யானையில் சவாரி செய்து மு.கா சாதித்தது என்ன?

யானையில் சவாரி செய்து மு.கா சாதித்தது என்ன?

றிப்தி அலி

சுமார் மூன்று தசாப்தங்களிற்கு மேலான வரலாற்;றை கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சியின் முஸ்லிம் பிரிவு என்ற கருத்தாடலொன்று மக்கள் மத்தியில் பரவலாகக் காணப்படுகின்றது.

இந்த விடயம் சமூக ஊடகங்களில் கடந்த வாரம்; பரவலாக பேசப்பட்டது. அதாவது, எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாச கடந்த 16ஆம் திகதி வியாழக்கிழமை கண்டிக்கு விஜயம் செய்து மகாநாயக்க தேரர்களை சந்தித்து பேச்சு நடத்தினார்.

இந்த சந்திப்பில் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சி தலைவர்கள் எவரும் கலந்துகொள்ளாத நிலையில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மாத்திரம் கலந்துகொண்டார். இதனையடுத்தே, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சியின் முஸ்லிம் பிரிவு என்ற கருத்தாடல் சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டன

கடந்த 1994ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றம் நுழைந்த ரவூப் ஹக்கீம், 2000ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் திகதி இடம்பெற்ற ஹெலிக்கப்பட்ட விபத்தில் அக்கட்சியின் ஸ்தாபக தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் மரணமானதை அடுத்து அவர் கட்சித் தலைவராக தெரிவுசெய்யப்பட்டார்.

இக்கட்சியின் தலைவராக ரவூப் ஹக்கீம் தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து இன்று வரை கடந்த இரு தசாப்த காலப் பகுதியின் பெரும் பகுதியினை அக்கட்சி ஐக்கிய தேசிய கட்சியுடனே கழித்துள்ளது. இதனால் கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் பகுதிகளில் ஐக்கிய தேசிய கட்சி தனது செல்வாக்கினை முழுமையாக இழந்துள்ளது.

"ஐக்கிய தேசிய கட்சி எனும் வாகனத்தின் சாரதியாக ரணில் விக்ரமசிங்க இருக்கும் வரை ஒரு போதும் அந்த வாகனத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏறாது" என அக்கட்சியின் ஸ்தாபகர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அக்கடி அரசியல் மேடைகளில் தெரிவித்து வருகின்றார்.

பல தசாப்தங்களுக்கு முன்னரே ரணில் விக்ரமசிங்க ஒரு தந்திரகாரர் என்பது தொடர்பில் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் எதிர்வு கூறியதை முற்றாக நிராகரித்துள்ளார் ஹக்கீம்.

இந்நிலையில் தனது பாடசாலையான கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரான ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியுடன் கடந்த இருபது வருடத்தில் பெரும் பகுதியினை ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் கழித்துள்ளது.

இந்த தீர்மானத்தின் காரணமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பல்வேறு தடவைகள் பிளவுபட்டுள்ளன. மர்ஹும் அஷ்ரபின் மறைவிற்கு பின்னரே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பல்வேறு கூறுகளாக பிளவுபட்டுள்ளன.

முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் தொடக்கம் இறுதியாக ஹசன் அலி வரையான பிளவுகளில் அதிகமான பிளவுகள் ஐக்கிய தேசிய கட்சிக்கு முஸ்;லிம் காங்கிரஸ் முட்டுக்கொடுத்தமையினாலேயே ஏற்பட்டவையாகும்.

2001ஆம் ஆண்டுக்கு பின்னர் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலாயினும் சரி, பாராளுமன்ற தேர்தலாயினும் சரி, மாகாண சபை தேர்தலாயினும் சரி, ஏன் உள்ளூராட்சி மன்ற தேர்தலாயினும் சரி அனைத்துத் தேர்தலிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்தே போட்டியிட்டுள்ளது.

குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையான கல்முனை மாநாகர சபைக்காக இறுதியாக இடம்பெற்ற தேர்தலில் கூட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது மரச் சின்னத்தினை மறந்துவிட்டு ஐக்கிய தேசிய கட்சியின் யானைச் சின்னத்திலேயே போட்டியிட்டது.

இவ்வாறு ஐக்கிய தேசிய கட்சியுடனும் அதன் தலைவரான ரணில் விக்ரமசிங்கவுடனும் மிக நெருக்கமாக செயற்படும் ரவூப் ஹக்கீமும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் பல தடவைகள் அக்கட்சியினாரால் வாக்குறுதிய வழங்கப்பட்டு ஏமாற்றப்பட்டுள்ளனர்.

குறிப்பாக 2015ஆம் ஆண்டு ஜனவரியில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான ரவூப் ஹக்கீமிற்கு பலம் பெருந்திய நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சு வழங்கப்பட்டது.

எனினும் அதேயாண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலினை அடுத்து ரவூப் ஹக்கீமிடமிருந்த நகர அபிவிருத்தி அமைச்சு ரணில் விக்ரமசிங்கவினால் பறிக்கப்பட்டு எந்தவித திணைக்கமுமற்ற நகர திட்டமிடல் அமைச்சு வழங்கப்பட்டு ஏமாற்றப்பட்டமை முக்கிய விடயமாகும்.

இந்த அமைச்சு வழங்கப்பட்ட போது நகர திட்டமிடல் தொடர்பில் பாராளுமன்றத்தில் சட்டமொன்றினை நிறைவேற்றி திணைக்களமொன்றினை உருவாக்குவதாக ரணில் விக்ரமசிவினால் வழங்கப்பட்ட வாக்குறுதி கடந்த நவம்பர் 17ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் வரை நிறைவேற்றப்பட்டவில்லை.

இவ்வாறு பல தடவைகள் ஐக்கிய தேசிய கட்சியினால் ஏமாற்றப்பட்ட ரவூப் ஹக்கீமும், அவர் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுமும் ஏன் தொடர்ச்சியாக ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒட்டியிருக்கின்றது என்ற சந்தேகம் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் இன்று எழுந்துள்ளது.

கடந்த 2005, 2010, 2015 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் இடம்பெற்ற அனைத்து ஜனாதிபதி தேர்தல்களிலும் போட்டியிட்ட ராஜபக்ஷ குடும்பத்தினரை எதிர்த்தே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்பட்டது.

இந்த தேர்தல்களில் ராஜபக்ஷவிருக்கு ஆதரவு வழங்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்கியஸ்தர்கள் பலர் அக்கட்சியின் தலைவரான ரவூப் ஹக்கீமிற்கு ஆலோசனை வழங்கிய நிலையில் அவற்றையெல்லாம் நிராகரித்துவிட்டு ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு எதிராவே அவர்  செயற்பட்டார். இதில் 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் தவிர்ந்த ஏனைய அனைத்து ஜனாதிபி தேர்தல்களிலும் ராஜபக்ஷ குடும்பத்தினரே வெற்றியீட்டினர்.

குறிப்பாக கடந்த நவம்பர் 17ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவினை ஆதரிக்குமாறு தான் வழங்கிய ஆலோசனையினை கட்சியின் தலைமையில் ஒருதுளிகூட கவனத்தில் எடுக்கவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரான எச்.எம்.எம்.ஹரீஸ், தனது நெருங்கிய ஆதராவளர்கள் மத்தியில் தெரிவித்திருந்தாக கல்முனை அரசியல் வட்டாரங்களில் அண்மையில் பேசப்பட்டது.  

கடந்த 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதினை அடுத்து சிங்கள மத்தியில் பிரபல்யம் பெற்ற தலைவராக மஹிந்த ராஜபக்ஷ காணப்பட்டார். இந்த நிலையிலேயே அவர் 2010ஆம் ஆண்டு ஜனவரியில் ஜனாதிபதி தேர்தலுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த தேர்தலில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்று ஐக்கிய தேசிய கட்சியினரே அறிந்திருந்த நிலையில் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவினை குறித்த தேர்தலில் களமிறக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளயும் முன்னெடுத்திருந்தார் இந்த ரவூப் ஹக்கீம்.

