2,370 மீள்குடியேறிய குடும்பங்ளுக்கு மேம்பாடான வசிப்பிடங்ளையும் வாழ்க்கையும் ஏற்படுத்தல்

2,370 மீள்குடியேறிய குடும்பங்ளுக்கு மேம்பாடான  வசிப்பிடங்ளையும் வாழ்க்கையும் ஏற்படுத்தல்

ஹபிட்டாட் ஃபோ ஹியூமானிட்டி ஸ்ரீலங்காவும் அதன் பங்காளிகளும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடனான 'ஹோம்ஸ் நொட் ஹவுசஸ்' (Homes not Houses – வீடு அல்ல வாழ்விடம்) வேலைத்திட்டத்தை நிறைவேற்றியுள்ளன.

2,370க்கு மேற்பட்ட மீள்குடியேறிய குடும்பங்கள் புதிய வீடுகளில் குடியேறி தமது வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் மீளக் கட்டியெழுப்புவதற்கு வழிகோலியுள்ள இப்பல்லாண்டு மற்றும் பன்முக வேலைத்திட்டத்தின் கீழ் வசிப்பிடங்களை அமைப்பதற்கு மாத்திரமன்றி வாழ்வாதாரங்கள் மற்றும் தொழில் முயற்சிகளுக்கும் உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த 14 மில்லியன் யூரோ செலவிலான வேலைத்திட்டத்தில் 45 சதவீதமான வீடுகள் பொருத்தமான சூழல்நேயக் கட்டுமான மூலப்பொருட்களையும், தொழில்நுட்பங்களையும்; பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்டன என்பதும் உத்தேசிக்கப்பட்ட குறைந்தபட்ச இலக்கை (35%) இது அதிகமானது என்பதும் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.

ஹபிட்டாட்டின் காலநிலை உணர்திறன் முன்முயற்சிகளுக்கு மிகச் சிறந்த உதாரணங்களில் ஒன்றாகக் கருதப்படும், இவ்வேலைத்திட்ட காலப்பகுதி முழுவதிலும், பொருத்தமான சூழல்நேய கட்டுமானத் மூலப்பொருள்களின் பாவனை மற்றும் தொழில்நுட்பங்கள் பற்றியும் அவற்றின் அனுகூலங்கள் பற்றியும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு இவ்வேலைத்திட்டத்தில் பங்குபற்றிய குடும்பங்களுக்கும் மேசன்மாருக்கும் வழங்கப்பட்டது.

2016ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வேலைத்திட்டத்தின் இறுதியில், 1,000க்கு மேற்பட்ட வீட்டு உரிமையாளர்கள் அகழ்ந்தெடுக்கப்படும் மணலுக்குப் பதிலாக, அழுத்தி உறுதியாக்கப்பட்ட கிறவல் கற்கள்(Compressed Stabilized Earth Block - CSEB ) போன்ற சூழலுக்கு நலமான கட்டடப் பொருள்களைத் தெரிவு செய்திருந்தார்கள்.

ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட சாத்தியவள ஆய்வு முடிவுகளின்படி, நிலைபெறு தன்மையுள்ள அபிவிருத்திக்காக காபன் குறைந்த, தாழ்ந்த உற்பத்தி ஆற்றலுக்குத் தீர்வாக இந்த கிறவல் கற்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகள் தமது வீட்டை தாமே நிர்மாணிக்கும் அணுகுமுறையின் அடிப்படையில் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் ஹபிட்டாட் ஃபோ ஸ்ரீலங்காவின் நிதியுதவியைப் பெற்றுக்கொண்ட குடும்பங்கள் தமது பிரதேசத்தில் கிடைக்கும் மூலவளங்களைப் பயன்படுத்தித் தமக்கு வசதியான வேகத்தில் திட்ட காலத்திற்குள் வீடுகளைக் கட்டிக்கொண்டனர்.

கட்டுமானத் தரத்தை உறுதிப்படுத்துவதற்காக ஹபிட்டாட்டின் தொழில்நுட்ப உதவி அவர்களுக்கு வழங்கப்பட்டது. மட்டக்களப்பிலுள்ள விளாவெட்டுவான் கிராமத்தில் 2017ஆம் ஆண்டில் அழுத்தி உறுதியாக்கப்பட்ட கிறவல் கற்களைப் பயன்படுத்தி வீட்டைக் கட்டிக்கொண்ட முன்னோடிகளில் ஒருவர் 43 வயதான  உஷாதேவி. அவரும் அவருடைய கணவரும் ஹபிட்டாட்டின் கிறவல் கற்கள் உற்பத்தித் தொழிற்சாலைக்கு விஜயம் செய்த பின்பே இக்கற்களைப் பயன்படுத்த முடிவு செய்தனர்.

"வழமையான செங்கற்கள் மற்றும் சீமெந்து கற்களைவிட அழுத்தி உறுதியாக்கப்பட்ட கிறவல் கற்கள் (CSEBs) உறுதிமிக்கவை என்று அறிந்துகொண்டோம். அதனால்தான் அவற்றைப் பயன்படுத்த நாம் முடிவு செய்தோம்" என்று உஷாவின் கணவர் தில்லைநாதன் (47) கூறினார்.

