முல்லைத்தீவில் தேங்காய் எண்ணெய் உற்பத்திசாலைகள் நிறுவ ஜப்பான் உதவி

முல்லைத்தீவில் தேங்காய் எண்ணெய் உற்பத்திசாலைகள் நிறுவ ஜப்பான் உதவி

முல்லைத்தீவு மாவட்டத்தில் தேங்காய் எண்ணெய் உற்பத்தி தொழிற்சாலைகளை நிறுவுவதற்கு ஜப்பானிய அரசாங்கம் சுமார் 12 மில்லியன் ரூபா நிதியுதவியினை வழங்க முன்வந்துள்ளது.

Grant Assistance for Grassroots Human Security Projects (GGP) என்பதனூடாக இந்த உதவிகளை வழங்க ஜப்பானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் சுகியாமா அகிரா மற்றும் Tech Ceylon Social Ventures Guarantee Limited இன் செயற்பாட்டு பணிப்பாளர் நடராஜா செந்தில்ரூபன் ஆகியோருக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்மொன்று கைச்சாத்திடப்பட்டது.

இந்த நிகழ்வில் கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தளத்தில் நேற்று (09) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இந்தத் திட்டத்தினூடாக The Tech Ceylon Social Ventures இனால் விசுவமடு, துணுக்காய் மற்றும் நெடுங்கேணி ஆகிய பிரதேசங்களிலுள்ள மூன்று கூட்டுறவு சங்கங்களுக்கு சிறியளவிலான தேங்காய் எண்ணெய் உற்பத்தி பகுதிகளை நிறுவுவதற்கு உதவிகள் வழங்கப்படும்.

பெருமளவான தென்னை மரங்களைக் கொண்டுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த வசதி ஏற்படுத்திக் கொடுப்பதனூடாக, அங்குள்ள சமூகத்தவர்களுக்கு மேலதிக வருமானத்தை ஈட்டிக் கொள்வதற்கு வாய்ப்புக் கிடைப்பதுடன், சிவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்த மூன்று கூட்டுறவு சங்கங்களுக்கு அவற்றின் செயற்பாடுகளை வலிமைப்படுத்த உதவியாக அமைந்திருந்தது.

இந்த உதவித் தொகையினூடாக, கூட்டுறவு சங்கங்களின் நிதிப் பாதுகாப்பு மற்றும் நிலைபேறாண்மையை உறுதி செய்வதற்கு மேலதிகமாக, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட மாகாணத்தில் பாரம்பரிய தொழிற்துறை செயற்பாடுகளில் திறன்கள் மற்றும் அனுபவங்களை மேம்படுத்துவதற்கு உதவியாக அமைந்திருக்கும்.

இந்த நன்கொடையைப் பெற்றுக்கொண்டதைத் தொடர்ந்து Tech Ceylon Social Ventures Guarantee Limited இன் செயற்பாட்டு பணிப்பாளர் நடராஜா செந்தில்ரூபன் கருத்து தெரிவிக்கையில்,

"அதிகளவு வறுமை நிலவும் பிராந்தியத்தில் முன்னெடுக்கப்படும் இந்த முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்துக்கு ஜப்பானிய அரசாங்கம் உதவிகளை வழங்க முன்வந்துள்ளதையிட்டு Tech Ceylon மிகவும் மகிழ்ச்சியடைகின்றது.

இலக்கு வைக்கப்பட்ட இந்த விவசாயப் பணியை மேம்படுத்துவதனூடாக, கிராமிய வருமானத்தை அதிகரித்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதுடன், முல்லைத்தீவில் தொழிற்துறை செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கு உதவியாக அமைந்திருக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம்" என்றார்.