பிரிவேல்த் குளோபலின் மோசடி: நடவடிக்கை எடுக்குமாறு ஹரீஸ் எம்.பி கோரிக்கை

பிரிவேல்த் குளோபலின் மோசடி: நடவடிக்கை எடுக்குமாறு ஹரீஸ் எம்.பி கோரிக்கை

-நூருல் ஹுதா உமர்-

பிரிவேல்த் குளோபல் நிறுவனத்தினால் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட நிதி மோசடி நடவடிக்கைஎடுக்குமாறு திகாமாடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் நேற்று இடம்பெற்ற எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் இந்த கோரிக்கை யினை முன்வைத்துள்ளார்.

கடந்த 06 வருடங்களாக கிழக்கு மாகாணம் அடங்களாக நாட்டின் சில பகுதிகளில் இயங்கி வந்த பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவனத்தில் 2000 மில்லியன் ரூபா நிதி மோசடி நடைபெற்றுள்ளதாக கூறி பாதிக்கப்பட்டவர்கள் நேற்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

அந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தவர்கள் முன்வைத்த குற்றசாட்டுக்களை அடிப்படையாக கொண்டு பிரதேச ஊடகவியலாளர் ஒருவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் கவனத்திற்கு கொண்டுசென்றார்.

இதனையடுத்து, பாராளுமன்ற கட்டிடத்தில் நேற்று நடைபெற்ற எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், தமது பிரதேசத்தில் நடைபெற்றிருக்கும் இம்மோசடியினால் பணத்தை வைப்புச்செய்த பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் உடனடியாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.

சகல விடயங்களையும் செவியுற்ற எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளதால் இது தொடர்பிலான சகல ஆவணங்களையும் பெற்றுத்தருமாறு  பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீசிடம் கேட்டுக்கொண்டதுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் உறுதியளித்துள்ளார்.