RTI ஆணைக்குழுவின் உத்தரவுக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் பாராளுமன்றம்

RTI ஆணைக்குழுவின் உத்தரவுக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் பாராளுமன்றம்

பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான  தகவல்களை வெளியிடுமாறு தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு பணித்த உத்தரவை எதிர்த்து இலங்கை பாராளுமன்றம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான ருவான் பெர்னாண்டோ மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் முன்னிலையில் இந்த மேன்முறையீடு அண்மையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்படி எதிர்வரும் 20ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு புதிய நீதிபதிகள் குழாம் ஒன்றையும் நியமிக்க தீர்மானிக்கப்பட்டது.

பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க மற்றும் பிரதி செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோர் தாக்கல் செய்த மேன்முறையீட்டில், தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் “அத” பத்திரிகையின் ஊடகவியலாளர் சாமர சம்பத் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

ஊடகவியலாளர் சாமர சம்பத் 2010ஆம் ஆண்டு முதல் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை பிரகடனப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வெளியிடுமாறு பாராளுமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அது பாராளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

அதனையடுத்து ஊடகவியலாளர் சாமர சம்பத், தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில் மேன்முறையிட்டிருந்த நிலையில், இது தொடர்பான தகவல்களை வெளியிடுமாறு  பாராளுமன்றத்திடம் ஆணைக்குழு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக பாராளுமன்றம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளது.