கொவிட்-19 சவால்களையும் தாண்டி முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்காவினால் மனித நேயப் பணிகள்

கொவிட்-19 சவால்களையும் தாண்டி முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்காவினால் மனித நேயப் பணிகள்

பொருளாதார மற்றும் கல்வி அபிவிருத்தி தொடர்பான பல்வேறு நிகழ்வுகள் மற்றும் வாழ்வாதார உபகரணங்கள் கையளிப்பு என்பன திருகோணமலை மாவட்டத்திலுள்ள பல்வேறு கிராமங்களில் நேற்று (29) திங்கட்கிழமை இடம்பெற்றன.

முதற்கட்டமாக, பூவரசந்தீவில் வறிய பெண்களுக்கான ‘மாலங்கா கைத்தறி நெசவு நிலையம்’ திறந்துவைக்கப்பட்டது. இறக்கக்கண்டி, வாலையூற்று கிராமங்களில் மீன்பிடி வள்ளங்கள் வலைகள் கையளிப்புடன் கூடவே, மின்சார அவண் மூலம் கருவாடு உற்பத்தி செய்யும் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

விவசாயத்துறையில் நவீனமுறை நீர்ப்பாச்சல் வசதிகள் வறிய விவசாயிகளுக்கு வினியோகிக்கப்பட்டது. தவிர,  நிலாவெளி கைலேஸ்வரா கல்லூரியில் விஞ்ஞான ஆய்வு கூடம் திறந்து வைக்கப்பட்டதுடன் கொவிட் காரணமாக கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருந்த 174 தமிழ், முஸ்லிம் மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் அடங்கிய பாடசாலைப் பொதிகள் வழங்கப்பட்டன.

மேற்படி  நிகழ்வுகள் திருகோணமலை மாவட்டத்திலுள்ள கிண்ணியா மற்றும் குச்சவெளி பிரதேச செயலகத்தினுள் அடங்கும் பல்வேறு கிராமங்களில் நடைபெற்றன.

கிண்ணியா மற்றும் குச்சவெளி பிரதேச செயலகங்கள், கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம், திருகோணமலை வலயக் கல்வி அலுவலகம், விவசாய மற்றும் மீன்பிடித் திணைக்களம் என்பவற்றின் ஆலோசனை வழிகாட்டலுடன் முஸ்லிம் எய்ட் நிறுவனம் மேற்கொண்ட வாழ்வாதார மேம்பாடு மற்றும் கல்வி அபிவிருத்திக்கான பல்வேறு கருத்திட்ட முயற்சிகளின் பயன்பாடுகளை உரிய பயனாளிகளிடம் கையளிக்கும் முகமாக மேற்படி நிகழ்வுகள் சமய, கலாசார வைபவங்களுடன் இடம்பெற்றன.

முஸ்லிம் எய்ட் யூகே (Muslim Aid UK)  தலைமையகத்தின் பிரதான நிறைவேற்று அலுவலர் காசிப் ஷாபிர், முஸ்லிம் எய்ட் சர்வதேச நிகழ்ச்சித்திட்ட தலைமைப் பொறுப்பாளர்  அபு அகீம் மற்றும் முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்கா பணிப்பாளர்  பைசர்கான்,  அந்தந்த பிரதேச செயலக சிரேஷ்ட ஊழியர்கள், வலயக்கல்வி அலுவலக சிரேஷ்ட ஊழியர்கள், விவசாய மற்றும் மீன்பிடித் திணைக்கள பிரதான அலுவலர்கள், சமய மற்றும் சமூகத் தலைவர்கள் மேற்படி நிகழ்வுகளில் அதிதிகளாகப் பங்கேற்று நிகழ்வுகளைச் சிறப்பித்தனர்.

வாழ்வாதார உதவிகள் மற்றும் பல்வேறு உபகரணங்களைப் பெற்றுக் கொண்ட பயனாளிகளினதும் ‘அனைவருக்குமான கல்வி’ என்ற மகுடத்தின் கீழ் கல்வி உபகரணங்களைப் பெற்றுக் கொண்ட மாணவச் செல்வங்களினதும் முகங்களில் மகிழ்ச்சியையும் மனங்களில் எதிர்காலம் குறித்த நம்பிகையையும் ஏற்படுத்துவதில் முஸ்லிம் எய்ட் மேற்கொண்டு வருகின்ற இன, மத, பிரதேச எல்லைகளைக் கடந்த மனிதநேயப் பயணத்தின் ஒரு சில மைல்கற்களாக மேற்படி பங்களிப்புகள் அமைகின்றன.