இதனாலேயே ராஜபக்ஷ குடும்பத்தினருக்கும், சிங்கள சமூகத்தினருக்கும் முஸ்லிம் சமூகம் தொடர்பில் பிழையானதொரு நிலைப்பாடு தோன்றுவதற்கான காரணமிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் தோல்வியினை அடுத்து சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்கினை அதிகரிக்கும் நடவடிக்கையில் இறங்கிய மஹிந்த ராஜபக்ஷ அதில் வெற்றியும் கண்டார்.

இவ்வாறான நிலையில் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் தற்கொலை தாக்குதலினை அடுத்து நாட்டின் பாதுகாப்பினை ஸ்திரப்படுத்துவதற்காக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் யாரை களமிறக்குவது என்று ஐக்கிய தேசிய கட்சியினரே தீர்மானிக்காத நிலையில் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பளராக சஜித் பிரேமதாசவே களமிறக்கப்பட வேண்டும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குரல்கொடுத்ததுடன் அதற்காக பாரியவில் களமிறங்கி வெற்றி பெற்றார்.

இது தொடர்பில் கட்சியின் உயர் பீடத்தின் அனுமதி எதுவினையும் பெறமால் சர்வாதிகார அடிப்படையில் இந்த விடயத்தில் தீர்மானம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

எனினும், ஜனாதிபதி தேர்தலில் ரவூப் ஹக்கீமினால் களமிறக்கப்படுபவர் தோற்பது போல் இந்த முறை சஜித் பிரேமதாச எதிர்பாராதா பாரிய தோல்வியடைந்தார்.

இதனையடுத்து ஐக்கிய தேசிய கட்சியில் ஏற்பட்ட தலைமைத்துவ பிரச்சினை மற்றும் எதிர்க்கட்சி தலைவர் பிரச்சினை ஆகியவற்றினை தீர்க்கும் செயற்பட்டிலும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் முன்னின்று செயற்பட்டார்.

இந்த விடயத்தில் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்களிக் கட்சித் தலைவர்களான ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க, றிசாத் பதியுதீன் மனோ கணேசன் மற்றும் திகாம்பரம் ஆகியோர் அதிக அக்கறை செலுத்தாத நிலையில் இவர் மாத்திரமே அக்கறை செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணியொன்றின் மூலம் களமிறங்குவதற்கு முன்னெடுப்புக்கள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இந்த முன்னெடுப்பிலும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் முன்னணி வகிபாகம் செலுத்தி வருகின்றார். இதனால் ரவூப் ஹக்கீம் தொடர்பில் ரணில் விக்ரமசிங்க கடும் கோபமுற்றுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கினைப் பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜனாதிபதி தேர்தலின் போது மாத்திரமே ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒட்டியிருக்கும். ஏனைய அனைத்து தேர்தல்ளிலும் தங்களின் தனித்துவத்தினை இழக்காது அக்கட்சியினர் தனித்தே போட்டியிடுவர்.   

இது போன்றே அடுத்த பாராளுமன்ற தேர்தலிலும் அக்கட்சியினர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவர்களின் வீட்டுச் சின்னத்தில் களமிறங்க தயாராகி வருகின்றனர்.

"அவ்வாறே தமிழ் முற்போக்கு முன்னணியும் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ளதாக" அக்கட்சியின் தலைவரான முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் மனோ கணேசன் கடந்த புதன்கிழமை (22) இரவு தனது டுவிட்டர் பக்கத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இவ்வாறு கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளித்த அனைத்து கட்சிகளும் தனி வழி பயணத்தினை ஆரம்பித்துள்ள நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரம் ஏன் ஐக்கிய தேசிய கட்சியுடன் தொடர்ந்து ஒட்டிக்கொண்டிருக்கின்றது என்ற கேள்வி முஸ்லிம் சமூகத்தில் தற்போது ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.