத்தின் ஊடாக கிடைப்பெறும் வருமானத்தில் 90 சதவீதமானவை பல்கைலக்கழத்திற்கே செல்லும். மிகுதி 10 சதவீதத்தினை மாத்திரமே கொம்பஸின் பணிப்பாளர்கள் பெற முடியும்.

தனிப்பட்ட ரீதியில் எனக்கும், என்னால் முன்னெடுக்கப்படும் மட்டக்களப்பு கொம்பஸிற்கு எதிராக ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக பொய்ப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன் பின்னர் தனியார் உயர் கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் நாட்டில் தனியார் கல்வி நடவடிக்கைக்கு எதிராக செயற்படுபவர்கள் ஆகியோர் உள்ளனர். இவர்களுக்கு எதிராக சட்ட நடடிக்கை எடுக்கப் போனால் நான் ஒவ்வொரு நாளும் நீதிமன்ற வாசலிலேயே நிற்க வேண்டும். அதன் காரணமாக பொய்ப் பிசாரம் மேற்கொள்பவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை" என்றார்.

-றிப்தி அலி-