Factum Perspective: ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மறைந்துபோகும் வாக்குகள்

Factum Perspective: ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மறைந்துபோகும் வாக்குகள்

சஞ்ஜ டி சில்வா ஜயதிலக

கடந்த ஒக்டோபர் 6 ஆம் திகதி, ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) இலங்கை தொடர்பான தீர்மானம்  பேரவையின் 47 உறுப்பினர்களின் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டதுடன், தீர்மானத்திற்கு ஆதரவாக 20 வாக்குகளும், எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன் 20 உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை.

தீர்மானம் HRC/51/L1/Rev1 என்பது 2009ஆம் ஆண்டு முதல் பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட 9வது தீர்மானமாகும். மே 2009 இல் இருந்து பேரவையில் நிறைவேறிய இலங்கை தொடர்பான அனைத்து தீர்மானங்களிலும் முதன்மையாக போருக்குப் பின்னரான நல்லிணக்கம், அரசியல் அதிகாரப் பகிர்வு மற்றும் மோதலில் இரு தரப்பினரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிற்கான பொறுப்புக்கூறல் ஆகியவையே முதன்மையானவையாகும்.

எவ்வாறாயினும், பிரதமர் உட்பட முழு அமைச்சரவையும் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஜனாதிபதியின் வியத்தகு முறையில் கவிழ்க்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிரான முன்னெப்போதுமில்லாத மக்கள் எழுச்சிக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட சமீபத்திய தீர்மானம், முதன் முறையாக பொருளாதார பரிமாணத்தை அறிமுகப்படுத்தியதுடன், வழக்கமான போர் தொடர்பான கவலைகளுக்கு மேலதிகமாக பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கும்,  ஊழலை விசாரித்து வழக்குத் தொடரவும் அழைப்பு விடுத்தது. "அரகலயா" (போராட்டம்) என்று பிரபலமாகக் குறிப்பிடப்படும் எழுச்சியானது, நாட்டை திவாலான நிலைக்கு தள்ளிய ஆளும் உயரடுக்கின் ஊழலையும் அதன் பொருளாதாரத்தின் தவறான முகாமைத்துவத்தையும் பிரதானமாக குற்றம் சுமத்துகின்றது.

எதிர்பார்த்தபடி, இலங்கை அரசாங்கத்தின் சார்பில் ஜெனீவாவில் நடைபெற்ற 51வது அமர்வில் பங்கேற்ற இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இந்த தீர்மானத்தை கடுமையாக நிராகரித்துள்ளார்.

பதவி நீக்கம் செய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்ஷவுக்குப் பதிலாக தனது நீண்ட கால அரசியல் எதிரியான ரணில் விக்கிரமசிங்கவை (கடந்த தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தவர்) ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்த அரசாங்கம், அமைதியை மீட்டெடுத்ததுடன், பொருளாதார நெருக்கடி கொவிட் பெருந்தொற்று மற்றும் உக்ரைனில் நடந்த போரின் விளைவாகும் என்றும், பொருளாதாரத்தின் சரிவில் அரசாங்கத்தின் பங்கு சிறியதாக இருந்ததாகவும் தொடர்ந்து வலியுறுத்துகிறது.

அதன் சொந்த குடிமக்களோ அல்லது சர்வதேச சமூகமோ அதை ஏற்கவில்லை. எதிர்ப்புகளின் நாளாந்த வெளிப்பாடுகள் உள்ளதுடன், அது ஒருவேளை நாடு மற்றொரு 'அரகலயா'வின் உச்சத்தில் இருப்பதைக் குறிக்கின்றது.

தீர்மானம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பிரதமர் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் (ராஜபக்சே குடும்பத்தின் அரசியல் முக்கியஸ்தர்கள்) ஆகியோர் மீது அவர்களின் அமைச்சரவை மற்றும் உயர் அதிகாரிகளான 39 நபர்களை பெயர் குறித்து பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக்கூற மற்றும் பதிலளிக்க வேண்டுமென தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு மேலதிகமாக மூன்று அடிப்படை உரிமைகள் வழக்குகளை தொடர உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஒன்றிணைந்து, இந்த விடயங்கள் IMF மற்றும் கடன் வழங்குநர்கள் இலங்கை அரசாங்கத்துடன் கடன் மறுசீரமைப்பு மற்றும் பிற பங்குதாரர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வழிவகுப்பதுடன், மக்களிடமிருந்து புதிய ஆணையைப் பெற முன்கூட்டிய தேர்தல்களை வலியுறுத்தலாம்.