இவர்கள் நான்கு வருடங்களுக்கு முன் தமது வீட்டினைக் கட்டி வசித்து வருகின்றார்கள். அன்றிலிருந்து, வெப்ப காலத்தில் குளிர்சியாகவும் குளிர் காலத்தில் சூடாகவும் விளங்கும் இந்த வீட்டின் உறுதியையும் அழகையும் பார்த்துத் தெரிந்துகொள்வதற்காக 1,000க்கு மேற்பட்டவர்கள் வந்துபோயுள்ளனர்.

"உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் உட்பட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மீளக்குடியேறித் தமக்கென ஒரு வீட்டை அமைத்துக்கொள்ள ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொள்ளும் நீண்டகால உதவித் திட்டத்தில் Homes not Houses வேலைத்திட்டம் ஒரு முக்கிய கூறாகும்" என்று இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிக் குழுவின் தூதுவர் டெனிஸ் சைபி கூறினார்.

"வீடுகளை மீளுருவாக்க அவற்றின் உரிமையாளர்களுக்கு உதவும் இத்திட்டத்தின் கீழ் கடந்த சில வருடங்களில் 20,000க்கு மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளதையிட்டு நான் பெருமையடைகின்றேன்.

யுத்தத்தினால் ஏற்பட்ட சமூக - பொருளாதாரத் தாக்கங்களை நிவர்த்தி செய்வதன் மூலமே நிலைபெறு தன்மையுள்ள சமாதானத்தையும் உறுதிப்பாட்டையும் கட்டியெழுப்ப முடியுமென ஐரோப்பிய ஒன்றியம் நம்புகின்றது.

இந்த வகையில் ஹபிட்டாட் ஃபோ ஹியூமானிட்டி ஸ்ரீலங்கா ஆற்றியுள்ள பணிகளுக்கு நான் நன்றி கூறுகின்றேன். எதிர்காலத்தில், பசுமையான பொருளாதார மீட்சியில் முதலீடுகளைச் செய்வதன் மூலம் நாட்டின் மிகப் பின்தங்கிய பிரதேசங்களின் சமூக -பொருளாதார அபிவிருத்திக்கு ஐரோப்பிய ஒன்றியம் தீவிரமாக உதவி செய்யும்" என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஹபிட்டாட் ஃபோ ஹியூமானிட்டி ஸ்ரீலங்காவின் தேசிய பணிப்பாளர் யு ஹ்வா லீ கருத்துத் தெரிவிக்கையில்,

"கடந்த ஐந்து வருடங்களாக, 'Homes not Houses Project' வேலைத்திட்டத்தின் மூலம் பாதுகாப்பான வசிப்பிடம் தேவைப்படும் குடும்பங்களுடன் இணைந்து செயற்படுவது குறித்து நாம் பெருமைப்படுகின்றோம்.

இரு தசாப்தங்களுக்கும் மேலாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மட்டக்களப்பு, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த இம் மக்கள் இப்போது முறையான வசிப்பிடத்தைப் பெற்றிருப்பதால் உறுதியான மற்றும் சுயமுயற்சியில் தங்கியிருக்கும் வாழ்க்கையை ஆரம்பிக்ககூடிய நிலைக்கு வந்துள்ளார்கள்.

பிள்ளைகள் ஆரோக்கியமான சூழலில் கல்வி கற்கவும் விளையாடவும் முடியும். பெற்றோர்கள் தமது வாழ்வாதாரங்களை முன்னேற்றுவதில் கவனம் செலுத்த முடியும். சமூக அமைப்புக்கள் சமுதாய ஒத்திசைவுக்குப் பங்களிப்புச் செய்ய முடியும். இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற உதவிய ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் வேர்ல்ட் விஷன் லங்காவுக்கும் எமது நன்றி உரித்தாகும்" என்றார்.

இந்த வேலைத்திட்டத்துடன் தொடர்புடையதாக வேர்ல்ட் விஷன் லங்காவினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் பிரகாரம், திறன்களின் அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார உதவிகள் மூலம் சுமார் 46,000 மக்கள் சுய முயற்சியில் தங்கியிருப்பதற்கான தமது ஆற்றலை முன்னேற்றிக்கொண்டனர்.

கால்நடை வளர்ப்பு, விவசாயம், வீட்டு அடிப்படையிலான கட்டுமானத் தொழில் முயற்சிகள், அனர்த்த இடர் குறைப்பு, வடிகால்கள் மற்றும் மதகுகளைச் சீரமைக்குப் பணி என்பன அத்தகைய வாழ்வாதார உதவித் துறைகளில் உள்ளடங்கும்.

‘Homes not Houses Project’ வேலைத்திட்டம் பூர்த்தி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கம்பஹா மாவட்டத்திலுள்ள கட்டானையில் மேற்கொள்ளப்படும் GRACE வேலைத்திட்டத்திற்கு அழுத்தி உறுதியாக்கப்பட்ட கிறவல் கற்களை ஹபிட்டாட் ஃபோ ஸ்ரீலங்கா பயன்படுத்துகின்றது.

அங்கவீனர்கள், முதியவர்கள் மற்றும் பெண் தலைமையிலான குடும்பங்களை உள்ளடக்கிய சுமார் 100 குடும்பங்கள் தமக்குத் தேவையான அடிப்படை வீடுகளையும் சுகாதார வசதிகளையும் படிப்படியாக அமைத்துக்கொள்வார்கள். அத்துடன், மேலும் 50 பேர் வாழ்வாதார வாய்ப்புகளைப் பெறுவார்கள்.