சமாதான மாநாடு தந்த நன்மை என்ன?

சமாதான மாநாடு தந்த நன்மை என்ன?

இலங்கையிலுள்ள முஸ்லிம்களுக்கு எதிராகவும் அவர்களின் புனித நூலான அல்குர்ஆனுக்கு எதிராகவும் பல்வேறு வகையான போலிப் பிரசாரங்கள் கடந்த பல வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த செயற்பாட்டில் பொதுபலசேனா அமைப்பும் அதன் செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரரும் முன்னணி வகிக்கின்றனர். எனினும் இவர்களினால் அமைக்கப்படும் மேடைகளிலேயே இவர்களின் முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரம் இடம்பெற்று வருகின்றன.

தற்போது இந்த நிலை மாறி, முஸ்லிம்களினால் அமைக்கப்பட்ட மேடையில் முஸ்லிம்களின் புனித நூலான ஆல்குர்அனை விமர்சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவமொன்று கடந்த ஜுலை 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.

அதாவது, கடந்த ஏப்ரல் 21ஆம் திகதியான ஈஸ்டர் ஞாயிறன்று முஸ்லிம் பெயர் தாங்கிய பயங்கரவாதிகளினால் நாட்டில்  மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலை அடுத்து சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களிடையே ஏற்பட்டுள்ள இடைவெளியினை நிரப்பும் முகமாக அமைதி, சமாதானம் மற்றம் சகவாழ்வுக்கான தேசிய மாநாடொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

பிரபல தொழிலதிபர் அப்துல் காதர் மசூர் மௌலானாவின் நெறிப்படுத்தலில் சவூதி அரேபியாவிலுள்ள அமைப்பொன்றினால் வழங்கப்பட்டதாக கூறப்படும் நிதியுதவியின் ஊடாக மேல் மாகாண ஆளுநர் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மாநாடு கொழும்பு – 07 இலுள்ள தாமரைத் தடாகத்தில் (நெலும் பொக்குன) இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் பிரதம பேச்சாளராக உலக முஸ்லிம் லீகின் செயலாளர் நாயகமும், சர்வதேச முஸ்லிம் அறிஞர் சங்கத் தலைவருமான கலாநிதி முஹம்மத் அப்துல் கரீம் அல் ஈஸாவும் கலந்துகொண்டனர்.

இதற்கு மேலதிகமாக முன்னாள் ஜனாதிபதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, நான்கு நிக்காயாக்களினதும் தேரர்களின் பிரதிநிதிகள், இந்து, கத்தோலிக்க மற்றம் இஸ்லாமிய சமயத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் எனப் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதன் இறுதியில் கடந்த ஏப்ரல் 21 இல் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில் ஐந்து மில்லியன் அமெரிக்க டொலரை சர்வதேச முஸ்லிம் சம்மேளனம் இலங்கைக்கு வழங்கியது. குறித்த நிதி கலாநிதி மொஹமட் பின் அப்துல் கரீம் அல் இஸாவினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான முக்கியத்துவமிக்க நிகழ்வில் பௌத்த தேரர்கள் நால்வர் உள்ளிட்ட சமயத் தலைவர்கள் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்;டது. இதில் ஜாதிக ஹெல உருமயவின் முன்னாள் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஓமல்பே சோபித தேரரும் உரையாற்றினார். எனினும் நிகழ்ச்சி நிரலில் இவரது உரை குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

எவ்வாறாயினும் இவர் உரையாற்ற மேடைக்கு தீடீரென்று வரவில்லை. அதாவது, அமரபுர நிகாய சார்பில் மேடைக்கு வருமாறு நிகழ்ச்சி ஆரம்பத்தில் இவர் அழைக்கப்பட்டதை அடுத்து மேடைக்கு எழும்பிச் செல்ல தயாரான இவர், பின்னர் தீர்மானத்தை மாற்றி மேடைக்குச் செல்லாது மீண்டும் அங்கேயே அமர்ந்துகொண்டார்.

எனினும் அமரபுர நிகாய சார்பில் உரையாற்றுவதற்காக அழைக்கப்பட்ட போது அவர் மேடைக்கு சென்று உரையாற்றினார். எனினும் இவரின் உரை முஸ்லிம்களின் மனதில் முள்ளாய் குத்தியமை குறிப்பிடத்தக்கது.

