கல்முனை பிரதி மேயராக ரஹ்மத் மன்சூர் தெரிவு

கல்முனை பிரதி மேயராக ரஹ்மத் மன்சூர் தெரிவு

கல்முனை மாநகர சபையின் பிரதி மேயராக ரஹ்மத் மன்சூர் இன்று (12) புதன்கிழமை தெரிவுசெய்யப்பட்டார்.

கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று புதன்கிழமை காலை மேயர் ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது பிரதி மேயர் தெரிவு இடம்பெற்றது.

பிரதி மேயர் பதவிக்கு ரஹ்மத் மன்சூரின் பெயர் முன்மொழியப்பட்டதினை அடுத்து அமர்வில் கலந்துகொண்ட 15 பேரும் இதனை ஏகமனதாக அங்கீகரித்தனர்.

கல்முனை மாநகர சபையின் பிரதி மேயராக செயற்பட்ட காத்துமுத்து கணேஷின் உறுப்புரிமை இல்லாமலாக்கப்பட்டமையினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இவர் தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம்.மன்சூரின் புதல்வாரன இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தேசிய ஒருங்கிணைப்பாளருமாவார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அமைச்சராக செயற்பட்ட காலப் பகுதியில் இவர் அவரின் இணைப்புச் செயலாளராக இவர் செயற்பட்டதுடன் அவரின் மிக நம்பிக்கைக்குரியவாராகவும் இவர் காணப்பட்டார்.

இந்த தெரிவினை அடுத்து கல்முனை மாநகர சபையிலுள்ள பிரதி மேயர் அலுவலகத்தில் தனது கடமைகளை இவர் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.