ஜனாஸா எரிப்பு தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சு நடத்தினேன்: இம்ரான் கான்

ஜனாஸா எரிப்பு தொடர்பில் அரசாங்கத்துடன்  பேச்சு நடத்தினேன்: இம்ரான் கான்

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் பலவந்தமாக எரிக்கப்படுவது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு நடத்தியுள்ளேன் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.

"இந்த விவாகரம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடனும் பேச்சு நடத்தினேன். விரைவில் சாதகமான பதில் கிடைக்கும் என்று நம்புகின்றேன்" என அவர் குறிப்பிட்டார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வருகை தந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றது.

சங்கரில்லா ஹோட்டேலில் இடம்பெற்ற இந்ந சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது. இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போதே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்; மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இலங்கை முஸ்லிம்கள் மற்றும் உலக முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதாக இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் "விடியல்" இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

இலங்கையில் சிறுபான்மையாக வாழுகின்ற முஸ்லிம்கள் பெரும்பான்மை சமூகத்தினரை தூண்டும் விதமாக நடந்துகொள்ளாது அவர்களுடன் ஒற்றுமையாக வாழுமாறு பாகிஸ்தான் பிரதமர் இதன்போது வேண்டுகோள் விடுத்தார்.