அரபுக் கல்லூரி பதிவு நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்

அரபுக் கல்லூரி பதிவு நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்

தகவல் அறியும் சட்டம் மூலம் விபரம் தெரிவிப்பு

அரபுக் கல்லூரிகளை பதிவுசெய்யும் நடவடிக்கையினை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவித்தது.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற ஈஸ்டர் தற்கொலை தாக்குதலினை அடுத்தே இந்த தற்காலி இடைநிறுத்தம் அமுல்படுத்தப்பட்டது எனவும் திணைக்களம் குறிப்பிட்டது.

எனினும் 65 அரபுக் கல்லூரிகள் பதிவுக்காக விண்ணப்பித்துள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்தது.

தகவலறியும் சட்டத்திற்கமைவாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல் அறியும் கோரிக்கைக்கு பதில் வழங்கும் போதே முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மேற்குறிப்பிட்ட தகவலை வெளியிட்டது.

குறித்த தகவலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

"கடந்த 1981ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த திணைக்களத்தில் இதுவரை 317 அரபு கல்லூரிகள் பதிவுசெய்யப்பட்டடுள்ளன.

இதில் அதிகூடிய 41 அரபுக் கல்லூரிகள் அம்பாறை மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக புத்தளம் மாவட்டத்தில் 37 அரபுக் கல்லூரிகளும், திருகோணமலை மாவட்டத்தில் 29 அரபுக் கல்லூரிகளும், கண்டி மாவட்டத்தில் 28 அரபுக் கல்லூரிகளும், கொழும்பு மாவட்டத்தில் 26 அரபுக் கல்லூரிகளும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 அரபுக் கல்லூரிகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமயம் சார்ந்த விடயம் என்பதனால் அரபுக் கல்லூரிகளை பதிவுசெய்யும் நடவடிக்கையினை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு கல்வி அமைச்சு வழங்கியுள்ளது. இதனால், திணைக்களத்தின் நடவடிக்கைகளில் ஒன்றாக அரபுக் கல்லூரிகளின் விடயத்தினை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.

அல் ஆலிம் பகுதி – 01 மற்றும் பகுதி – 02 ஆகியன பதிவுசெய்யப்பட்ட அரபுக் கல்லூரிகளுக்காக திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட பாடத்திட்டமாகும். இதேவேளை, மார்க்கக் கல்வி மற்றும் உலகக் கல்வி ஆகியவற்றினை போதிக்கும் அரபுக் கல்லூரிகள் தொடர்பான தகவல்களை திரட்டும் பணியினை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தற்போது முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.