இலங்கையின் கல்வி வளர்ச்சியும் நவீன மாற்றங்களும்

இலங்கையின் கல்வி வளர்ச்சியும் நவீன மாற்றங்களும்

ஈஸ்வரி குமார்

உலகை மாற்றக்கூடிய சக்தி வாய்ந்த ஆயுதமே கல்வி என்று முழங்கியவர் நெல்சன் மண்டேலா.  அவருடைய வார்த்தை பொய்யாகவில்லை.

கல்வியே ஒருவனது உள்ளத்தையும் அறிவினையும் பயன்படுத்தும் மாபெரும் சக்தியாகும் கல்வி பற்றி பல அறிஞர்களும் பல்வேறு கருத்துக்களை முன் வைத்துள்ளனர்.

அந்த வரிசையில், "ஆயிரம் கோயில்கள் கட்டுவதை விட ஒரு பள்ளிக்கூடம் கட்டுவது சிறந்தது" என்று மகாகவி சுப்ரமணிய பாரதியாரும் கல்விக்கு முதலிடம் தந்துள்ளார்.

கல்வி, கண்களுக்கு ஒப்பானது. ஒருவரின் கல்விக் கண்களைத் திறந்தது என்பது இறைவனுக்கு நாம் செய்யும் உபகாரமாகும். ஆரம்ப காலத்தில் குருகுல கல்வி முறையே காணப்பட்டது. இதில் மன்னர்களின் புதல்வர்கள் சிறந்த அரசன் ஆவதற்கு, வில்வித்தை, அறிவு பயிற்சி, புலப்பயிற்சி என்பன வழங்கப்பட்டன.

இது குறுகிய நோக்கம் கொண்டதாக இருந்தது. காலப்போக்கில் இந்நிலை மாற்றமடைந்து பரந்த நோக்கம் கொண்ட கல்வி முறை உருப்பெற்றது.

அந்நிய ஆக்கிரமிப்பின் பின்வந்த காலங்களில் கல்வியில் மாற்றம் ஏற்பட்டது. 1505இல் இலங்கையை ஆக்கிரமித்த போர்த்துக்கேயர் தமது மதம், மொழி என்பவற்றை பரப்புவதற்கு அனைவருக்கும் கல்வியை வழங்கினர்.

அப்போது ஆரம்ப பாடசாலைகள், கல்லூரிகள், அனாதை பாடசாலைகள் என்பன உருவாக்கப்பட்டன. இதன்பின் 1658இல் இலங்கையை கைப்பற்றிய ஒல்லாந்தர் தமது புரோட்டஸ்டாண்டு மதத்தை, பரப்பும் நோக்கில் 15 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் கட்டாய கல்வியினை வழங்கினர். 

அத்துடன், கல்வியில் கலைத்திட்டம், பாட உள்ளடக்கம், விடுமுறை ஒழுங்கு, ஆசிரியரின் அடிப்படைத் தகமை தொடர்பான கட்டளைகள் போன்ற விடயங்களை உள்ளடக்கியமை குறிப்பிடத்தக்க  அம்சமாகும்.

தொடர்ந்து 1798 தொடக்கம் 1930 வரையான காலப்பகுதியில் இலங்கையை ஆட்சி செய்த ஆங்கிலேயர் கல்வியில் மாறாத சில தடங்களை உருவாக்கி சென்றனர்.

இதன்போது பாடசாலை ஆணைக்குழு உருவாகியது. பாடசாலைகள் அனைத்தும் அரசாங்க மிஷினரி  பாடசாலைகளின் மேற்பார்வைக்கு உட்படுத்தப்பட்டன.

இவ்வாறு அன்னியர் ஆட்சியில் படிப்படியாக வளர்ச்சி கண்ட இலங்கையின் கல்வியானது 1948 ஆம் ஆண்டு சுதந்திரத்தின் பின் 1970களில் வேலை இல்லா திண்டாட்டம் ஏற்படும் அளவிற்கு, கல்வியின் பாதை விரிவாக்கப்பட்டு அதிகளவு பட்டதாரிகள் உருவாகினர்.

அதனைத் தொடர்ந்து 1972 கல்வி சீர்திருத்தம், 1997 கல்வி சீர்திருத்தம் என பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.  இன்று 1939 கல்வி சட்டமே நடைமுறையில் உள்ளது.

இன்றைய காலகட்டத்தில் இலங்கையின் கல்வி முறை பல நவீன மாற்றங்களுடன் காணப்படுகிறது. 1997ஆம் ஆண்டு கல்வி சீர்திருத்தத்தில் தொடர்பாடல் பற்றிய கற்கைநெறி கொண்டுவரப்பட்ட போதிலும், ஆரம்பத்தில் அதிக ஈர்ப்பு இருக்கவில்லை.

எனினும் 2013இல் தொழில்நுட்பக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதன் விளைவாக, இது பாரிய வளர்ச்சியை கண்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

1983க்குப் பின்னர் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் கணினிவள நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு கணினி பயிற்சிகள் வழங்கப்பட்டன. இன்று கணினி அறிவு இல்லாதோர் மிக மிகக் குறைவு என்றே கூற வேண்டும்.

மேலும் பாடசாலைகளில் தரம் 1 தொடக்கம் 13 வரை கட்டாய கல்வியும், க.பொ.த சாதாரண தரத்தின் பின் தாம் விரும்பும் தொழில்நுட்ப பாட நெறியை கற்பதன் மூலம் தொழில் வாய்ப்பை பெறக்கூடிய நிலை காணப்படுவது இன்றைய இலங்கையின் கல்வி வளர்ச்சியை காட்டுகிறது.

மேலும் இலத்திரனியலில் செயல்படுத்தப்படுகின்ற கல்வி முறையும் படிப்படியாக வளர்ச்சி அடைந்து வருகிறது. உதாரணமாக, பல்கலைக்கழகங்களில்  தொலைக்கல்வி முறை, நுழைவுப் படிவங்கள் சமர்ப்பித்தல் இலத்திரனியல் மயமாக்கப்பட்டுள்ளமையும் கல்வி வளர்ச்சியின் ஓர் முக்கிய அம்சமாகும்.

இவ்வாறு, கல்வியில் துரித வளர்ச்சி கண்டுள்ள இலங்கை நாடு எதிர்காலத்தில் மென்மேலும் கல்வி துறையில் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும், என்பது என் அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.