நாம் நினைத்தால் "ஆப்கானிஸ்தானின் மனிதாபிமான நெருக்கடியை" தடுக்க முடியும்

  நாம் நினைத்தால் "ஆப்கானிஸ்தானின் மனிதாபிமான நெருக்கடியை"  தடுக்க முடியும்

சுமார் 22.8 மில்லியன் ஆப்கானியர்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையை  எதிர்கொள்கின்றனர்

ஷா மஹ்மூத் குரேஷி
வெளியுறவு அமைச்சர் - பாகிஸ்தான்

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உலகநாடுகளின் உடனடி அவதானம் தேவைப்படுகிறது. ஆப்கானிஸ்தானை பாதிக்கும் மனிதாபிமான பேரழிவானது இன்றைய உலகில் காணப்படும் மிக மோசமான பேரழிவாகும்.  ஐ.நா அமைப்பும் கூட  இப்பேரழிவை எச்சரிக்கின்றது.

பல தசாப்தங்களாக யுத்தம் மற்றும் பாதுகாப்பின்மைக்கு முகம்கொடுத்த, பாதிப்புகளுக்கு உள்ளாகிய ஆப்கானியர்களுக்கு  உதவிக்கரம் நீட்டுமாறு ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

மோசமான விளைவுகள் இருந்தபோதிலும், இந்த பேரழிவு தடுக்கபட முடியுமான ஒன்றாகும். முக்கியமான உணவு, மருந்துகள் மற்றும் பிற உயிர்காக்கும் பொருட்களை திரட்டவும் வினயோகிக்கவும் உதவிய பல நன்கொடையாளர்கள், ஐக்கிய நாடுகளின் அமைப்பு, சர்வதேச அமைப்புகள், மனிதாபிமான முகவர் நிலையங்கள் ஆகியவற்றின் தாராள மனப்பான்மைக்கு எமது நன்றிகள்.

வளங்கள் மற்றும் நிதிக் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானுக்கு   30 மில்லியன் டாலர்களுக்கு மேல் மனிதாபிமான உதவிகளை வழங்குகிறது. மேலும் மனிதாபிமான அத்தியாவசிய பொருட்களின் விநியோகங்களுக்காக பாகிஸ்தானின் வான் மற்றும் தரைப்பாதையினை பயன்படுத்துகிறது.

மேலும் எல்லை சார்ந்த வர்த்தகம் மற்றும் தேவையுள்ள ஆப்கானியர்களின் எல்லை நகர்வையும் பாகிஸ்தான் அனுமதித்துள்ளது. ஆனாலும்,இன்னும் மனிதாபிமானம் மற்றும் பிற உதவிகள் அங்கே தேவைப்படுகிறது.

ஐ.நா மதிப்பீட்டின் அடிப்படையில், அரை மில்லியனுக்கும் அதிகமான ஆப்கானியர்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர். சுமார்  22.8 மில்லியன் ஆப்கானியர்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறைக்கு  முகம் கொடுக்கின்றனர்.

உலக உணவுத் திட்டத்தின்படி, "இந்த குளிர்காலத்தில், மில்லியன் கணக்கான ஆப்கானியர்கள் பட்டினியில் வாடுவதா  அல்லது இடம்பெயர்வதா என்ற நிலைமைக்கு  தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் நாட்டை விட்டு வெளியேற முயற்சிப்பதாக ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. நீடித்த மோதலின் ஒட்டுமொத்த விளைவுகள், கிராமப்புறங்களில் நீடித்த வறட்சி, நகர்ப்புறங்களில் பொருளாதார நடவடிக்கைகளில் இடையூறு, மற்றும் கொவிட் 19 இன் சமூக-பொருளாதார தாக்கங்கள் ஆகியவை ஆப்கானிஸ்தான் மக்களை கடுமையான கஷ்டங்களுக்கு உற்படுத்தியுள்ளன.

கடுமையான குளிர், தொலைதூரத்தன்மை மற்றும் சிரமமான வாழ்க்கை வசதிகள் காரணமாக ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைப்பது  சவாலான ஒரு விடயமாக காணப்படுகிறது. 

ஒரு பலவீனமான நிர்வாக அமைப்பு, கடுமையான பணப்பற்றாக்குறை மற்றும் நிதித் தடைகள் ஆகியவை ஆப்கானிஸ்தானில் தற்போதைய நிலைமைக்கு காரணங்களாகும். இதன் விளைவாக நெருக்கடிகள் வரலாம். ஆனால், இந்நெருக்கடியானது தவிர்க்கப்பட முடியுமான ஒன்றாகும்  மற்றும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

பொருளாதாரத் தடைகள் மற்றும் சொத்துக்கள் முடக்கம் ஆனது ஆப்கானிஸ்தானின் வங்கி முறையை முடக்கி, மனிதாபிமான நோக்கங்களுக்காக நிதி பரிமாற்றத்தைத் தடுக்கிறது. மேலும், பொது சேவைகள், கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற முக்கியமான துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதிலும் தடையாக உள்ளது.

