கிழக்கிலுள்ள 484 தொல்பொருள் இடங்களை அளவிடுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

கிழக்கிலுள்ள 484 தொல்பொருள் இடங்களை அளவிடுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

கிழக்கு மாகாணத்தின் 484 தொல்பொருள் இடங்களில் அளவீட்டுப் பணிகளை மேற்கொள்ளுமாறு பௌத்த ஆலோசனைச் சபைக் கூட்டத்தின் போது கோரிக்கைகள் முன்வைப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், அவற்றில் 64 இடங்களின் அளவீட்டுப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதோடு 22 இடங்களுக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன என்று நில அளவைத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆரியரத்ன திசாநாயக்க தெரிவித்தார்.

13ஆவது தடவையாகவும் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (18) வெள்ளிக்கிழமை கூடிய பௌத்த ஆலோசனைச் சபைக் கூட்டத்தின் போதே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

புதிய வழிபாட்டுத் தலங்களைப் பதிவு செய்வது தொடர்பில் ஓர் உறுதியான முடிவுக்கு வருவதற்கு முன்னர், தொடர்ந்தும் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்துவது முக்கியமென்று, ஜனாதிபதி பௌத்த ஆலோசனைச் சபை சுட்டிக்காட்டியது.

புதிய வழிபாட்டுத் தலங்களை நிர்மாணித்தல் மற்றும் பராமரிப்பு, ஞாயிற்றுக்கிழமைகளில் தம்ம பள்ளிகளை நடத்துதல், முன்மொழிவு மற்றும் விஹாரைகள் தேவாலகம் சட்டம், தொல்பொருள் திணைக்களத்துக்குச் சொந்தமாகவுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணக் காணிகளின் அளவீட்டுப் பணிகள் மற்றும் தொல்லியல் கட்டளைச் சட்டத்தில் திருத்தம் போன்ற விடயங்கள் தொடர்பில் இக்கூட்டத்தின் போது ஆராயப்பட்டன.

புதிய வழிபாட்டுத் தலங்களைப் பதிவு செய்யும் போது, ஒவ்வொரு மதங்களும் கடைபிடிக்கும் நடைமுறைகளைத் தனித்தனியாகக் கவனத்திற்கொள்ள வேண்டும் என்றும் இதன்போது ஆலோசிக்கப்பட்டது.

பௌத்த விஹாரைகளைப் பதிவு செய்யும் போது, அதற்குரிய நிக்காயவின் மஹாநாயக்கர் மற்றும் பிரதேசத்துக்குப் பொறுப்பான சாசனாரக்ஷ சபையின் பதிவாளராகவுள்ள தேரரின் பரிந்துரையின் பிரகாரமே அனுமதி வழங்கப்படல் வேண்டுமென்ற விசேட அவதானமும் செலுத்தப்பட்டது.

தொல்லியல் சார் இடங்களை மையப்படுத்திய விஹாரைகளின் நிர்மாணப் பணிகள், தொல்லியல் திணைக்களத்தின் பரிந்துரைகள் மற்றும் மேற்பார்வையின் கீழேயே மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் மஹா சங்கத்தினர் தெரிவித்தனர்.

தொல்லியல் கட்டளைச் சட்டத்தின் திருத்தம் தொடர்பில் இதுவரை எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பரிசீலனை செய்யப்பட்டதோடு, எதிர்வரும் மாதங்களுக்குள் அந்தச் சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியுமென்று, தொல்லியல் ஆணையாளர் நாயகம் அநுர மனதுங்க அவர்கள் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமயில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பௌத்த ஆலோசனைச் சபையின் உறுப்பினர்களான மஹா சங்கத்தினர், இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோரும் அமைச்சுக்களின்
செயலாளர்கள், அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.