20ஐ ஆதரித்த முஸ்லிம் கூட்டணியின் நகர்வுகள்

20ஐ ஆதரித்த முஸ்லிம் கூட்டணியின் நகர்வுகள்

றிப்தி அலி

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் '20க்கு வாக்களித்த எதிர்க்கட்சியின் முஸ்லிம் கூட்டணி' பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்த மே 5ஆம் திகதி புதன்கிழமை அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இந்த சந்திப்யபு தொடர்பிலான ஊடக அறிக்கை, புகைப்படம் மற்றும் வீடியோ ஆகியன பிரதமர் ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டிருந்தது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

"முஸ்லிம் மக்கள் சார்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் ஆண்டு தோறும் நடத்தப்படும் இப்தார் நிகழ்வு இம்முறை கொவிட் கட்டுப்பாட்டு விதிகளுக்கு அமைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரது பங்கேற்புடன் இன்று (05) பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.

இஸ்லாமிய மதத் தலைவர்கள் மற்றும் மக்களின் பங்கேற்புடன் மிக பிரமாண்டமாக நடைபெறும் இப்தார் நிகழ்வு இம்முறை கொவிட்-19 தொற்று காரணமாக ஒரு சிலரது பங்கேற்புடன் இடம்பெற்றது.

முஸ்லிம் கட்சிகள் சிலவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி வருகைத் தந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இதன்போது முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமருக்கு தெளிவுபடுத்தினர்.

முஸ்லம் காங்கிரஸ், முஸ்லிம் தேசிய கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்து நட்பு ரீதியாக கலந்துரையாடியதுடன், இப்தார் நிகழ்விலும் கலந்து கொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் விசேட கவனம் செலுத்தினார். அலரி மாளிகையில் இப்தார் நிகழ்வில் கலந்து கொள்ள கிடைத்தமை விசேடம்சமாகும் என இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான நஸீர் அஹமட், எச்.எம்.எம்.ஹாரிஸ், எஸ்.எம்.எம்.முஷரஃப், அலி சப்ரி ரஹீம், எம்.எஸ். தௌபீக், இஷாக் ரஹ்மான், பைஸல் காசிம் மற்றும் பிரதமரின் இஸ்லாமிய விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு செயலாளர் பர்சான் மன்சூர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் குறித்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நசீர் அஹமதினை காணமுடியவில்லை.

இந்த சந்திப்பு தொடர்பான செய்தி ஊடகங்களில் வெளியாகியவுடன் குறித்த சந்திப்பில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக சமூக ஊடகங்களில் விமர்ச்சிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், தனது பேஸ்புகில் விசேட குரல் பதிவொன்றினை கடந்த 6ஆம் வெளியிட்டிருந்தார்.

அதில் அவர் கருத்துத் தெரிவிக்கையில், "கட்சி வேறுபாடுகளை மறந்து எதிர்க்கட்சியிலுள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்நாட்டு விவகார அமைச்சரை பாராளுமன்றத்தில் நேற்று (05)  சந்தித்து கல்முனை உப பிரதேச செயலகம் தொடர்பில் வலுவான கோரிக்கையொன்றை முன்வைத்தனர்.

இந்த விடயத்தில் தீர்மானமொன்றினை எடுத்து விடக்கூடாது என்ற அடிப்படையில் பிரதமருடனான சந்திப்புக்கு நாங்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து 5.30 மணிக்கே சந்திப்புக்கு நேரம் கிடைக்கப் பெற்றது.

இதற்கமைய அங்கு சென்ற போது அன்டிஜன் பரிசோதனை அறிக்கைக்கு அமையவே உள்ளே அனுமதிக்கப்படுவீர்கள் என பிரதமர் பாதுகாப்பு பிரிவினர் அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அறிக்கை வந்த போது இப்தார் நேரமாகியது. இதனால் இப்தாருக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பிரதமர் அலுவலம் மேற்கொண்டிருந்தது.

