றிசாத் - மஸ்தான் ஆதரவாளர்களிடையே மோதல்; ஐவர் காயம்

றிசாத் - மஸ்தான் ஆதரவாளர்களிடையே மோதல்; ஐவர் காயம்

வவுனியா - சாளம்பைக்குளம் பகுதியில், நேற்றைய தினம் (28), இரவு 9 மணியளவில் பாராளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான றிசாத் பதியூதீன் மற்றும் காதர் மஸ்தான் ஆகியோரின் ஆதரவாளர்களிடையே இடையே ஏற்பட்ட மோதலில் ஐவர் காயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த மஸ்தானின் ஆதரவாளர்கள்,

“செட்டிகுளம் - மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு விட்டு, சாளம்பைக் குளம் பகுதியில் ஒருவரை சந்திப்பதற்காக, அவரது வீட்டுக்குச் சென்றிருந்தோம்.

இதன்போது அங்குவந்த முன்னாள் அமைச்சர் றிசாத் பதியூதீனின் ஆதரவாளர்கள், எங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் தமது ஆதரவாளர்கள் 6 பேர் காயமடைந்துள்ளதுடன், தமது வாகனங்களின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தனர்.

இதையடுத்து, சம்பவம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த றிசாத் பதியூதீனின் ஆதரவாளர்கள்,

“எமது கிராமத்தில், அரசியல்வாதிகளின் சுவரொட்டிகள் எவையும் ஒட்டுவதற்கு நாம் அனுமதிப்பதில்லை. இது கிராமத்தில் வசிக்கும் பெரும்பான்மையான மக்களின் முடிவாக இருக்கும் நிலையில், மஸ்தானின் ஆதரவாளர்கள் கிராமத்துக்குள் வருகைதந்து, சுவரொட்டிகளை ஒட்ட முனைந்தனர்.

அதனை தடுக்க முற்பட்ட போது, எம் மீது தாக்குதல் மேற்கொண்டனர். இதேவேளை, எமது கிராமத்தைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தாக்குதலில் காயமடைந்துள்ளார்” எனத் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தால் இரண்டு தரப்பின் ஆதரவாளர்களும் சாளம்பைக்குளம் பகுதியில்  ஒன்று கூடியிருந்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது.

சம்பவ இடத்துக்குச் சென்ற வவுனியா உதவி பொலிஸ் அத்தியட்சகர், பூவரசங்குளம் பொலிஸார், விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து, 12 மணிக்குப் பின்னர் நிலைமையக் கட்டுப்பாட்டுக்குள்  கொண்டுவந்தனர்.

விசேட அதிரடிபடையினர் மற்றும் துப்பாக்கி ஏந்திய பொலிஸார் சாளம்பைக்குளம் பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் சந்திக்க சென்றதாக தெரிவிக்கப்படுபவரின் குடும்பத்தினர், பாதுகாப்பு நலன் கருதி, பொலிஸாரால் அழைத்து செல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.