மூதூரில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று

மூதூரில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று

றிஸாதா பர்வீன்

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை புதிதாக  மூன்று  கொரோனா தொற்றாளர்கள் இணங்காணப்பட்டுள்ளனர் என பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாரக் தெரிவித்தார்.

இவர்களில் இருவர் நெய்தல் நகரைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, மற்றையவர் பால நகரைச் சேர்ந்தவருமாவார் என அவர் குறிப்பிட்டார்.

ஏற்கனவே 27ஆம் திகதி கொரோனா தொற்றாளர் இருவர் இணங்காணப்பட்ட நெய்தல் நகர் கிராமம் முடக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று புதிதாக ஒரு கொரோனா தொற்றாளர் இணங்காணப்பட்ட பாலநகர் கிராமமும் இன்று பகலிலிருந்து மறு அறிவித்தல் வரை முழுமையாக முடக்கப்பட்டுள்ளதோடு, வீதித் தடைகளும் போடப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை கடந்த 27 ஆம் திகதியிலிருந்து மூதூர் பகுதியில் உள்ள சகல வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாரக் தலைமையில் இன்று மாலை மூதூர் பிரதேச கொரோனா தடுப்புச் செயலணியின் விசேட கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது மூதூர் பிரதேசத்தில் உள்ள சர்வமத தலைவர்கள், மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி, மூதூர், சம்பூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகரிகள், மூதூர் பிரதேச சபையின் தவிசாளர், வர்த்தக சங்கத்தினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தின்போது மூதூர் பிரதேசத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும், முடக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கிராம மக்கள் எதிர்நோக்குகின்ற அடிப்படை பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது, பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய விழிப்புணர்வுகள் குறித்தும் இதத்போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.