கோவாக்ஸ் திட்டத்தின் மூலம் ஜப்பானிலிருந்து இலங்கைக்கு கொவிட்-19 தடுப்பூசிகள்

கோவாக்ஸ் திட்டத்தின் மூலம் ஜப்பானிலிருந்து  இலங்கைக்கு  கொவிட்-19 தடுப்பூசிகள்

ஜப்பான் அரசு கோவாக்ஸ் தடுப்பூசி-பகிர்வு பொறிமுறையின் கீழ் இலங்கைக்கு வழங்கிய 1.4 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளின் மொத்த பங்களிப்பில் 728,000 அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை வழங்கியுள்ளது.

கோவாக்ஸ் திட்டத்திலிருந்து இலங்கைக்கு தடுப்பூசி கிடைத்துள்ள மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும். இவை அனைத்தும், நாட்டிற்கு எவ்வித செலவும் இன்றி முற்றிலும் நன்கொடையாளர்களின் நிதியில் வழங்கப்பட்டுள்ளன.

கோவாக்ஸ் திட்டத்திலிருந்து முதலாவதாக கடந்த மார்ச் மாதம் 264,000 அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இம்மாத ஆரம்பத்தில் 1.5 மில்லியன் மொடெர்னா தடுப்பூசிகளை அமெரிக்கா நன்கொடையாக வழங்கியது.

தடுப்பூசி விநியோகத்தில் காணப்படும் இடைவெளியை நிரப்புவதற்கான சாத்தியமான வழிமுறையாக, கோவாக்ஸ் திட்டத்தின் மூலம் தடுப்பூசி-பகிர்வு முறைக்கு உலக சுகாதார அமைப்பு அழைப்பு விடுத்த நிலையில், அதற்கு ஜப்பான் அரசாங்கம் வழங்கியுள்ள ஆதரவு முக்கியமானதாகும்.

கோவாக்ஸ் தடுப்பூசி திட்டமானது தொற்றுநோய்களின் கடுமையான கட்டத்தை முடிந்தவரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர உதவும் நோக்கத்துடன் தடுப்பூசிகளை விரைவாகவும் சமமாகவும் விநியோகிக்கும் ஒரேயொரு உலகளாவிய பொறிமுறையாகும். கோவாக்ஸ் என்பது உலக சுகாதார அமைப்பு (WHO), காவி (Gavi), தடுப்பூசி கூட்டணி (The Vaccine Alliance), தொற்றுநோய்களுக்கான தயாரிப்பு கண்டுபிடிப்புகளுக்கான கூட்டணி (CEPI) ஆகியவற்றின் தலைமையிலான உலகளாவிய தடுப்பூசி முயற்சியாகும்.

அதன் உலகளாவிய கொள்முதல், ஏற்பாடு மற்றும் சேமிப்பு நடவடிக்கைகளின் தலைமையை யுனிசெஃப் ஏற்றுள்ளது. கோவாக்ஸ் ஐ.நா.வின் நிலையான ஆதரவாளர்களாக இருந்த நன்கொடையாளர்களிடமிருந்து முக்கியமான இருதரப்பு பங்களிப்புகளைப் பெறுகிறது.

மேலும், இந்த உறுப்பு நாடுகள், பலதரப்பு நிறுவனங்கள், அறக்கட்டளைகள், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, சிவில் சமூக அமைப்புகள், உற்பத்தியாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் முக்கிய கூட்டணியையும் கொண்டுள்ளது.

இலங்கையின் தடுப்பூசி செயற்பாட்டில் முக்கிய பங்களிப்பாக அஸ்ட்ராஸெனெகா காணப்படுகின்றது. பொதுச்சுகாதாரம் மற்றும் சமூக நடவடிக்கைகளுடன் இணைந்து தடுப்பூசி வழங்கலை ஆரம்பித்தமையானது, தொற்றுநோயை குறைப்பதற்கும் வலுவான மீட்சிப்பாதையில் நாட்டை கொண்டுசெல்லவும் இலங்கை அரசாங்கத்திற்கு காணப்படும் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றது.

கொவிட்-19இற்கு எதிராக இலங்கை முன்னெடுக்கும் செயற்பாடுகளில், கோவாக்ஸ் திட்டம் மற்றும் நன்கொடையாளர்கள் வகிக்கும் முக்கிய பங்கை சுகாதா அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இவ்வாறு குறிப்பிட்டார்.

