தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான பாராளுமன்ற விசேட குழுவின் இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு

தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான பாராளுமன்ற விசேட குழுவின் இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களைஅடையாளங் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவின் இறுதி அறிக்கை அதன் தலைவர், சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தனவினால் அண்மையில் (22) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

2021 மே 17 ஆம் திகதி முதன்முறையாகக் கூடிய இந்தக் குழு, பொதுமக்களின் கருத்துச் சுதந்திரத்தை மதிக்கும் வகையில் தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பில் பொதுமக்கள் மற்றும் அக்கறையுள்ள நிறுவனங்களிடமிருந்து பிரேரணைகளை கோரி வெளியிட்ட ஊடக அறிவித்தலுக்குப் பதிலளிக்கும் வகையில் அரச சார்பற்ற அமைப்புகள், மதம்சார் அமைப்புகள், பெண்கள் குழுக்கள், பல்வேறு கலாச்சார மற்றும் இனக் குழுக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளடங்கலாக 160 தரப்பினரிடமிருந்து பிரேரணைகள் குழுவுக்குக் கிடைக்கப்பெற்றன. மேலும், 69 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடமிருந்து பிரேரணைகளை சமர்ப்பிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்ததுடன் அதற்கமைய 36 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் எழுத்துமூலம், வாய்மொழி மூலமும் தமது பிரேரணைகளை சமர்ப்பித்திருந்தன.

இதில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளும் அடங்கியிருந்தன. அதனையடுத்து, இடம்பெற்ற குழுவின் 29 அமர்வுகளின் போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், பொது மக்கள் மற்றும் அக்கறையுள்ள அமைப்புகள், பெண்கள் அமைப்புகள் மற்றும் இலத்திரனியல் ஊடக நிறுவனங்கள் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட எழுத்து மூலமான மற்றும் வாய்மொழி மூலமான பிரேரணைகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட குழுவின் இறுதி
அறிக்கையே இவ்வாறு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த குழுவின் தலைவர், சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன அவர்கள், அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அவதானிப்புகள் மற்றும் விதந்துரைப்புக்கள் தொடர்பில் தெளிவுபடுத்தினார். அதற்கமைய,

1. மாகாணசபைத் தேர்தல் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் போது, தற்போதுள்ள சட்டங்களைத் திருத்துவது அல்லது புதிய முறைமையை உருவாக்குவது அல்லது பழைய தேர்தல் முறையின் கீழ் நடத்துவது

2. பல்வேறு தரப்பினரினால் கலப்புத் தேர்தல் முறை பிரேரிக்கப்பட்டுள்ளதால் இந்த அறிக்கை மூலமும் கலப்பு தேர்தல் முறையின் அவசியத்தைச் சுட்டிக்காட்டல்

3. உள்ளூராட்சித் தேர்தலில் தொங்கு ஆசனங்களை அகற்றுதல்

4. பெண் பிரதிநிதித்துவத்துக்கு மேலதிகமாக இளைஞர் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தல்

5. ஊடகங்கள் தேர்தல்களின் போது கடைபிடிக்க வேண்டிய கடமைகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களைக் கருத்தில் கொண்டு செயற்படுதல்

6. அரசியல் கட்சிகளைப் பதிவுசெய்வது தொடர்பில் குறிப்பிடும் போது, 70 க்கு மேற்பட்ட அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் செயற்பாடு தொடர்பில் பல்வேறு விடயங்கள் வெளிப்பட்டுள்ளதால், பாராளுமன்றத் தேர்தல் மற்றும் ஏனைய தேர்தல்களில் போட்டியிடுவதற்கு பிரதேச மற்றும் ஏனைய என்ற அடிப்படையில் அங்கீகரிக்கப்படக்கூடிய அரசியல் கட்சிகளை வேறுபடுத்தல்

7. இலத்திரனியல் ஊடகங்கள் மூலம் அரசியல் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது பல வேட்பாளர்களுக்கு ஏற்படும் குறைபாடு தொடர்பில் நியாயமாகச் செயற்படுவது

8. பல்வேறு ஊழல்கள் நிரம்பிய செலவு அதிகமான தேர்தல் முறையாகத் தேர்தல்கள் மாறியுள்ளமை மற்றும்  இன்றைய தேர்தல்கள் எல்லையற்ற செலவுகளாக மாறியுள்ளதால் தேர்தல் சட்டங்கள் மீறப்படுவதாலும் தேர்தல் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டத்தை இயற்றுதல், நடத்தை விதிக் கோவையொன்றை கடைபிடித்தல் மற்றும் தேர்தல்களில் அரச வளங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுத்தல் தொடர்பான பரிந்துரைகள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அதற்கமைய, சமர்ப்பிக்கப்பட்ட இந்த இறுதி அறிக்கையில் 25 அவதானிப்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதேபோன்று இந்த அறிக்கையில் 15 விதந்துரைப்புக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதில் தேர்தல் முறைமை தொடர்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதுடன் அதன் கீழ் உள்ளூராட்சித் தேர்தல், மாகாணசபைத் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் பரிந்துரைகளும், பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பான பரிந்துரைகளும், இளைஞர் பிரதிநிதித்துவத்தின் கீழ் உள்ளூராட்சி தேர்தல் மற்றும் மாகாணசபைத் தேர்தலில் வேட்பு மனுக்களில் இளைஞர் பிரதிநிதித்துவத்துக்கு 25% ஒதுக்கீட்டை கட்டாயமாக்குதல் தொடர்பான சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துவது தொடர்பான பரிந்துரைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று, வாக்காளர்களின் ஏற்பு அடிப்படையில் அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் தொடர்பான பரிந்துரையும், ஊடகம் எனும் பகுதியின் கீழ் ஊடக வழிகாட்டுதல்கள், இலத்திரனியல் ஊடகங்களில் அரசியல் பிரசாரம் மேற்கொள்ளல், தேர்தல் சட்டங்களை மீறி சமூக ஊடகத் தளங்களால் மேற்கொள்ளப்படும் தேர்தல் பிரசார நடவடிக்கைகள், தகவல்களின் தவறான பொருள்கோடல் மற்றும் பொய்யான தகவல்களின் பரவல் தொடர்பான பரிந்துரைகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேலும், தேர்தல் பிரசார நடவடிக்கைகள், வாக்களிக்கும் உரிமை, வேட்புமனு முறைமை, தேர்தல் முறைமை, தேர்தல் தீர்ப்பாயம், தேர்தல் முடியும் வரை உள்ளூராட்சி அதிகார சகபைள் மற்றும் மாகாண சபைகளின் அதிகாரத்தை முறையே ஆணையாளர்/ செயலாளர் மற்றும் மாகாண செயலாளர் ஆகியோருக்கு வழங்குதல், வருடாந்த வரவு செலவுத்திட்டத்துக்கு உள்ளூராட்சி அதிகாரசபையின் அங்கீகாரம் வழங்கப்பட்டாமை, உள்ளூராட்சித் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு கள அலுவலர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு, தேசியப் பட்டியல் மற்றும் எல்லை நிர்ணயம் என்பன தொடர்பிலும் இந்த இறுதி அறிக்கையில் பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.