சுகாதார அமைச்சின் தொழிநுட்ப குழுவில் குழப்பம்; ஜனாஸாக்களை அடக்க அனுமதிக்குமாறு வலியுறுத்திய டாக்டர்கள் ராஜினாமா

சுகாதார அமைச்சின் தொழிநுட்ப குழுவில் குழப்பம்; ஜனாஸாக்களை  அடக்க அனுமதிக்குமாறு வலியுறுத்திய டாக்டர்கள் ராஜினாமா

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணிப்பவர்களை தகனம் செய்ய வேண்டுமென்ற நிலைப்பாட்டில் சுகாதார அமைச்சின் கொரோனா தொடர்பான தொழிநுட்ப குழு தொடராக இருப்பதை ஆட்ச்சேபித்து அக்குழுவை பிரதிநிதித்துவப்படுத்திய பல டாக்டர்களும், நிபுணர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.

அரச சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் சன்ன பெரேரா தலைமையில் அண்மையில் நடந்த கூட்டத்தில் இது தொடர்பாக கலந்துரையாடப்பட்ட பிறகே, இவர்கள் ராஜினாமா செய்வதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

சமூக வைத்தியக் கல்லூரி மற்றும் வைரலோஜிஸ்ட்கள் கொரோனா மரணம் தொடர்பாக அதன் அறிக்கைகளை முன்வைத்துப் பேசியதோடு, அங்கத்தவர்கள் பலர் கொரோனாவினால் இறப்பவர்களை தகனம் செய்வதற்கும் அடக்கம் செய்வதற்கும் அனுமதித்திருப்பது பற்றி சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் என்பனவற்றின் வழிகாட்டல்களுக்கு மாறாக செயற்படுவதில் உள்ள பாதிப்புகளையும் இவர்கள் எடுத்து விளக்கி உள்ளனர்.

அரச சட்ட வைத்திய அதிகாரிகளான டாக்டர் சன்ன பெரேரா, களுத்துறை அரச சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் சிறியானந்த அமரசேகர மற்றும் நீர் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் கொரோனா தொற்றினால் இறப்பவர்களது சடலங்களை எரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருந்துள்ளனர்.

இதற்கு இணங்காத உறுப்பினர்கள் குறிதர்த குழுவில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் டாக்டர் ஆர்னல்ட்இ பேராசிரியர் அஜித் தென்னகோன் பிரதம சட்ட வைத்திய அதிகாரி உட்பட பலர் தமது ராஜினாமாக்களை சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பி வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வைத்திய விஞ்ஞானம் மற்றும் ஆராய்ச்சிக்கு மாற்றமாக செயற்படும் குழு ஒன்றில் தமக்கு இருக்க முடியாதென ராஜினாமா செய்த டாக்டர்களும்இ நிபுணர்களும் தெரிவித்திருக்கிறார்கள்.

எதிர்காலத்தில் சர்வதேச ரீதியாக நடைபெறும் வைத்திய அமர்வுகளிலும் சுகாதார மாநாடுகளிலும் தாம் நிராகரிக்கப்படலாம் என இவர்கள் அச்சம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

19 பேரைக்கொண்ட இந்த குழுவில் அதிகமானவர்கள் ராஜினாமா செய்துள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி - நவமணி