எனினும் இதுவொரு திட்டமிட்ட செயற்பாடல்ல. அதன் பின்பு நாங்கள் பிரதமரை சந்தித்து கல்முனை விவகாரத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்க முயற்சிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பிரதமருக்கு தெளிவுபடுத்தியதுடன் இதற்கு நிரந்தர தீர்வினையும் வேண்டினோம். இதற்கு அவர் வாக்குறுதியளித்துள்ளார்.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்க அமைச்சர்களை சந்தித்தால் பாராட்டும் முஸ்லிம் சமூக ஊடக செயற்பாட்டாளர்கள், முஸ்லிம்களுக்கு அநீதி ஏற்படவுள்ள சமயத்தில் ஓடோடிச் சென்று பிரதமரை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பதை கேவலமாக விமர்சிக்கின்றனர். இது என்ன நியாயம்?

எங்களுடைய மக்களின் உரிமைகள் மற்றும் ஆள்புல விடயங்களுக்காக பிரதமரை சந்தித்து பேசுவது தவறா? அரசாங்கம் எடுத்த சில பிழையான தீர்மானங்கள் தொடர்பில் பிரதரிடம் சுட்டிக்காட்டினோம். இதனால் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பல விடயங்கள் தொடர்பில் எடுத்துரைத்ததோடு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கையெழுத்திட்ட மகஜரையும் வழங்கியுள்ளோம்.

இது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் கலந்துகொள்ளும் உயர்மட்ட கூட்டத்தில் கலந்துரையாடி நிச்சயம் தீர்வு பெற்றுத் தருவதாக பிரதமர் வாக்குறுதியளித்துள்ளார்" என்றார்.  

இதேவேளை, "முஸ்லிம் மார்க்கத் தலைவர்களினதும் அரசியல் தலைவர்களினதும் விடுதலை, தடைசெய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புக்கள் தொடர்பான விடயங்கள் உள்ளிட்ட முஸ்லிம் சமூகம் சார்ந்த விடயங்கள் குறித்து பேசுவதற்காகவே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தோமே தவிர, இப்தார் நிகழ்வில் கலந்துகொள்வதற்கல்ல.

இச்சந்திப்பினை முகநூல்களில் பிழையாக விமர்சனம் செய்வதையிட்டு கவலையடைகின்றேன்" என அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் கலந்துரையாடிய விடயங்களுக்கு மிக விரைவில் தீர்வுகள் எட்டப்படவுள்ளன என அவர் குறிப்பிட்டார் எவ்வாறாயினும், இந்த சந்திப்பு தொடர்பான செய்தி அனைத்து ஊடகங்களிலும் பிரதமர் ஊடக பிரிவின் அறிக்கைக்கு அமைவாக வெளியிடப்பட்டிருந்தன.

எனினும் இந்த விடயத்தில் சரி காண முயற்சிக்க விரும்பும் மேற்குறிப்பிட்ட இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும், பிரதமரின்  ஊடகப் பிரிவின் ஊடக வெளியிட்டினை பிழை என்று கூறவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.  

இவ்வாறான நிலையில், "புர்கா தடை முஸ்லிம்களுக்கு பாதுகாப்பானதும் சாதகமானதும்" என புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்துள்ள கருத்தும் பலத்த சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது.

"எதிர்காலத்தில் புர்கா என்பது முஸ்லிம்கள் மீது பயங்கரவாத பழி சுமத்தும் சாதனமாக அமையக் கூடும் இதனால் அதனை தடை செய்வது சிறந்தது" எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே "முஸ்லிம் புத்திஜீவிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை கண்டித்து புனித நோன்புப் பெருநாள் தினத்தன்று கருப்புக்கொடியேற்றி எதிர்ப்பை வெளிப்படுத்துங்கள்" என பாராளுமன்ற உறுப்பினர் எம்.எம். முஷர்ரப் முதுநபீன் கடந்த வாரம் பொத்துவில் பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில்  வேண்டுகோள் ஒன்றை முன்வைத்தார்.

எனினும் அவரது கோரிக்கைக்கு சமூகத்தில் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. அம்பாறை மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் மாத்திரம் அவரது ஆதரவாளர்கள் சிலர் கறுப்புக் கொடிகளை தமது வீடுகளுக்கு முன்பாக தொங்கவிட்டனர்.

