இஸ்ரேலினால் இலங்கைக்கு இரண்டு வென்டிலேட்டர்கள் நன்கொடை

இஸ்ரேலினால் இலங்கைக்கு இரண்டு வென்டிலேட்டர்கள் நன்கொடை

இஸ்ரேல் அரசாங்கத்தால் இரண்டு வென்டிலேட்டர்களை (வி.ஜி. 70 வென்டிலேட்டர் மற்றும் விவோ 65 மேம்பட்ட வீட்டுப் பராமரிப்பு வென்டிலேட்டர்) இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

குறித்த வென்டிலேட்டர்கள் வெளியுறவுச் செயலாளர் ஓய்வுபெற்ற அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகேயினால் சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் எஸ்.எச். முனசிங்கவிடம் கடந்த புதன்கிழமை கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கொழும்பிலுள்ள இஸ்ரேலுக்கான கௌரவ தூதுவர் விக்கி விக்ரமசிங்கவும் கலந்துகொண்டார். இந்த இரண்டு வென்டிலேட்டர்களும் கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ள புதுடில்லியில் உள்ள இஸ்ரேலியத் தூதரகத்தின் மூலம் இந்த இரண்டு வென்டிலேட்டர்களும் நன்கொடையாக வழங்கப்பட்டன.

கடந்த டிசம்பர் 10ஆம் திகதி இவை நன்கொடையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதுடில்லியில் வதியும் இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் கலாநிதிரொன் மல்காவுடனான மெய்நிகர் (zoom) சந்திப்பின் போது, இலங்கையின் நன்றிகளை வெளியுறவுச் செயலாளர் கொலம்பகே இஸ்ரேல் அரசாங்கத்திற்குத் தெரிவித்தார்.

விவசாயம், தகவல் தொழில்நுட்பம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் திறன் அபிவிருத்தி உள்ளிட்ட பல துறைகளிலான எதிர்கால ஒத்துழைப்புக்கான வழிகள் குறித்தும் இந்த மெய்நிகர் சந்திப்பின் போது இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.