சாய்ந்தமருது நகர சபை தொடர்பான வர்த்தமானியை இரத்து செய்ய தீர்மானம்

சாய்ந்தமருது நகர சபை தொடர்பான வர்த்தமானியை இரத்து செய்ய தீர்மானம்

றிப்தி அலி

சாய்ந்தமருது நகர சபையை உருவாக்குவதற்காக வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானியை இரத்து செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அமைச்சரவை இணைப் பேச்சாளரான தகவல் தொழிநுட்ப மற்றும் உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இதற்கமைய, சாயந்தமருது நகர சபையை இரத்து செய்வதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்னும் ஒரிரு தினங்களில் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

முழு நாட்டிலும் காணப்படும் இவ்வாறான விடயங்களை மீள ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்ததாகவும் அவர் கூறினார்.

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட சாய்ந்தமரு பிரதேசத்திற்கு தனியான நகர சபையொன்றினை எதிர்வரும் 2022.03.20 ஸ்தாபிப்பதற்கான விசேட வர்த்தமானியொன்று கடந்த பெப்ரவரி 14ஆம் திகதி உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனினால் வெளியிடப்பட்டது.

எனினும் குறித்த விசேட வர்த்தமானியினை இரத்து செய்வதற்கு நேற்று (19) புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று (20) வியாழக்கிழமை தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.  இதன்போதே அமைச்சர் பந்துல குணவர்த்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"சாய்ந்தமருது பிரதேசத்தை நகர சபையாக பிரகடனப்படுத்துவது தொடர்பில்  கடந்த 2018ஆம் ஆண்டு, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் என்ற வகையில் பைசர் முஸ்தபாவினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

குறித்த அங்கீகாரத்தினை முன்னெடுத்து செல்வது தொடர்பான விடயமாகவே சாய்ந்தமருது பிரதேசத்திற்கான நகர சபையை அறிவிப்பதற்கான நடவடிக்கையினை அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் மேற்கொண்டார்.

எனினும் ஒரு பிரதேசத்திற்கு மாத்திரம் உள்ளுராட்சி சபையை இவ்வாறு வழங்காமல், நாட்டில் இவ்வாறான அவசியம் ஏற்பட்டுள்ள ஏனைய பிரதேசங்களையும் உள்ளடக்கியதாக உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் மூலம் ஒரே தடவையில் அதற்கான அங்கீகாரத்தையும் அறிவிப்பையும் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

உதாரணமாக தான் பிரதிநிதித்துவப்படுத்தும் கொழும்பு மாவட்டத்திலுள்ள ஹோமாகம பிரதேசம் மிக அதிகமான மக்கள் காணப்படுகின்ற இடமாகும். இப்பிரதேசம் ஒரு பெரிய பிரதேச சபையாகும். இலங்கையில் உள்ள மிகப் பெரிய பிரதேச சபையான இப்பிரதேசத்தை ஒரு நகர சபையாக மாற்ற வேண்டிய தேவை எனக்கு உள்ளது.

தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அமைய இப்பிரதேச சபையை தற்பொழுது நடாத்திச் செல்ல முடியாமல் காணப்படுகின்றது. எனவே, எனது தேர்தல் தொகுதியில் உள்ள ஹோமாகம பிரதேச சபையை, நகர சபையாக மாற்றி உடுகாபத்துவ மற்றும் ஏனைய பகுதிகளை இணைத்து மற்றொரு பிரதேச சபையாக இரு பிரதேச சபைகளை உருவாக்க வேண்டிய தேவையும் காணப்படுகின்றது.

இது போன்று நாட்டின் பல பகுதிகளிலும் இவ்வாறான தேவைப்பாடு  காணப்படுகின்றது. இது தொடர்பில் ஆராய்வதற்காக பாராளுமன்ற தேர்தலினை அடுத்து எல்லை நிர்ணய குழுவொன்;று நியமிக்கப்படவுள்ளது.

இவ்வாறான விடயங்களை கருத்திற்கொண்டே சாய்ந்தமருது நகர சபை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அமைச்சரவை அனுமதிக்கவில்லை" என்றார்.