எழுச்சி மீண்டும் ஏற்படுவதற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக பாதுகாப்பு அதிகாரத்துவத்தால் நடைமுறைப்படுத்தப்படும் பாராபட்சமான அடக்குமுறை முறைமைகள் அவர்களின் மோசமான அச்சங்களைத் தூண்டிவிடுகின்றன.

மிக சமீபத்தில், நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளிலும் உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தும் முயற்சி, நீதிமன்றங்களில் சவால் செய்யப்பட்டு, ஜனாதிபதி விக்கிரமசிங்கவால் வாபஸ் பெறப்பட்டது.

ஜெனீவா தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் உயர்நிலை ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருப்பது பொதுமக்களின் சந்தேகத்தையும் அரசாங்கத்தின் செல்வாக்கற்ற தன்மையையும் அதிகரித்துள்ளது.

பேரவைக்கு பொருளாதார விடயங்களில் ஆணையோ அல்லது நிபுணத்துவமோ இல்லை என்ற தனது விமர்சனத்தில் வெளியுறவு அமைச்சர் முற்றிலும் தவறு செய்தார். UNHRC இன் அடிப்படை ஆவணத்தில், பொதுச் சபையின் தீர்மானம் 60/251 குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் உட்பட அனைத்து மனித உரிமைகளும் பிரிக்க முடியாதவை என்பதுடன் அதே கவனத்துடன் கருதப்பட வேண்டும் என்பதை குறிப்பாக தெளிவுபடுத்துகிறது.

பேரவை விசேட நடைமுறைகள் என்று அழைக்கப்படும் பல்வேறு விடயங்களில் பேரவைக்கு அறிக்கையிடும் தொடர்புடைய துறைகளில் அனுபவம் வாய்ந்த சர்வதேச நிபுணர்களை நீண்ட காலமாக நியமித்துள்ளது. இந்த விசேட அறிக்கையாளர்கள் கள விஜயங்களை நடாத்தி, பங்குதாரர்களுடன் கலந்தாலோசனை நடாத்தி, ஆதாரங்களை சேகரித்து, ஜெனிவாவில் உள்ள பேரவை மற்றும் நியூயோர்க்கில் உள்ள பொதுச் சபை ஆகிய இரண்டிலும் தங்கள் அறிக்கைகளை சமர்ப்பிப்பார்கள்.

2021ஆம் ஆண்டு நிலவரப்படி, பேரவையில் காலநிலை மாற்றம் குறித்த நிபுணர்கள் முதல் தன்னிச்சையான தடுப்பு மற்றும் மரணதண்டனை, தீவிர வறுமை, கல்வி, நீர் மற்றும் சுகாதாரத்திற்கான சமமான சர்வதேச ஒழுங்கு உள்ளிட்ட 45 கருப்பொருள் விசேட நடைமுறைகள் உள்ளன.

இலங்கைக்கு குறிப்பிடத்தக்க வகையில், "அனைத்து மனித உரிமைகள், குறிப்பாக பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளை முழுமையாக அனுபவிப்பதில் வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் அரசுகளின் பிற சர்வதேச நிதிக் கடப்பாடுகளின் விளைவுகள் தொடர்பான சுயாதீன நிபுணர்" என்று அழைக்கப்படும் ஒரு விசேட நடைமுறை உள்ளது.

ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், ஒவ்வொரு பிராந்தியமும் அதன் மனிதகுலத்தின் பங்கை விகிதாசாரமாக பிரதிநிதித்துவப்படுத்துவதுடன் ஒவ்வொரு உறுப்பினரும் சமமான வாக்கினைப் பெற்று 47 உறுப்பினர்களுக்கு சமமான புவியியல் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படுவதுடன், எந்த உறுப்பினருக்கும் வீட்டோ அதிகாரம் இல்லை.

இந்த விடயம் உலகத்தின் அபிப்பிராயத்தை நியாயமான முறையில் பிரதிபலிக்க முயற்சிக்கிறது. ஜெனீவாவில் தீர்மானம் தொடர்பான விடயங்கள் மற்றும் அவர்களின் வாக்கு பதிவுகள் உலக சமூகத்துடனான இலங்கையின் உறவையும் அதன் சர்வதேச உறவுகளின் நடத்தையையும் பிரதிபலிக்கின்றன.