உயிர்களைக் காப்பாற்றவும், அடிப்படைச் சேவைகளைச் செயல்படுத்தவும், பொது நிர்வாகத்தை ஓரளவு சரி செய்யவும் பொருளாதாரத் தடைகளை நீக்குவது குறித்து மறுபரிசீலனை செய்யப்படுவது அவசியமான ஒன்றாகும். இதற்கான தாமதங்கள், நிதி அமைப்பின் எதிர்பார்த்திராத அபாயங்களான ஒழுங்குபடுத்தப்படாத பணப் பரிமாற்றங்களை ஏற்படுத்தலாம். இத்தகைய சூழ்நிலையானது, பயங்கரவாதம் மற்றும் கடத்தலுக்கு எதிரான நமது பகிரப்பட்ட நோக்கங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தலாம்.

ஆப்கானிஸ்தான் மக்களைக் கைவிடுவதற்கான நேரம் இதுவல்ல. ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுதலானது பாரிய விளைவுகளை தரும். மக்கள் இடப்பெயர்வு, நாட்டில் உறுதியற்ற தன்மை மற்றும் மோதல்கள்,  நாட்டில் இருந்து வெளிவரும் பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் போன்ற சர்வதேச சமூகம் எதைத் தவிர்க்க விரும்புகிறதோ  அவையனைத்தும்  இதனூடாக ஏற்படும்.

ஆப்கானிஸ்தானில் மனித உரிமைகள் நிலை மற்றும் அதிகாரப் பகிர்வின் தன்மை குறித்து சர்வதேச சமூகம்  கரிசனையுடன் செயற்படுகிறது. இக்கரிசனைகள் சிவில், அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாச்சாரம் போன்ற அனைத்து விடயங்களிலும் காணப்பட வேண்டும்.

நாட்டிற்குள் ஆப்கானியர்களுக்கு உதவுவது செலவு குறைந்த மற்றும் நீடித்த தீர்வாகும். மேலும், அதற்கு நாம் சிலரைப் பற்றி மட்டும் சிந்திக்காமல் அனைவரை பற்றியும் சிந்திக்க வேண்டும்.

சாதாரண ஆப்கானியர்கள் தங்கள் முன்னைய ஆட்சியாளர்களின் தோல்விகளுக்கு பொறுப்பானவர்கள் அல்ல. மேலும் , ஆப்கானிஸ்தானில்  சமீபத்திய நிகழ்வுகளுக்கு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களும் அல்ல.

இந்த நெருக்கடிக்கு மத்தியில் அமைதி, பாதுகாப்பு, அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகளை பரஸ்பரம் வலுப்படுத்தும் வழிகளில்  ஆப்கானிஸ்தானுக்கான முன்னேற்ற பாதையினை அமைப்பதற்கான ஒரு  சாத்தியப்பாடு காணப்படுகிறது.

சிறந்த திட்டமிடல்  மற்றும்  முன்னுரிமைபடுத்தல் ஆகியவை  அம்முன்னேற்ற பாதையினை அமைப்பதற்கு தேவைப்படுகிறது.மனிதாபிமான மற்றும் பொருளாதார உதவிகளுடன் இணைந்து அரசியல் மற்றும் இராஜதந்திர ஈடுபாடும் முன்னேற்றப்பட வேண்டும்.

இதனை நோக்கமாக கொண்டு, ஆப்கான் மக்களுக்கு ஆதரவு வேண்டியும், ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகளை ஒருங்கிணைத்து வழங்குவதற்கு ஒரு பயனுள்ள அமைப்பை  நிறுவ உதவுவதற்காகவும்  இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின்  வெளியுறவு அமைச்சர்கள் குழுவிற்கான அமர்வை டிசம்பர் 19ஆம் திகதி பாகிஸ்தான் அரசு இஸ்லாமாபாத்தில் நடத்துகிறது.

ஐக்கிய நாடுகளுக்குப் பிறகு, இரண்டாவது பாரிய அரசுகளுக்கிடையேயான அமைப்பாக உள்ள இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பானது, ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவுவதில் முன்னணியில் உள்ளது. 

இந்த இக்கட்டான நேரத்தில் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பு நாடுகள் மற்றும் சர்வதேச சமூகம் அனைத்து ஆதரவையும் வழங்கும் என்று பாகிஸ்தான் நம்பிக்கை கொள்கிறது.

ஆப்கானிஸ்தான் பிரச்சினை ஒரு பாரிய நெருக்கடியாக மாறுவதற்கு முன்பு இப்போதே அதனை தீர்ப்பது நல்லது. எங்களால் காத்திருக்க முடியாது. உலகம் இப்போதே உடனடியாக செயல்பட வேண்டும்.