ரமழான் வருகிறது: பள்ளிகள் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா?

ரமழான் வருகிறது: பள்ளிகள் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா?

றிப்தி அலி

அன்று வெள்ளிக்கிழமை... நண்பகல் 12.05 மணியளவில் ஜும்ஆத் தொழுகைக்காக விரைந்துகொண்டிருந்தேன். அப்போது, கொழும்பு நகரிலுள்ள பள்ளிவாசலொன்றுக்கு அருகில் பாரிய கூட்டம். என்னவென்று அருகில் நின்றவரிடம் கேட்டேன்.

"பள்ளிவாசலில் தொழுகைக்காக ஒரு சமயத்தில் 50 பேர் மாத்திரமே அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கமைய,  50 பேர் பள்ளிக்குள் ஏற்கனவே சென்றுள்ளமையினால் பள்ளிவாசலின் கதவினை மூடிவிட்டார்கள்.

முதலாவது ஜும்ஆ முடிந்த பின்னர், பி.ப 1.00 மணியளவிலேயே மீண்டும் 50 பேரை பள்ளிக்குள் அனுமதிப்பார்களாம். அதுவரை காத்துக்கொண்டிருக்கின்றேன்" என பள்ளிவாசலின் கேட்டியிலிருந்தவாறு பதிலளித்தார் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர்.

பின்னர் என்ன செய்வது, நான் ஜும்ஆ தொழுகையின்றி வீடு வந்து லுஹர் தொழுகைiயினை நிறைவேற்றினேன். இதேவேளை, கடந்த பெப்ரவரி 5ஆம் திகதி கொழும்பிலுள் பள்ளிவாசலொன்றுக்கு ஜும்ஆத் தொழுகைக்காக சென்ற போது, கொவிட் - 19 கட்டுப்பாடுகள் காரணமாக விரும்பத்தாக சம்பவமொன்றினை எதிர்கொண்டதாக  ஊடகவியலாளர் அஷ்ரப் ஏ. சமத் தனது பேஸ்புகில் பதிவிட்டிருந்தார்.

பள்ளிவாசல்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கொவிட் - 19 கட்டுப்பாடுகள் காரணமாக இது போன்ற பல பிரச்சினைகளை நாளாந்தம் தொழுகைக்காக செல்லும் முஸ்லிம்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.

கடந்த வருடம் நாட்டில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 2020 மார்ச் 15ஆம் திகதி நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களும் மூடப்பட்டு ஜுன் 12ஆம் திகதி பல்வேறு நிபந்தனைகளுக்கு மத்தியில் திறக்கப்பட்டன.

எனினும் கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதி நாட்டில் மீண்டும் ஏற்பட்ட இரண்டாவது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டின் பல பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டன. இந்த தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களிலுள்ள பள்ளிவாசல்களும் மூடப்பட்டன.

அப்பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டதனை அடுத்து பள்ளிவாசல்கள் மீண்டும் திறக்கப்பட்டன. எனினும், பள்ளிவாசல்கள் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் இன்று வரை தொடர்ந்து வருகின்றன.

குறிப்பாக பள்ளிவாசலில் தொழுகைக்கு ஒரு நேரத்தில் 50 பேர் அல்லது அதை விட குறைவானர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர், பள்ளிவாசலினுள் நுழைவதற்கு ஒரு நுழைவாயிலை மட்டும் பயன்படுத்தல், பள்ளியினுள் இருக்கின்ற போது ஒவ்வொருவரும் மார்ஸ்க் அணிந்திருப்பதோடு ஒரு மீட்டர் இடைவெளியையும் பேண வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

அத்துடன் தொழுகைக்கு செல்வபவர்கள் முஸல்லா எனப்படும் தொழுகை விரிப்பொன்றை கொண்டு செல்வதோடு ஒரு மீட்டர் இடைவெளியை பேண வேண்டும், பள்ளிக்கு வருபவர்கள் அனைவரது பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கம் ஆகியவற்றினை பதிவேட்டில் பதிய வேண்டும், ஒவ்வொரு தொழுகைக்கான அதானுக்கு 15 நிமிடங்களுக்கு முன்னர் பள்ளிவாசல் திறக்கப்பட்டு, தொழுகையைத் தொடர்ந்து 45 நிமிடங்களில் மூடப்பட வேண்டும், பள்ளிவாசலில் வுழூச் செய்யும் பகுதி,  மலசல கூடங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட வேண்டும் உள்ளிட்ட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

இன்று வரை தொடர்கின்ற இந்த கட்டுப்பாடுகள் தலைநகரில் இறுக்கமாக பின்பற்றப்படுகின்ற போதிலும், ஏனைய பகுதிகளில் முறையாக அமுல்படுத்தப்படுகின்றனவா என்பது கேள்விக்குரியாகும்.

