200 கோடி மோசடி செய்த பிரிவேல்த் குளோபல் பணிப்பாளரை கைது செய்ய இன்டர்போல் சிவப்பு அறிவித்தல்

200 கோடி மோசடி செய்த பிரிவேல்த் குளோபல் பணிப்பாளரை கைது செய்ய இன்டர்போல் சிவப்பு அறிவித்தல்

றிப்தி அலி

இஸ்லாமிய அடிப்படையில் செயற்படுவதாகக் கூறி நாட்டின் பல பிரதேசங்களில் இயங்கி 200 கோடி ரூபாவை ஏப்பம் விட்ட பிரிவேல்த் குளோபல் நிறுவனத்தின் ஸ்தாபக பணிப்பாளர்களை கைது செய்வதற்காக இன்டர்போலின் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரமே இந்த சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது என கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்தது. பிரிவேல்த் குளோபல் நிறுவனத்திற்கு எதிராக பல முறைப்பாடுகள் கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கம்பனி பதிவாளர் திணைக்கள பதிவுகளின் பிரகாரம், கொழும்பு - 05 இனைச் சேர்ந்த 46 வயதான சிஹாப் ஷெரீம் என்று அழைக்கப்படும் அஹமட் ஷெரீம் முஹம்மது சிஹாப் மற்றும் அவரது மனைவியான கல்கிசை பிரதேசத்தினைச் சேர்ந்த 40 வயதான பாத்திமா பர்சானா மார்கார் ஆகியோர் இதன் ஸ்தாபக பணிப்பாளர்களாவர்.

கடந்த  2014.02.05ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்ட இந்த நிறுவனத்தின் வியாபார நடவடிக்கைகள்; கடந்த 2016.07.01ஆம் திகதியிலிருந்து கிழக்கு மாகாணத்திற்கு விஸ்தரிக்கப்பட்டன.

அது மாத்திரமல்லாமல், சுமார் 15 மாத காலப் பகுதிக்குள் இதன் ஐந்து கிளைகள் சம்மாந்துறை, கல்முனை, பொத்துவில், ஏறாவூர் மற்றும் மருதமுனை ஆகிய நகரங்களில் திறக்கப்பட்டுள்ளன.

இந்தக் கிளைகள் சுமார் 1,400 ஒப்பந்தங்களை வைப்பாளர்களுடன் மேற்கொண்டு 200 கோடி ரூபா பணத்தினை பெற்றுள்ளது. எனினும் கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குறித்த நிறுவனத்தினால் வைப்பாளர்களுக்கு இலாபம் வழங்கப்படவில்லை.

இதனையடுத்து, பிரிவேல்த் குளோபல் நிறுவனத்திற்கும் அதன் பணிப்பாளர்களான  சிஹாப் ஷெரீம் மற்றும்  பர்சானா மார்கார் ஆகியோருக்கும் எதிராக பல வழக்குகள் கல்முனை மற்றும் பொத்துவில் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் பிடியாணை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.   

இந்த நிலையில் இவர்கள் இருவரும் தனது மகனுடன் யாழ்ப்பாணத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் படகு மூலம் இந்தியாவுக்கு கடந்த 2020.09.06 தப்பிச் சென்றனர்.

இதன்போது, வேதாரண்யம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இவர்கள் இன்று வரை இந்திய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இவர்கள் இருவரையும் நாட்டுக்கு கொண்டுவருவதற்காகவே இன்டர்போலின் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த நிறுவனத்திற்கும் அதன் பணிப்பாளர் சிஹாப் ஷெரீமிற்கும் எதிராக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்தது.  அத்துடன், சிஹாப் ஷெரீமின் கடவுச்சீட்டு கோட்டை நீதிமன்றத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டது.  

குறித்த நிறுவனம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கிக்கு மேற்கொள்ளப்பட்ட தகவல் அறியும் விண்ணப்பத்திற்கு அதன் தகவல் அதிகாரியான பிரதி ஆளுநர் கே.எம்.எம். சிறிவர்த்தனவினால் வழங்கப்பட்ட பதிலிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரிவேல்த் குளோபல் நிறுவனம் தொடர்பில் நிந்தவூர், ஏறாவூர், கன்னத்தோட்ட, பொத்துவில், சாய்ந்தமருது, ஒலுவில், நீர்கொழும்பு, பாதுக்க மற்றும் கொழும்பு – 02 ஆகிய பிரதேசங்களில் இருந்து 18 முறைப்பாடுகள் மத்திய வங்கிக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.

"இந்த முறைப்பாடுகள் தொடர்பில் 2011ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க, நிதித்தொழில் சட்டத்தின் 42ஆவது பிரிவின் கீழ் குறித்த நிறுவனத்திற்கு எதிரான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன" எனவும்  மத்திய வங்கி தெரிவித்தது.