"இஸ்லாமியர்களின் புனித நூலான அல்குர்ஆனில் முஸ்லிம் அல்லாதவர்களை கண்டால் கொல்லுமாறு குறிப்பிடப்பட்டுள்ளதாக" அவர் குறிப்பிட்டார். "அத்துடன் வன்முறையைத் தூண்டும் விதத்தில் அல்குர்ஆனில் காணப்படும் விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும். தான் ஒருபோதும் குர்ஆனை விமர்சிக்கவில்லை. இருப்பினும், என்னிடம் பலரும் கேள்வி எழுப்புகின்றனர். இதனால், அல்குர்ஆனில் இடம்பெற்றுள்ள இந்த விடயங்கள் தொடர்பில் விடையளிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். அல்குர்ஆனில் இருப்பதாக நான் கூறும் கருத்து தவறாக இருந்தால் அதனை சரிசெய்ய வேண்டும்" என ஓமல்பே சோபித்த தேரர் கேட்டுக் கொண்டார்.

குறிப்பிட்ட விடயம் தொடர்பில் மாற்று மதத்தவர்களினால் தொடர்ச்சியாக விமர்ச்சிக்கப்பட்டு வருகின்ற நிலையில் அவற்றுக்கு தேவையான போதிய விளக்கம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் வழங்கப்பட்டுள்ளது. எனினும் சிலர் இந்த குர்ஆன் வசனத்தினை மாத்திரம் எடுத்துக்கொண்டு மீண்டும், மீண்டும் விமர்ச்சிக்கின்றனர். அந்த வகையிலேயே ஓமல்பே சோபித்த தேரரின் இந்த உரையும் அமைந்தது.

எவ்வாறாயினும் குறித்த உரைக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவரான  அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தியினால் குறித்த மாநாட்டில் ஆங்கிலத்தில் உடனடியாக பதில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதற்கு மேலதிகமாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் செயற்குழு உறுப்பினரான அஷ்ஷெய்க் அர்கம் நூராமித், இந்த விடயம் தொடர்பான சில நூல்களை ஓமல்பே சோபித தேரருக்கு வழங்கி, குறித்த திருக்குர்ஆன் வசனங்களின் தெளிவினை இந்த மாநாட்டில் வைத்து வழங்கியமை காத்திரமான நிகழ்வாகும்.

முஸ்லிம்களின் ஏற்பாட்டில் பெருந்திரளான முஸ்லிம்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற இந்த மாநாட்டில் முஸ்லிம் சமூகத்தின் புனித நூலான ஆல்குர் பகிரங்கமாக விமர்ச்சிக்கப்பட்டமை முஸ்லிம்கள் மத்தியில் பாரிய கவலையினை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரபினால் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அக்கரைப்பற்றில் கட்டப்பட்ட சவூதி வீட்டுத் திட்டம் முஸ்லிம்களுக்கு வழங்கப்படக்கூடாது என்பதற்காக இந்த ஓமல்பே சோபித தேரரே நீதிமன்றம் சென்று இன்றுவரை குறித்த வீடுகள் யாருக்கும் வழங்கப்படாமல் தடுத்துவைத்துள்ளார்.

அவ்வாறான ஒருவருக்கு இந்த மாநாட்டில் உரையாற்ற சந்தர்ப்பம் வழங்கியமை ஏற்பாட்டாளர்களின் பாரிய தவறாகும். இது தொடர்பில்  ஏற்பாட்டாளர்கள் முன்கூட்டியே கவனம் செலுத்தியிருக்க வேண்டும். இதேவேளை, இந்த மாநாட்டின் ஏற்பாட்டில் பல குறைபாடுகள் காணப்பட்டதை இதில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக மாநாட்டின் மேடை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அதில் ஒரு பகுதியில் சமயத் தலைவர்களும் மற்றைய பகுதியில் அரசியல்வாதிகளும் அமர்த்தப்பட்டனர். அரசியல்வாதிகளுக்கான பகுதியின் முன்வரிசையில் ஆறு கதிரைகளும் சமயத் தலைவர்களுக்கான பகுதியின் முன்வரிசையில் வெள்ளைத் துணி போடப்பட்ட ஐந்து கதிரைகள் மாத்திரம் போடப்பட்டிருந்தன.