நாட்டின் பல பிரதேசங்களிலுள்ள பள்ளிவாசல்களில் இந்த சுகாதார வழிகாட்டல்களை அமுல்படுத்தப்படாமையினை நேரடியாக அவதானிக்க முடிந்தது. எவ்வாறாயினும், கொழும்பு மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்களில் வக்பு சபையினால் வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டல் இன்று வரை அமுல்படுத்தப்பட்டு வருதாக மாவட்ட பள்ளிவாசல் சம்மேளனத்தின் தலைவர் அஸ்லம் ஒத்மான் தெரிவித்தார்.

இந்த அமுல்படுத்தலின் காரணமாக தூரப் பிரதேசங்களிலிருந்து கொழும்பிற்கு வரும் முஸ்லிமகள் அதிகம் பாதிக்கப்படுவதையும் எம்மால் அவதானிக்க முடிந்தது. தூரப் பிரதேசங்களிலிருந்து வருகின்றவர்களின் மார்க்க, இயற்கை தேவைகளை நிறைவேற்றவும், ஓய்வெடுக்கவும் பள்ளிவாசல்களே பெரிதும் உதவுகின்றன.

எனினும் தொழுகை நிறைவடைந்தவுடன் பள்ளிவாசல்கள் மூடப்படுகின்றமையினால், பலர் பள்ளிவாசலுக்கு செல்ல முடியாது முடியாது வீதிகளில் அலைந்து திரிகின்றனர்.

அது மாத்திரமல்லாமல், உடனடியாக பள்ளிவாசல்கள் மூடப்படுகின்றமையினால், ஜமாத் தொழுகையில் கலந்துகொள்ளாதவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாதுள்ளது. இதனால் பலரின் தொழுகைககள் கழாவாகின்றமை குறிப்பிடத்தக்கது.

முஸல்லா இல்லாமல் செல்கின்றவர்களுக்க பள்ளிக்கு அருகில் நிற்பவர்கள் நன்மை என்ற அடிப்படையில் தங்களின் முஸலாக்களை வழங்குகின்றனர். இது ஒரு வகையில் உதவியாக அமைகின்ற போதிலும், கொரோனா பரவலைப் பொறுத்த வரையில் பாராதுமரான செயற்பாடாகும். இதன் காரணமாக கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

"வக்பு சபையினால் வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டியினை எமது பள்ளிவாசல் இன்று வரை அமுல்படுத்தி வருகின்றது" என கொழும்பு பெரிய பள்ளிவாசல் தலைவர் எம். தௌபீக் சுபைர் தெரிவித்தார்.

"இதனால், தொழுகைக்கு வருகின்றவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவது எமக்கு தெரியும். எனினும் பள்ளிவாசல்களின் ஊடாக கொரோனா வைரஸ் பரவிவிட்டது என்ற குற்றச்சாட்டு என்பதன் காரணமாக இந்த வழிகாட்டல்களை தொடர்;ச்சியாக பேணி வருகின்றோம்' என அவர் குறிப்பிட்டார்.

இந்த நடவடிக்கையினால் எமது பள்ளிவாசலில் கடமையாற்றுபவர்கள் பல்வேறு சிக்கல்களையும், சிக்கல்களையும் எதிர்நோக்கியதாக அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, கடந்த ரமழான் மாத்தில் பள்ளிவாசல்கள் மூடப்பட்டமையினால் வீடுகளிலிருந்தே ரமழான் மாத அமல்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

வழமையாக ரமழான் மாதம் முழுவதும்  பள்ளிவாசல்கள் சுறுசுறுப்பாக இயங்குவதுடன்  பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து 30 நாட்களும் இடம்பெறுவது வழமையாகும்.

அது மாத்திரமல்லாமல், இப்தார், தராவீஹ் மற்றும் கியாமுல் லைல் போன்று இரவு நேரத் தொழுகைகளும் இடம்பெறுவது வழமையாகும். இந்த வருட ரமழானிற்கும் இன்னும் 15 நாட்களே மாத்திரம் உள்ளன.

எனினும் வக்பு சபையினால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் இதுவரை தளர்த்தப்படாமையினால், இந்த ரமழான் காலப் பகுதியில் பள்ளிவாசல்களில் எவ்வாறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது என்பது தொடர்பில் பள்ளிவாசல் நிர்வாகிககள் தவித்துக்கொண்டிருக்கின்றனர்.

இதன் காரணமாக கொவிட் - 19க்கு மத்தியில் எவ்வாறு ரமழான் அமல்களை முன்னெடுப்பது என்பது தொடர்பிலான வழிகாட்டியொன்றினை வெளியிடுமாறு முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்திடம் கோரியுள்ளதாக கொழும்பு மாவட்ட பள்ளிவாசல் சம்மேளத்தின் தலைவர் அஸ்லம் ஒத்மான் தெரிவித்தார்.