எவ்வாறாயினும், "இந்த விசாரணையினை முன்னெடுப்பதற்கு தேவையான மேலதிக தகவல்களை வழங்குமாறு குறித்த நிறுவனத்துடன் தொடர்புடைய நபர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள போதிலும் இதுவரை மேலதிக தகவல்கள் எதுவும் வழங்கப்படவில்லை" என மத்திய வங்கி குறிப்பிட்டது.

அதேவேளை, வியாபார தகவல்களை வழங்குமாறு எழுத்து மூலம் பிரிவேல்த் குளோபலிடம் மத்திய வங்கி கோரிக்கை விடுத்ததுடன் நிதித் தொழில் சட்டத்தின் கீழ் குறித்த நிறுவனத்தின் பணிப்பாளரான சிஹாப் ஷெரீமிடம் மத்திய வங்கி வாக்குமூலமும் பதிவு செய்துள்ளது.

எனினும், "எதிர்கால குற்றவியல் விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு குறித்த நிறுவனத்திற்கு எதிரான விசாரணை தொடர்பான மேலதிக தகவல்களையும் ஆவண ரீதியான ஆதாரங்களையும் வழங்க முடியாது" என மத்திய வங்கி குறிப்பிட்டது.

அதேவேளை, இந்த நிறுவனம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு மேல் மாகணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் மத்திய வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது.

அது மாத்திரமல்லாமல், இந்த நிறுவனத்திற்கு எதிராக குற்றவியல் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் மத்திய வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் குறித்த நிறுவனம் தொடர்பான தகவல்களை பெறுவதற்கான உத்தரவினையும் கோட்டை நீதவானிடமிருந்;து மத்திய வங்கி பெற்றுள்ளது. எவ்வாறாயினும், "பிரிவேல்த் குளோபல் நிறுவனத்தினால் சேகரிக்கப்பட்ட நிதியினை எங்கு முதலீடு செய்தார்கள் என்ற விடயத்தினை வெளிப்படுத்த முடியாது" என மத்திய வங்கி குறிப்பிட்டது.

"எதிர்கால குற்றவியல் விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டே குறித்த தகவலை வழங்க முடியாது" எனவும் மத்திய வங்கி தெரிவித்தது. இதேவேளை, அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரினைச் சேர்ந்த அஸ்ரப் பஹ்ஜா ஜவாத் அஹமட் மற்றும் ஜோர்தானின் அம்மான் நகரைச் சேர்ந்த முஹம்மத் நியாஸ் இஷாக் அல் ஹாதீப் ஆகியோர் பிரிவேல்த் குளோபலின் பங்காளர்களாக கடந்த 2020.08.25ஆம் திகதி இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

வைப்பாளர்களின் நிதியினை திருப்பி செலுத்துவதற்காகவே மேற்குறிப்பிட்ட இருவரையும் எனது நிறுவனத்தின் பங்காளர்களாக இணைத்துள்ளேன். இவர்களின் இணைவினால் நாட்டுக்குள் வரவேண்டியுள்ள 16 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் மத்திய வங்கியினால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுஎன சிஹாப் சரீம் கடந்த ஓக்டோபர் 8ஆம் திகதி விடியல் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

எனினும், 'இந்த நிறுவனத்தில் வெளிநாட்டவர்கள் முதலீடு செய்தமை அல்லது நிதி வழங்கியமை தொடர்பில் எந்த தகவலும் விசாரணைகளின் போது வெளிப்படுத்தப்படவில்லை' என மத்திய வங்கி அறிவித்தது.

அது மாத்திரமல்லாமல், 'இந்த நிறுவனத்திற்கான எந்தவொரு நிதியும் தங்களினால் இடைநிறுத்தி வைக்கப்படவில்லை' எனவும் மத்திய வங்கி குறிப்பிட்டது.

அங்கீகாரமளிக்கப்பட்ட கம்பனிகள் மாத்திரமே பொதுமக்களிடமிருந்து வைப்புக்களை பெற முடியும். எந்தவித அங்கீகாரமும் இல்லாமல் வைப்புக்களை சேகரிக்கும் கம்பனிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என மத்திய வங்கி தெரிவித்தது.

இதேவேளை எந்தவித அங்கீகாரமுமின்றி பிரிவேல்த் குளோபல் பொதுமக்களிடமிருந்து வைப்புக்களை பெற்று நிதித் தொழிலில் ஈடுபட்டிருந்தால் நிதித் தொழில் சட்டத்தின் கீழ் குறித்த நிறுவத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய வங்கி மேலும் தெரிவித்தது.