UNHRC இன் வாக்குகளின் முடிவுகள், உலக அமைப்பில் அதன் தேசிய நலன்களை சமரசம்செய்யும் இலங்கையின் இயலளவிற்கான சுயாதீனமான சாட்சியாக நிற்கின்றது.

முதல் தீர்மானமானது, சக்திவாய்ந்த பிரிவினைவாத-பயங்கரவாத போராளிகளான தமிழீழ விடுதலைப் புலிகளை இலங்கை அரசு வெற்றிகொண்டு மூன்று தசாப்தங்கள் பழமையான போரை முடிவுறுத்தி ஒரு வாரத்திற்குப் பிறகு, 2009 மே 27 அன்று, பேரவையின் விசேட அமர்வில் நிறைவேற்றப்பட்டது.

2009 இல் போருக்குப் பின்னர் உடனடியாக, அவ்வாறான காலத்தில் இலங்கை தனக்கு ஆதரவாக 29 வாக்குகளைப் பெற முடிந்தது (60% உறுப்பினர்களுக்கு மேல்) குறிப்பிடத்தக்கதென்பதுடன்,  அதுவே இதுவரை பெற்ற அதிகப்படியான வாக்குகள் என்பதுடன், யுத்தம் முடிந்து 13 வருடங்கள் கழித்து சமாதான காலத்தில் அது இதுவரை பெற்றவற்றில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றது.

சபையில் இலங்கைக்கான வாக்குகள் 2009ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாகக் குறைந்துள்ளது, 15க்கு மேல் பெற முடியவில்லை என்பதுடன் 2022 இல் 7 ஆக குறைந்தது. சர்வதேச விவகாரங்களில் இலங்கையின் நடத்தையின் ஒரு முக்கியமான அடிப்படைக் காரணியை அந்த எண்ணிக்கைகள் தெளிவாகப் பிரதிபலிப்பதால், அவை முக்கியமானவையாகும்.

மனித உரிமைகள் பேரவை மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆகியன முழு ஈடுபாட்டிற்கும் அளவற்ற ஆதரவிற்கும் தகுதியானவை என இலங்கை கருதியதன் மூலம், ஐ.நா அமைப்பில் பேரவை வகிக்கும் வகிபாகத்தை வடிவமைப்பதில் செயலூக்கமான பங்கேற்பாளராக மாறியதன் மூலமாகவே அதிகமான வாக்குகள் கிடைத்தன.

பேரவை இயங்கும் "விதிமுறைகளில்" செல்வாக்கு செலுத்துதல், பழையதை சவால் செய்தல் மற்றும் புதியதை வடிவமைக்க உதவுதல் போன்ற இலங்கையின் இந்த வகையான இராஜதந்திரத்தை "நெறிமுறை தொழில்முயற்சியாண்மை" என்று நிபுணர்களின் ஆய்வுகள் விவரித்துள்ளன.

பழைய முறைமை மனித உரிமைகள்  பேரவையை பக்கச்சார்பானது என மதிப்பிழக்கச் செய்து, திறத்துவ நாடுகளால் அது மூடப்பட்டு, 2006 இல் புதிய மனித உரிமைகள் பேரவையால் பிரதியிடப்பட்ட நேரத்தில் இது ஒரு முக்கியமான பங்களிப்பாகும். அந்த நேரத்தில், இலங்கையின் இராஜதந்திரம் மனித உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பது அதன் தேசிய நலனுக்கு முரணானது என்று கருதுவதில்லை.

2009 ஆம் ஆண்டு இலங்கையின் வெற்றியை இழிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் உள்நாட்டில் பிரச்சாரம் செய்த போதிலும், அதன் இராஜதந்திரம் பேரவையின் பக்கத்தில், தேசிய நலனுக்காக நம்பிக்கையுடன் நிற்கும் அதே வேளையில், அனைத்து நாடுகளுடனும், ஒவ்வொரு மனித உரிமை அமைப்புகளுடனும், விடுதலைப் புலிகளின் கருத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒவ்வொரு அரச சார்பற்ற நிறுவனங்களுடனும், பகிரங்க கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்களில் ஈடுபட்டதுடன் வற்புறுத்தலைப் பயன்படுத்தி, வாக்கெடுப்பில் வெற்றிபெற அரசுகளின் உறுதியான கூட்டணிகளை கட்டியெழுப்பியது.