"இந்த கோரிக்கை இரண்டு வாரங்களுக்கு முன்னர் அனுப்பியிருந்தோம். எனினும் வக்பு சபையிடமிருந்து இதுவரை எந்த பதிலுமில்லை" என அவர் குறிப்பிட்டார். 

"தற்போதைய சூழ்நிலையில் சுகாதார வழிகாட்டிகளுக்கு அதிக  முக்கியத்துவம் வழங்க வேண்டியுள்ளது. எமது பள்ளிவாசல்களில் அடிக்கடி ஒன்றுகூடல்கள் இடம்பெறுவதனால் கொரோனா வைரஸ் இலகுவாக பரவும் என்ற அச்ச உணர்வொன்றுள்ளது" என அவர் கூறினார்.

எவ்வாறாயினும் ரமாழன் மாதத்தினை சிறப்பாக அனுஷ்டிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சுகாதார அமைச்சுடன் இணைந்து வக்பு சபை உனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அஸ்லம் ஒத்மான் வேண்டுகோள் விடுத்தார்.

இதேவேளை, "நாட்டுச் சட்டத்திற்கு கட்டுப்பட்டு புனித ரமழான் மாத அமல்களை இலங்கை முஸ்லிம்கள் சிறப்பாக முன்னேடுக்க வேண்டும்" என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பதில் தலைவர் அஷ்ஷெய்க் அப்துல் ஹாலீக் தெரிவித்தார்.

கொரோனாவிற்கு மத்தியில் எவ்வாறு ரமழான் மாத அமல்களை மேற்கொள்வது என்பது தொடர்பான விசேட அறிக்கையொன்றினை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இன்னும் ஒரிரு தினங்களில் வெளியிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த சில வருடங்களில் புனித ரமழான் மாத அமல்களை சிறப்பாக  நிறைவேற்ற முடியாமல் போயிவிட்டது. இதன் காரணமாக இந்த வருடம் புனித ரமழான் மாதத்தில் அதிக அமல்களை நிறைவேற்ற முயற்சிக்குமாறு அஷ்ஷெய்க் அப்துல் ஹாலீக் வேண்டுகோள் விடுத்தார்.

"ரமழான் மாதத்தில் பள்ளிவாசல்களில் எவ்வாறு செயற்படுவது தொடர்பில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஆகியயோருடன் பள்ளிவாசல் நிர்வாகிகள் கலந்துரையாடி சிறப்பாக அமல்களை மேகொள்ள நடவடிக்கை எடுக்குமாறு அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, "கொவிட் - 19க்கு மத்தியில் ரமழான் அமல்களை பள்ளிவாசல்களில் எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பான வழிகாட்டியொன்று விரைவில் வெளியிடப்படும்" என முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் என ஏ.பீ.எம். அஷ்ரப் தெரிவித்தார்

தராவீஹ், இப்தார், கஞ்சி வழங்கல் போன்ற செயற்பாடுகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பில் விளக்கம் கோரி பள்ளிவாசல்களினால் திணைக்களத்திற்கு கடிதம் அனுப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் வக்பு சபையின் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது. விரைவில் இது தொடர்பான உத்தியோகபூர்வ முடிவு அறிவிக்கப்படும்' என பணிப்பாளர் மேலும் கூறினார்.

எவ்வாறாயினும், "ரமழான் மாதத்தில் பள்ளிவாசல்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பான வழிகாட்டல் சுற்றுநிரூபம் அடுத்த வாரமளவில் வெளியிடப்படும்" என சுகாதா அமைச்சின் கொவிட் - 19 செயற்பாடுகளுக்கான இணைப்பு இணைப்பு பொறுப்பதிகாரி வைத்தியர் அன்வர் ஹம்தான் தெரிவித்தார்.

ரமழான் மாதத்தினையொட்டி பள்ளிவாசல்களுக்கான கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை மேற்கொள்ள எதிர்பார்க்கின்றது. அதுபோன்று பள்ளிவாசலின் பரப்பளவினைப் பொறுத்தே தொழுகைக்கு அனுமதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையினை தீர்மானிப்பது தொடர்பிலும் ஆராயப்படுவதாகவும் தெரிவித்த அவர், இது தொடர்பில் அமைச்சு மட்டத்திலான கலந்துரையாடல்கள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் கூட்டிக்காட்டினார்.

நாட்டில் சினிமா திரையாரங்குகள், அரசியல் மற்றும் தனியார் ஒன்றுகூடல்கள் மற்றும் களியாட்ட நிகழ்வுகளில் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய சுமார் 100க்கு மேற்பட்டேர் பங்குபற்ற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பள்ளிவாசல்களில் மாத்திரம் இவ்வாறு 50 பேருக்கான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகள் தளர்த்தப்பட்டு எதிர்வரும் புனித ரமழானை இலங்கை முஸ்லிம்கள், சுகாதார விதிகளை பேணியும் திருப்தியான முறையிலும் பள்ளிவாசல்களோடு இணைந்து சிறப்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.