குறித்த ஐந்து கதிரைகளிலும் பௌத்த தேரர்கள் அமர்ந்தமையினால் றிஸ்வி முப்தி உட்பட தமிழ் மற்றும் பௌத்த தேரர்கள் பின்னவரிசையில் வெள்ளைத் துணி போர்த்தப்படாத கதிரைகளிலேயே அமர்ந்தனர். சகவாழ்வுக்கான மாநாட்டில் குறிப்பிட்ட சில மதத் தலைவர்கள் புறக்கணிப்பட்டமையினை ஏவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும் என நிகழ்வில் கலந்துகொண்டோர் கேள்வி எழுப்பினர்.

இந்த மாநாட்டின் விசேட விருந்தினர்கள் மேடைக்கு அழைக்கப்பட்ட போது வருகை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்த பௌத்த தேரர்களை அவதானித்து ஒரு தடவை மாத்திரம் கும்பிட்டனர்.

ஆனால் இந்த மாநாட்டின் ஏற்பாட்டாளரான ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் வரவேற்புரை நிகழ்த்த அழைக்கப்பட்ட போது, மேடையிலிருந்து ஐந்து பௌத்த தேரர்களையும் தனித் தனியாக கும்பிட்டமை குறிப்பிடத்தக்கது. குறித்த மாநாடு இரவு 9.00 மணி வரை இடம்பெற்றது. இந்த காலப் பகுதிக்குள் மஃரிப் மற்றும் இஷா தொழுகை நேரங்கள் காணப்பட்டன.

எனினும் இந்த தொழுகைகளினை மேற்கொள்வதற்கொன்று எந்தவொரு ஏற்பாடும் அங்கு மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. இதனால் உலமாக்கள் உள்ளிட்ட பலர் அங்குமிங்கம் தத்தளித்தமையினை நேரடியாக அவதானிக்க முடிந்தது. பின்னர் அவர்கள் மேல் மாடியில் சென்று மஃரிப் தொழுகையினை தொழுதனர்.

எவ்வாறாயினும் இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பல முஸ்லிம்கள் மஃரிப் தொழுகையின்றி மண்டபத்தினை விட்டு வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.
குறித்த மாநாட்டில் இதுபோன்ற பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டதாக அங்கு கலந்துகொண்டவர்கள் தெரிவித்ததுடன் பலர் மாநாட்டின் இடைநடுவில் வெளியேறியமையும் அவதானிக்கக் கூடியதாகவிருந்தது.

அது மாத்திரமல்லாமல் பல மில்லியன் ரூபா செலவளிக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாட்டின் ஊடாக முஸ்லிம்களை சிறுமைப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக முஸ்லிம் புத்திஜீவிகள் குற்றஞ்சாட்டுவதுடன் இந்த மாநாட்டுக்கு ஒதுக்கிய நிதியினை ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து வழங்கியிருந்தால் சகவாழ்வினை ஏற்படுத்தியிருக்க முடியும் என்றனர்.

இவ்வாறான நிலையில் இது போன்ற நிகழ்ச்சிகளை எதிர்காலங்களில் ஏற்பாடு செய்யும் போதே பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகளையும் ஒத்துழைப்பினையும் பெற வேண்டும். இந்த மாநாட்டிற்கான ஆலோசனைகளும் ஒத்துழைப்புக்களும் குறிப்பிட்ட சிலரிடமிருந்து மாத்திரம் பெறப்பட்டமையே இந்த மாநாடு தோல்வியில் நிறைவுற்றமைக்கான காரணமாகும்.

அடுத்த தேர்தலுக்காக வெள்ளோட்டமாக இந்த மாநாட்டினை சிலர் பயன்படுத்தியுள்ளமை இங்கு அவதானிக்க முடிந்தது. இதுபோன்ற தவறுகளை திருத்தி எதிர்காலத்தில் சிறந்த முறையில் அதிக பண விரயமின்றி இந்த சகவாழ்வு மாநாடுகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

-றிப்தி அலி-