எனினும் முஷர்ரப் எம்.பியின் கோரிக்கைக்கு அவரது கட்சிக்குள் இருந்தே பாரிய எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டமை கவனிக்கத்தக்கதாகும். பெருநாள் தினத்தில் கறுப்புக் கொடி ஏற்றுவது பெருநாளின் புனிதத் தன்மையை பாதிக்கும் என்றும் இத்தீர்மானம் முஷர்ரபின் தன்னிச்சையான கோரிக்கையே தவிர கட்சியின் தீர்மானம் அல்ல என அக்கட்சியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள் சிலர் ஊடக மாநாடொன்றை நடத்தி கருத்து வெளியிட்டுள்ளனர்.   

இது அக்கட்சிக்குள் பாரிய கருத்து முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளதையே காட்டி நிற்கிறது. கட்சியின் தலைவர் றிசாத் பதியுதீன் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அக்கட்சிக்குள் தலைமைத்துவ போட்டி ஒன்று உருவாகியுள்ளதாகவும் அறிய முடிகின்றது.  

இதனிடையே, பிரதமருடனான சந்திப்பில் கலந்துகொண்ட குறித்த ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களின் கட்சி அரசியல் வேறுபாடுகளை மறந்து '20க்கு வாக்களித்த எதிர்க்கட்சியின் முஸ்லிம் கூட்டணி' என்ற அடிப்படையில் செயற்படுகின்றனர்.

அது மாத்திரமல்லாமல், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் என அரச தரப்பினரை இவர்கள் அனைவரும் ஒன்றாகச் சென்றே சந்திப்புக்களை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இவர்கள் உண்மையாகவே சமூக விவகாரங்களைத் தான் பேசுகின்றனரா அல்லது தமது தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்ற முயற்சிக்கின்றனரா என்ற சந்தேகம் பலர் மத்தியிலும் எழுந்துள்ளது.

குறிப்பாக 20ஐ ஆதரித்த இந்த 7 எம்.பிக்களும் சமூக வலைத்தளங்களில் மிகக் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றனர். இவர்கள் அரச தரப்பினரை சந்தித்து பேசுவது ஒரு விடயம். ஆனால் ஊடகங்களுக்கு கூறும் விடயம் வேறொதன்றாகவே இருக்கின்றது.

ஜனாஸா எரிப்பு விடயத்தில் அரசாங்கத்துடன் பேசுகின்றோம், அதற்காகவே 20க்கு ஆதரவளித்தோம் எனக் கூறி இவர்கள் முஸ்லிம் சமூகத்தினை ஆறு மாதங்களுக்கு மேல் இழுத்தடிப் செய்தமையினை இந்த சமூகம் ஒருபோதும் மறக்காது. இறுதியாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை விஜயத்தின் ஊடாகவே  கட்டாய ஜனாஸா எரிப்பு விடயம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

இவ்வாறான நிலையில் பிரதமருடனான கலந்துரையாடிய விடயங்களுக்கு தீர்வு கிடைக்கும் எனும் இந்த '20ஐ ஆதரித்த முஸ்லிம் கூட்டணி' எம்.பிக்களின் வாக்குறுதியை முஸ்லிம் சமூகம் ஒருபோதும் நம்பத் தயாரில்லை.

இந்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள கொழும்பு துறைமுக நகர சட்ட மூலத்திற்கு  '20க்கு வாக்களித்த எதிர்க்கட்சியின் முஸ்லிம் கூட்டணி' பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்குவார்கள் என்றே அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இதற்கான பேரம் பேசல்கள் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டதாகவும் அறிய முடிகின்றது. எதிர்வரும் புதன் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் குறித்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

இந்த 20ஐ ஆதரித்த இந்த கூட்டணியும் ஏனைய முஸ்லிம் எம்.பிக்களும் எவ்வாறு நடந்து கொள்ளப் போகின்றனர் என்பதை முஸ்லிம் சமூகம் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருகின்றது.