சவூதி அரேபியாவின் எண்ணெய் சுத்திரிப்பு நிலைய தாக்குதலுக்கு கண்டனம்

சவூதி அரேபியாவின் எண்ணெய் சுத்திரிப்பு  நிலைய தாக்குதலுக்கு  கண்டனம்

ஹெளதி கிளர்ச்சியாளர்களினால் ஆளில்லாத சிறிய விமானங்களை ஏவி சவூதி அரேபியாவின் 'குராய்ஸ்' மற்றும் 'அப்கைக்' ஆகிய இடங்களிலுள்ள அந்நாட்டு எரிபொருள் நிறுவனமான அரம்கோவின் பெரிய எண்ணெய் சுத்திரிப்பு நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக இன நல்லுறவிற்கான தேசிய திட்டத்தின் தலைவரான அப்துல் காதர் மசூர் மௌலான தெரிவித்தார்.  

இது தொடர்பாக விசேட ஊடக அறிக்கையொன்றினை அப்துல் காதர் மசூர் மௌலான நேற்று (18) வியாழக்கிழமை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கு தொடர்ச்சியாக சவூதி அரேபிய அரசாங்கம் பல உதவிகளை மேற்கொண்டு வருகின்றது. இலங்கையின் நட்பு நாடான சவூதி அரேபியாவில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலை இலங்கை வாழ் மக்கள்  சார்பாக கண்டனம் தெரிவிக்கின்றேன்.

சில நாடுகளின் உதவியுடன் பாரிய எண்ணெய் ஏற்றுமதியினை மேற்கொள்ளும் சவூதி அரேபியா மீது இந்த தாக்குல் மேற்கொள்ளப்பட்டாலும், இது முழு உலகத்தின் பொருளாதாரத்தினையும் பாதிக்கும் செயலாகும். மிலேச்சத்தனமான இந்த செயற்பாட்டினை ஒருபோதும் யாராலும் அங்கீகரிக்க முடியாது.

ஹெளதி கிளர்ச்சியாளர்களினால் நடத்தப்படும் இது போன்ற தாக்குதல்கள் உலகில் பல்வேறு பிரச்சினைகளைத் தோற்றுவிக்கின்றன. இது போன்ற சம்பவங்கள் எங்கு இடம்பெற்றாலும் அதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்" என்றார்.