யாழ். வைத்தியசாலைக்கு பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை வைத்தியரை நியமிக்க கோரிக்கை

யாழ். வைத்தியசாலைக்கு  பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை  வைத்தியரை நியமிக்க கோரிக்கை

யாழ். போதனா வைத்தியசாலையில் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை வைத்தியர் ஒருவரை பணிக்கு அமர்த்துவதற்கு, அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் பாரிய தடையாக இருப்பதாகக் குற்றஞ்சாட்டிய அரச வைத்திய சங்கத்தின் செயற்குழு மற்றும் ஊடகக் குழு உறுப்பினர் வாசன் இரட்ணசிங்கம், அந்த வெற்றிடம் இன்று வரை நிரப்பப்படவில்லை என்றார்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாட்டு மக்களுக்கு சீரான, வினைத்திறனான, சமமான சுகாதார சேவை கிடைப்பதற்கு முன்னோடியாக செயற்பட்டுள்ளது என்றார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு
தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர்,

முன்னோடியாக செயற்பட்டமையின் பயனாக,விசேட வைத்திய நிபுணர்கள், தர வைத்தியர்கள் எமது இடமாற்ற சபையில் முக்கிய பங்காளிகளாக இருந்து, வைத்தியர்களை தேவையான விதத்தில், தேவையான நேரத்தில் பணிக்கு அமர்த்தி, மக்களுக்கு சீரான சுகாதார சேவை கிடைப்பதற்கு செயற்பட்டு வருகின்றது என்றார்.

இந்த நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் இரண்டாவது பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை வைத்தியருக்கான வெற்றிடம் நிரப்பப்பட வேண்டும் என புரிந்துகொண்ட பொது சேவை ஆணைக்குழுவுக்கு இதற்கான அனுமதியை பொது சேவை ஆணைக்குழுவும் வழங்கியிருந்தது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக சுகாதார அமைச்சு, யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளருடன் இணைந்து இந்தப் பதவி வெற்றிடத்தை உருவாக்க தவறி வருகின்றது. இதனால், அங்கு 2 சத்திரசிகிச்சை நிபுணர்கள் கடமையில் இருக்கும் பட்சத்தில் நோயாளர்களுக்கு எவ்வித தடையுமின்றி சேவையாற்ற முடியுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின், யாழ் போதனா வைத்தியசாலையின் கிளையானது எமக்கு அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கடந்த வாரம் கூடிய நிறைவேற்று குழு வட மாகாண ஆளுநருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது. அக்கடிதத்தின் பிரதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் 13 பேருக்கும், சுகாதார சேவை பணிப்பாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றார்.

எனவே, உள்நோக்கம் கொண்டு வேண்டுமென்றே பதவி வெற்றிடத்தை நிரப்பாமல் பணிப்பாளர் காலம் தாழ்த்தி வருவாராயின், எதிர்வரும் காலங்களில் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைளை முன்னெடுக்க வேண்டி வருமென வைத்தியர் வாசன் இரட்ணசிங்கம் எச்சரிக்கை விடுத்தார்.