“இலங்கை அரசாங்கம், உலக சுகாதார அமைப்பு, யுனிசெஃப் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை கடந்த பல மாதங்களாக முன்னெடுத்த தொடர்ச்சியான கலந்துரையாடல்களின் விளைவாக இந்த தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்துவதற்கு, கூட்டிணைந்து செயற்படுவது ஒவ்வொரு நாட்டினதும் முக்கிய பணியாகும் என்பதை உணர்ந்துகொண்ட ஜப்பான் அரசாங்கத்தின் கணிசமான ஆதரவின்றி இது சாத்தியமல்ல. காரணம், எல்லா நாடுகளும் பாதுகாப்பாக இருக்கும்வரை எந்தவொரு நாட்டிற்கும் பாதுகாப்பில்லை”

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் சுகியமா அகிரா குறிப்பிடுகையில், “இலங்கையின் நீண்டகால நண்பர் என்ற வகையில், இலங்கையின் தடுப்பூசி திட்டத்தை மேலும் மேம்படுத்துவதன் மூலம் நாடு முழுவதும் அவசியமுள்ள அனைத்து மக்களும் தடுப்பூசியை சமமான அளவில் பெற்றுக்கொள்வதை உறுதிசெய்வதற்காக, ஜப்பானில் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியை கோவாக்ஸ் திட்டத்தின் மூலம் சுமார் 1.4 மில்லியன் டோஸ்களை வழங்குவதில் பெருமையடைகின்றோம். 

கொவிட்-19ஐ எதிர்த்து போராடுவதற்கும் உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த வெப்பநிலையில் தடுப்பூசிகளை உரிய தரத்தில் சேமித்து வைப்பதற்கு உதவுவதற்கும் இலங்கைக்கு ஜப்பான் 16.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.

உலகளாவிய ரீதியில், அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் தடுப்பூசி செலுத்தப்படுவதை விரைவுபடுத்துவதற்காக கோவாக்ஸ் திட்டத்திற்கு ஜப்பான் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உறுதியளித்துள்ளது. இந்த உலகளாவிய தொற்றுநோய்க்கு எதிரான எமது போராட்டத்தில், இலங்கையுடன் தொடர்ந்தும் ஒற்றுமையுடன் ஜப்பான் செயற்படும்” என்றார்.

“கொவிட்-19ஐ தடுக்கும் நடவடிக்கைகளுடன் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசி மிகவும் முக்கியமானது. தேசிய தடுப்பூசி வரிசைப்படுத்தல் திட்டத்திற்கு ஏற்ப, இந்த தடுப்பூசிகள் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மற்றும் முக்கிய முன்னணி தொழிலாளர்களை அடைய உதவும்” என யுனிசெஃப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி எம்மா ப்ரிகாம் குறிப்பிட்டார்.

“ஜப்பானிலிருந்து இலங்கைக்கு இந்த தடுப்பூசிகள் கிடைத்துள்ளமையானது, தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தேவையான உலகளாவிய கூட்டுப்பொறுப்பின் உண்மையான உணர்வை நிரூபிக்கின்றது” எனவும் அவர் குறிப்பிட்டார்.

உலக சுகாதார அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி வைத்தியர் அலகா சிங் குறிப்பிடுகையில், “தொற்றுநோய்க்கு பதிலளிப்பதற்கான உலகளாவிய கூட்டு ஒருமைப்பாட்டின் முன்மாதிரியான செயற்பாடாக அமைந்துள்ள ஜப்பானின் நன்கொடை மிகவும் வரவேற்கத்தக்கது. அஸ்ட்ராஸெனெகா முதலாவது தடுப்பூசியினை பெற்றுக்கொண்டவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி வழங்குவதற்கு இந்த பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பாராட்டத்தக்க தடுப்பூசி திட்டத்திற்கு இது ஒரு முக்கியமான மைல்கல்லாக அமையும். அத்தோடு, இவ்வருட இறுதிக்குள் ஒவ்வொரு நாட்டிலும் 30 வீதமான மக்கள் தொகையினருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற உலக சுகாதார அமைப்பினது கோரிக்கையை முன்னெடுப்பதில் இலங்கை உறுதியாக செயற்படும்” என்றார்.

பொது சுகாதாரம் மற்றும் சமூக நடவடிக்கைகளின் வலுவூட்டலுடனும், பரவலுக்கு எதிரான முக்கிய காரணிகளில் ஒன்றாக WHO இதனை அடையாளம் காணுகிறது.

இலங்கைக்கான ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் ஹம்டி குறிப்பிடுகையில், “தற்போது கிடைக்கப்பெற்றுள்ள தடுப்பூசிகளுடன் கோவாக்ஸ் திட்டத்திலிருந்து இலங்கைக்கு 3.2 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இவை நன்கொடையாளர்களிடமிருந்தும் கோவாக்ஸ் திட்டத்திற்கு வழங்கப்பட்ட டோஸ்களின் சமநிலையான ஒதுக்கீட்டிலிருந்தும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த தடுப்பூசி திட்டத்தில் அரசாங்கத்திற்கு உதவுவதில் அயராது உழைத்த உலக சுகாதார அமைப்பு மற்றும் யுனிசெஃப் ஆகியவற்றின் இலங்கையைச் சேர்ந்த எமது சகாக்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்" என்றார்.

அதிகரித்துவரும் தொற்றுநோய்க்கு தடுப்பூசிகள் மிகவும் முக்கியமானவை என்பதை உறுதிப்படுத்த, தேசிய வரிசைப்படுத்தல் திட்டத்திற்கேற்ப சுகாதார அமைச்சுடன் ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கை அலுவலகம் நெருங்கி செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.