'பாக். உயர் ஸ்தானிகராலயம் முன்பாக நடந்த ஆர்ப்பாட்டங்களிற்கு நிதியுதவி செய்தது யார் என்பது இரகசியமானதல்ல'
கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் முன்பாக நடந்த ஆர்ப்பாட்டங்களிற்கு நிதியுதவி செய்தது யார் என்பது இரகசியமானதல்ல என உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்தது.
கடந்த ஏப்ரல் 30 மற்றும் மே 2 ஆகிய தினங்களில் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் முன்பாக நடந்த ஆர்ப்பாட்டங்கள் குறித்த ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் செய்தித் தொடர்பாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், "அங்கு வந்த அப்பாவி மக்களை போராட்டத்தில் பங்கேற்கத் தூண்டியது மற்றும் நிதியுதவி செய்தது யார் என்பது இரகசியமான ஒரு விடயமல்ல என்றும், அங்கு வந்த அப்பாவி மக்களில் பெரும்பாலோருக்கு அவர்கள் எங்கே வந்தார்கள், எதற்காக வந்தார்கள் என்பது கூடத் தெரியாது.
இந்த நடவடிக்கைகளைத் திட்டமிட்டு பிளவுகளை உருவாக்கும் சக்திகள், சமூகத்தின் நல்லிணக்கத்தைப் பற்றியோ அல்லது விதிகள் மற்றும் உள்நாட்டு சட்டங்களையோ மதிக்கவில்லை" என்றார்.
இந்த ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியவர் யார் என்று நன்கு அறியப்பட்டதால், பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் விரைவில் இதேபோன்ற ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்யுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த செய்தித் தொடர்பாளர், "பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையேயும், இவ்விரு நாட்டு மக்களுக்கு இடையேயும் அன்பு, மரியாதை மற்றும் புரிந்துணர்வு ஆகியவற்றின் வலுவான பிணைப்பு இருப்பதாகவும், இலங்கையின் அமைதியான மற்றும் சகோதரத்துவ மக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்வது உட்பட எந்தவொரு நடவடிக்கையிலும் நாங்கள் பங்கேற்க மாட்டோம்" எனவும் தெரிவித்தார்.
பிராந்தியத்தின் ஒட்டுமொத்த நிலைமை குறித்து கருத்துத்தெரிவிக்கையில், எந்தவொரு பொறுப்புள்ள நாட்டையும் போலவே பாகிஸ்தானும் ஏற்கனவே இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நடந்த சம்பவம் குறித்து சுயாதீன விசாரணையை கோரியுள்ள நிலையில், இந்தியாவின் எந்தவொரு தாக்குதலுக்கும் தகுந்த பதிலடி கொடுக்க பாகிஸ்தான் நாடு தயாராக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
Comments (0)
Facebook Comments (0)