கொவிட்-19 நடவடிக்கைகளுக்கான ஜப்பானினால் 1,360 மில்லியன் ரூபா நன்கொடை

கொவிட்-19 நடவடிக்கைகளுக்கான  ஜப்பானினால் 1,360 மில்லியன் ரூபா நன்கொடை

இலங்கையின் கொவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்குத் தேவையான எம்.ஆர்.ஐ. ஸ்கானர், சீ.ரி. ஸ்கானர், பெட் சைட் எக்ஸ்-ரே முறைமை மற்றும் மத்திய கண்காணிப்பு போன்ற  1,360 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்களை வழங்கிய ஜப்பான் அரசாங்கத்துக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நன்றி தெரிவித்தார்.

யுனிசெப் ஊடாக இலங்கையின் குளிர் சங்கிலி முறைமைக்கு ஒத்துழைப்பு வழங்கவும், COVID -19 தொற்றுநோய்க்கு பதிலளிக்கும் வகையில் நோய்த்தடுப்பு சேவைகளைப் பலப்படுத்த ஜப்பான் அரசாங்கம் 3 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியமைக்கும் சபாநாயகர் தனது பாராட்டைத் தெரிவித்தார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இலங்கை – ஜப்பான் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தைப் புதுப்பிக்கும் கூட்டம் அண்மையில் பாராளுமன்ற குழு அறையில் நடைபெற்றது. இதில் வரவேற்புரையாற்றும் போதே சபாநாயகர் இதனைக் குறிப்பிட்டார்.

இக்கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் அகிரா சக்யாமா மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க ஆகியோர் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் பல்வேறு அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த சபாநாயகர், “இரு நாட்டுக்கும் இடையிலான உறவுகள் ஆரம்பத்தில் மதம் மற்றும் காலாசாரத்துடன் அதிகம் சம்பந்தப்பட்டதாகக் காணப்பட்டது. இந்த கலாசார இணைப்பு நூற்றாண்டின் பிற்பகுதியில் அரசியல் மற்றும் பொருளாதாரத்துடன் வலுப்பெற்றது” என்றார்.

1951 செப்டம்பர் மாதம் ஜப்பானில் இல் நடைபெற்ற ஜப்பானில் சன் பிரான்சிஸ்கோ அமைதி மாநாட்டில் பங்கேற்ற ஒன்பது ஆசிய நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். அப்போது நிதியமைச்சராகவிருந்த ஜே.ஆர்.ஜயவர்த்தன இலங்கை அரசாங்கம் சார்பில் அம்மாநாட்டில் உரையாற்றியதுடன், புத்தரின் போதனைகளுக்கு அமைய உலக நாடுகள் ஜப்பானுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்ததுடன், இது ஜப்பானினால் பெரிதும் வரவேற்கப்பட்டிருந்தது.

“ஏப்ரல் 1952 இல் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திட்ட சிறிது நேரத்திலேயே இலங்கையும் ஜப்பானும் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தின என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.

1952ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கொழும்பில் ஜப்பானியத் தூதரகம் அமைக்கப்பட்டதுடன், 1953ஆம் ஆண்டு மே மாதம் இலங்கை டோக்கியோவில் அரசாங்கத் தூதுக்குழு தங்குமிடத்தை அமைத்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பித்து இந்த மாதம் (ஏப்ரல் 2021) 69 வருடங்கள் பூர்த்தியடைகின்றன” எனவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.

“1993ஆம் ஆண்டு முதல் இரு நாட்டு பாராளுமன்ற நட்புறவு சங்கங்களின் பிரதிநிதிகள் பரஸ்பர விஜயங்களை மேற்கொள்கின்றனர். இதற்கும் அப்பால் இரு நாட்டுத் தலைவர்களினதும் விஜயங்களால் நட்புறவுகள் மேலும் வலுப்பெற்றதுடன், 2014ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயின் விஜயம் முக்கியம் வாய்ந்ததாக அமைந்தது” எனவும் சபாநாயகர் தனது உரையில் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் அமைச்சர் வைத்தியகலாநிதி ரமேஷ் பத்திரன, இலங்கை – ஜப்பான் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா புதிய செயலாளராகவும், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன், ஜே.சி.அலவத்துவல மற்றும் பிரேம்நாத் சீ.தொலவத்த ஆகியோர் உப தலைவர்களாகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இதற்கு மேலதிகமாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஷ பொருளாளராகவும், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் மற்றும் மேஜர் சுதர்ஷன தெனிபிட்டிய உதவிச் செயலாளர்களாகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.