RTI ஆணைக்குழுவின் உத்தரவினை அமுல்படுத்தாத அரச அதிகாரிகளுக்கு நீதிமன்றினால் அழைப்பாணை

RTI ஆணைக்குழுவின் உத்தரவினை அமுல்படுத்தாத அரச அதிகாரிகளுக்கு நீதிமன்றினால் அழைப்பாணை

லக்மால் சூரியகொட

தகலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் உத்தரவினை அமுல்படுத்தாத அரச அதிகாரிகளை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆணைக்குழுவின் உத்தரவினை அமுல்படுத்தாத அரச அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான  நடவடிக்கைகளை தற்போது ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது.

இதன் ஒரு அங்கமாக சுகாதார அமைச்சின் இரண்டு தகவல் அதிகாரிகளுக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் தகலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவினால் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் தகலறியும் உரிமைச் சட்டம் அமுலப்படுத்தப்பட்டு நேற்று (03) வெள்ளிக்கிழமையுடன் ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.   இக்காலப் பகுதியில் பல அரச அதிகாரிகள் தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் உத்தரவினை அமுல்படுத்தாதுள்ளனர்.

இவ்வாறன நிலையிலேயே தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவினால் அதன் உத்தரவினை அமுல்படுத்தாமல் தகவல் வழங்க மறுத்த அதிகாரிகளுக்கு எதிரான முதலாவது மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களின் உள்ளடக்கங்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு 2021.09.04ஆம் திகதி தகவலறியும் ஆணைக்குழு உத்தரவிட்டது.

குறித்த உத்தரவினை அமுல்படுத்தாத சுகாதார அமைச்சின் தகவல் அதிகாரிகளான வீ.டி.எஸ். சிறிவர்த்தன மற்றும் ஜே.சீ. கம்லத் ஆகியோருக்கு எதிராகவே இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணைகள் கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குறித்த இரண்டு தகவல் அதிகாரிகளையும் எதிர்வரும் மார்ச் 21ஆம் திகதி மன்றில் ஆஜராவதற்கான அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டது.

இதன்போது தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு சார்பில் சட்டத்தரணி ஹிமாலி குலரத்ன மன்றியில் ஆஜராகியிருந்தார்.  

இச்சட்டத்தின் கீழ் குற்றவாளியாக நீதிமன்றத்தின் ஊடாக தீர்ப்பளிக்கப்படுகின்றவருக்கு 50,000 ரூபாவிற்கு மேற்படாத தண்டப்பணம் அல்லது இரண்டு வருடங்களுக்கு மேற்படாத சிறைத் தண்டனை அல்லது மேற்படி இரண்டு தண்டனைகளையும் வழங்க முடியும் என தகவலறியும் உரிமைக்கான சட்டத்தின் 39ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.