இந்த அணுகுமுறையானது ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்காவின் பெரும்பாலான பகுதிகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்ததுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் (12) கூட்டு வாக்குககள் மட்டுமே எதிராக வாக்களித்தது. பின்னோக்கிப் பார்த்தால், இந்த அணுகுமுறை அரிதானதுடன் அதன் சாதனை தனித்துவமானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

பேரவை மற்றும் சில சமயங்களில் ஒட்டுமொத்த ஐ.நா அமைப்பும் கொழும்பினால் குரோதத்துடன் கருதப்பட்டபோது எண்ணிக்கையில் செங்குத்தான வீழ்ச்சி ஏற்பட்டதுடன், அதன் இராஜதந்திரம் நடைமுறையில் உள்ள நிர்வாகத்தின் சுய உருவத்தின் பிரதிபலிப்பாக மாறியது, சில சமயங்களில் அதீத நம்பிக்கை மற்றும் மற்றவர்கள் இலங்கையை திறத்துவ நாடுகளின் அல்லது புலம்பெயர் தமிழர்களின் உலகளாவிய சதியின் பலிக்கடாவாகக் கருதினர்.

கொழும்பின் பிரச்சாரம் அதன் நிலைப்பாட்டை பேரவைக்கு உணர்த்துவதற்கும், அதன் தலைமையினால் வழங்கப்பட்ட போர்க்கால மற்றும் போருக்குப் பிந்தைய வாக்குறுதிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைவதற்கும் தவறியமை, பேரவையில் மீளவும் வலியுறுத்தப்பட்டது.

மனித உரிமைகள் பேரவை என்பது மற்ற நாடுகளின் மீது விதிக்கப்பட்ட அந்நிய அல்லது சுருக்கமான யோசனை அல்ல. இது ஐ.நா. திறத்துவ நாடுகளால் ஆனதுடன் அதன் உறுப்புரிமை ஒரு அரசின் நடத்தை மற்றும் பிரச்சாரம் மூலமாக வற்புறுத்துவதற்கு திறந்திருக்கும்.

மேலாதிக்க சக்திகள் பெரும்பாலும் உலகளாவிய ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதுடன் தன்னார்வ பங்களிப்புகள் மூலம் பல ஐ.நா முன்முயற்சிகளுக்கு நிதியளிப்பதால் பல விடயங்களில் ஒரு தனித்துவமான நன்மையைக் கொண்டுள்ளன.

எவ்வாறாயினும், ஐக்கிய நாடுகள் சபையின் சமமான திறத்துவ நாடு என்ற வகையில், அந்த நன்மைகளைக் குறைப்பதற்கு இலங்கை பங்களிக்க முடியும். பேரவையின் உறுப்புரிமையின் 'சமமான புவியியல் பரம்பலுக்கான' தெற்குலகின் முன்முயற்சியானது அத்தகைய நிரூபிக்கப்பட்ட ஒரு சாதனையாகும்.

தொடர்ந்து பயன்படுத்தப்பட்டாலும், ஜெனிவாவில் இலங்கை தனது மோசமான செயற்திறனை விளக்குவதற்கு முன்வைத்த "வல்லாதிக்கமுள்ள நாடுகள்" என்ற வாதம், 2009 இல் அந்த தடைகளை மிக மோசமான நேரத்தில் ஆக்கப்பூர்வமான இராஜதந்திரத்தின் மூலம் வென்றபோது ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை. எவ்வாறாயினும், அரசினாலேயே மனித உரிமைகளுக்கு ஆரோக்கியமான மரியாதை வழங்கப்படாத நிலையில், இராஜதந்திரம் எவ்வளவு திறமையானதாக இருந்தாலும், ஒரு மட்டுப்படுத்தப்பட்ட, அதிகளவில் ஓரங்கட்டப்பட்ட வகிபாகத்தை மட்டுமே வகிக்க முடியும்.

“Mission Impossible – Geneva” (விஜித யாப்பா, கொழும்பு, 2017) எனும் நூலினை சஞ்ச டி சில்வா ஜயதிலகா எழுதியுள்ளார்.

Factum என்பது இலங்கையை தளமாகக் கொண்ட சர்வதேச உறவுகள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் மூலோபாய தொடர்புகள் பற்றிய ஆசியாவை மையமாக கொண்ட சிந்தனைக் குழுவாகும், அதனை www.factum.lk மூலமாக அணுகலாம்.