கொவிட் தடுப்பூசி ஒதுக்கீட்டில் கல்முனை பிராந்தியம் தொடர்ச்சியாக புறக்கணிப்பு

கொவிட் தடுப்பூசி ஒதுக்கீட்டில் கல்முனை பிராந்தியம் தொடர்ச்சியாக புறக்கணிப்பு

கொவிட் - 19 இற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டில் கல்முனை சுகாதார  பிராந்தியம் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றது.

நாட்டில் காணப்படுகின்ற 26 சுகாதார மாவட்டங்களில் கல்முனை சுகாதார மாவட்டத்தில் மாத்திரம் இதுவரை பொதுமக்களுக்கான தடுப்பூசியேற்றல் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவில்லை.

இந்த சுகாதார மாவட்டத்தில் இதுவரை கிட்டத்தட்ட 3,000 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட நிலையில் 47 பேர் கொவிட் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறன நிலையிலும், பொதுமக்களுக்கான தடுப்பூசியேற்றல் நடவடிக்கை கல்முனை சுகாதார மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவில்லை. இதேவேளை, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (11) இலங்கை வரவுள்ள 2 மில்லியன் சைனோஃபார்ம் கொவிட் தடுப்பூசிகள் இலங்கைக்கு வரவுள்ளன.

இதில் ஒரு தொகுதி தடுப்பூசிகள் கல்முனை சுகாதார மாவட்டத்திற்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அம்மாவட்ட மக்களுக்கு காணப்பட்டது. இந்த நிலையில் இன்று (09) வெள்ளிக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற கொவிட் செயலணியின் கூட்டத்தில் கல்முனை சுகாதார மாவட்டத்திற்கு கொவிட் தடுப்பூசிகளை ஒதுக்குவது தொடர்பில் எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஜூலை 11ஆம் திகதி கிடைக்கவிருக்கும் 2 மில்லியன் சைனோஃபார்ம் தடுப்பூசிகளில் கொழும்பு மாவட்டத்துக்கு 2 இலட்சம், கம்பஹாவுக்கு 5 இலட்சம், களுத்துறைக்கு 3 இலட்சம் என்ற அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, அநுராதபுரம், நுவரெலியா, இரத்தினபுரி, பதுளை, மாத்தளை மாவட்டங்களுக்குத் தலா ஒரு இலட்சம் தடுப்பூசிகளும் குருநாகல் மாவட்டத்துக்கு இரண்டு இலட்சம் தடுப்பூசிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் அடுத்த இரண்டு வாரங்களில், 1.47 மில்லியன் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன. இவற்றில் 6 இலட்சம் தடுப்பூசிகள், ஏற்கெனவே  முதலாவது டோஸ் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட கொழும்பு மாவட்ட மக்களுக்கு ஒதுக்கப்படும்.

மீதமுள்ளவற்றை, கேகாலை மாவட்ட மக்களுக்காக, முலாவது மற்றும் இரண்டாவது டோஸ்களுக்கென வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.

தற்போது கிடைக்கப்பெற்றுள்ள ஃபைசர் தடுப்பூசிகளை மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கும் மொடர்னா தடுப்பூசிகளைக் கண்டி மாவட்டத்துக்கும் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  இதன் பின்னர் கிடைக்கவிருக்கும் தடுப்பூசிகளை, கொவிட் பரவலைக் கருத்திற்கொண்டு, விஞ்ஞானபூர்வமாக விநியோகிக்க முடிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.