வட பிராந்தியத்தில் கண்ணி வெடி அகற்றும் மனிதாபிமான செயற்பாடுகளுக்கு ஜப்பான் உதவி

 வட பிராந்தியத்தில் கண்ணி வெடி அகற்றும் மனிதாபிமான செயற்பாடுகளுக்கு ஜப்பான் உதவி

வட பிராந்தியத்தில் கண்ணி வெடி அகற்றும் மனிதாபிமான செயற்பாடுகளுக்கு 636,363 அமெரிக்க டொலர்களை வழங்க ஜப்பானிய அரசாங்கம் முன்வந்துள்ளது.

ஜப்பானின் Grant Assistance for Grassroots Human Security Projects (GGP) திட்டத்தினூடாக Delvon Assistance for Social Harmony (DASH) அமைப்பினால் முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கைகளுக்கு நிதி உதவியை ஜப்பானிய அரசு முன்வந்துள்ளது.

இந்த நன்கொடை தொடர்பான உடன்படிக்கை கடந்த மார்ச் 2ஆம் திகதி கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதுவரின் வாசஸ்தலத்தில் ஜப்பானிய தூதுவர் சுகியாமா அகிரா மற்றும் DASH இன் நிகழ்ச்சி முகாமையாளர் ஆனந்த சந்திரசிறி ஆகியோரிடையே கைச்சாத்திடப்பட்டது.

எதிர்வரும் சில ஆண்டுகளில் இலங்கையை கண்ணி வெடி தாக்கம் அற்ற நாடாக திகழச் செய்யும் முயற்சியில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளதுடன், உலகின் அடுத்த கண்ணி வெடி பாதிப்பற்ற நாடாகத் திகழச் செய்யும் இலக்கைக் கொண்டுள்ளது.

2002ஆம் ஆண்டு முதல், இலங்கையில் கண்ணி வெடி அகற்றும் பணிகளுக்கு நன்கொடை வழங்கும் பிரதான நாடாக ஜப்பான் திகழ்கின்றது. இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்படும் நான்கு கண்ணி வெடி அகற்றும் பணிகளுக்கு 39.5 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான தொகையை பங்களிப்பாக வழங்கியுள்ளது.

2010ஆம் ஆண்டு முதல் 14km2 கண்ணி வெடி தாக்கம் காணப்பட்ட பகுதியை DASH விடுவித்துள்ளது. இதில் 6km2 பகுதியை ஜப்பானின் GGP திட்டத்தின் உதவியினூடாக எய்தியுள்ளது. கண்ணிவெடி தாக்கம் காணப்பட்ட பகுதிகள் அனைத்தும் பாதுகாப்பானதாகவும், 2,000 க்கும் அதிகமான புலம்பெயர்ந்த மக்களை தமது சொந்தப் பகுதிகளில் மீள் குடியேற்றி, அவர்களின் வாழ்வாதாரத்துக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் மேம்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு பங்களிப்பு வழங்கும் வகையில் இந்தத் திட்டம் அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நன்கொடை தொடர்பில் சந்திரசிறி கருத்துத் தெரிவிக்கையில்:

"இலங்கைக்கும் ஜப்பானுக்குமிடையிலான நீண்ட காலமாக உறுதியாக பேணப்படும் நட்பின் பலனாக இலங்கைக்கு வழங்கப்படும் பெறுமதியான பல்வேறு உதவிகளுக்கு சகல இலங்கையர்களும் நன்றி தெரிவிக்கின்றோம்.

சுமார் ஏழு தசாப்த காலமாக இந்த உதவிகள் வழங்கப்படுகின்றன. இலங்கையின் கண்ணி வெடி அகற்றல் பணிகளுக்கு ஆரம்பம் முதல் ஜப்பான் பெருமளவு பங்களிப்புகளை வழங்குகின்றது. 2010ஆம் ஆண்டு முதல் DASHக்கு ஜப்பானினால் தொடர்ச்சியாக உதவிகள் வழங்கப்படுகின்றன.

நாட்டில் மூன்று தசாப்த காலமாக இடம்பெற்ற யுத்தம் காரணமாக சில பகுதிகளில் தற்போதும் கண்ணிவெடிகளும் வெடி பொருட்களும் காணப்படுகின்றன. ஜப்பானின் நிதியுதவியில் முன்னெடுக்கப்படும் DASH நிகழ்ச்சியினூடாக சம்பந்தப்பட்ட பகுதிகளில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்றம் ஆகியவற்றை மேற்கொள்வதற்கும், அவ்வாறு குடியேற்றப்பட்ட மக்களுக்கு நிலைபேறான பொருளாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்கவும் பங்களிப்பு வழங்கவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை அரசாங்கத்தின் சமாதான கட்டியெழுப்பல் செயற்பாடுகளினூடாக யுத்தத்தினால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு வருமான மூலமொன்றை ஏற்படுத்திக் கொள்வது மாத்திரமன்றி, சமூகத்தில் கௌரவமான நிலையை ஏற்படுத்திக் கொள்வதற்கு உதவுவதையும் முக்கியமான என DASH நம்பிக்கை கொண்டிருப்பதுடன், அதன் காரணமாக இப்பணிகளுக்கு உதவிகளை வழங்குகின்றது.

ஜப்பானின் நிதியுதவியின் காரணமாக, DASHக்கு வட பகுதியைச் சேர்ந்த பெருமளவான இளம் மற்றும் தேவையுடைய மக்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கி, இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு மேலும் வலுச் சேர்க்க முடிந்துள்ளது" என்றார்.