பாடசாலைகளின் கொவிட் சுகாதார நடவடிக்கைகளுக்காக 681,625,800.00 ரூபா ஒதுக்கீடு

பாடசாலைகளின் கொவிட் சுகாதார நடவடிக்கைகளுக்காக 681,625,800.00 ரூபா ஒதுக்கீடு

றிப்தி அலி

கல்வி என்பது ஒட்டுமொத்த உலக சமூகத்திற்கும் இன்றியமையாததொன்றாகும். இந்த கல்வி நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் மிக அத்தியவசியமாகும். மாணவர்கள் இந்த கல்வி நடவடிக்கையினை காலா காலமாக நேரடியான கற்றல் வழிமுறையின் ஊடாகவே மேற்கொண்டு வந்துள்ளனர்.

எனினும் கொவிட் - 19 வைரஸ் பரவலில் இருந்து மாணவர்களை பாதுகாக்கும் பொருட்டு இந்த கல்வியினை வழங்கும் பாடசாலைகள் 2020ஆம் ஆண்டு பெப்ரவரி நடுப் பகுதியிலிருந்து தொடர்ச்சியாக பல மாதங்கள் மூடப்பட்டிருந்தன.

இக்காலப் பகுதியில் இணையத்தளங்களின் ஊடாக கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அது பாரியளவில் வெற்றியளிக்கவில்லை. இதனால் கடந்த வருடம் இறுதி ஆண்டு பரீட்சை நடத்தப்படாமல் அனைத்து மாணவர்களையும் கல்வி அமைச்சு வகுப்பேற்றியது.

எவ்வாறாயினும்ரூபவ் 2021ஆம் ஆண்டிலாவது கல்வி நடவடிக்கைகளை சிறந்த முறையில் முன்னெடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பாடசாலைகளை திறப்பதற்கான நடவடிக்கையினை கல்வி அமைச்சு மேற்கொண்டது.

எனினும், கடந்த புதுவருட கொண்டாட்டத்தினை அடுத்து நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸின் மூன்றாவது அலை காரணமாக பாடசாலைகள் மீண்டும் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

இதேவேளை, இந்த வருடம் முதலாம் தவணைக்காக பாடசாலைகளை திறப்பதற்காக கல்வி அமைச்சினால் 681,625,800.00 ரூபா நிதி நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தகவல் அறியும் சட்ட மூலத்தின் ஊடாக நாட்டிலுள்ள ஒன்பது மாகாண கல்வி திணைக்களங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் ஊடாக பெற முடிந்தது.

இதேவேளை, கொரேனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் 2021ஆம் ஆண்டின் முதலாம் தவணைக்கான பாடசாலைகள் கடந்த ஜனவரி 11ஆம் திகதி திறக்கப்பட்டன. நாடளாவிய ரீதியிலுள்ள 10,116 பாடாசலைகளில் மேல் மாகணம் தவிர்ந்த ஏனைய எட்டு மாகாணங்களிலுள்ள 7,314 பாடசாலைகளே இதன்போது திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, மேல் மாகாணத்திலுள்ள 907 பாடசாலைகள் கடந்த ஜனவரி 26ஆம் திகதி கல்வி பொதுத் தராதர (சாதாரன தர) மாணவர்களுக்காக மாத்திரம் திறக்கப்பட்டன. எனினும் பாடசாலை மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் மத்தியில் பாரிய
அச்ச உணர்வொன்று காணப்பட்டது.

இதனை நிவர்த்தி செய்யும் வகையில் கல்வி அமைச்சினால் கொவிட் - 19 இற்கு எதிரான சுகாதார செயற்த்திட்டங்களை செயற்படுத்துவதற்காகவே 681,625,800.00 ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் - தென், வட, வட மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய ஐந்து மாகாணங்களிலுள்ள தேசியப் பாடசாலைகளுக்கு 19,934,440 ரூபாவும், மாகாண பாடசாலைக்கு 363,155,510.00 ரூபா ஒத்துக்கப்பட்டுள்ளது.

ஏனைய நான்கு மாகாணங்களான கிழக்கு, மேல், வட மத்திய மற்றும் ஊவா ஆகியவற்றிலுள்ள தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பான தகவல்கள் குறித்த மாகாண கல்வி திணைக்களங்களினால் எமது தகவல் அறியும் விண்ணப்பத்திற்கு வழங்கப்படவில்லை.

பாடசாலையின் மொத்த மாணவர்களின் எண்ணிக்கைக்கு அமையவே கல்வி அமைச்சினால் நிதி வழங்கப்படுகின்றது. கைகழுவும் தொகுதி, மருத்துவ அறை அமைப்பு, தொற்று நீக்கம் செய்தல், தொற்று நீக்கி பதார்த்தம் கொள்வனவு, சிரமதான நடவடிக்கை, வெப்பமானி கொள்வனவு, Face Masks, Face Shields, soaps, நீர்த் தொகுதிகளை புனரமைப்பு செய்தல் போன்ற பல்வேறு சுகாதார தேவைகளுக்காகவே மேற்குறிப்பிட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசாங்கத்தின் கீழுள்ள கல்வி அமைச்சின் 15/2020ஆம் இலக்க சுற்றுநீரூபத்திற்கமைய அமைச்சினால் ஒதுக்கப்பட்ட நிதிகள் மாகாண கல்வி திணைக்களத்தின் ஊடாக வலயக் கல்வி அலுவலங்களுக்கு அனுப்பப்பட்டு அவை பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் வங்கி கணக்கிலக்கத்திற்கு வைப்புச் செய்யப்படுகின்றன.

இதேவேளை, அனுராதபுரம் மாவட்டத்தின் கொப்பிடிகொல்லாவ (127 பாடசாலைகள்) கலேன்விந்துனுவேவ (95 பாடசாலைகள்), பொலநறுவை மாவட்டத்தின் ஹிங்குராங்கொட (54 பாடசாலைகள்), திம்புலாகல (104 பாடசாலைகள்) ஆகிய கல்வி வயங்களிலுள்ள 380 பாடசாலைகளுக்கு 12,765,000.00 ரூபா பணம் வட மத்திய முதலைமைச்சினால் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சின் கீழே மாகாண கல்வி திணைக்களம் செயற்படுகின்றது.

எனினும் ஏனைய எட்டு மாகாணங்களிலுள்ள மாகாண கல்வி அமைச்சினால் நிதி ஒதுக்கப்பட்டமை தொடர்பான தகவல் எதுவும் எமது தகவல் அறியும் விண்ணப்பத்திற்கு வழங்கப்படவில்லை.

இதற்கு மேலதிகமாக அனுராதபுரம் மாவட்டத்தின் கொப்பிடிகொல்லாவ மற்றும் கலேன்விந்துனுவேவ ஆகிய கல்வி வலயங்களிலுள்ள 222 பாடசாலைகளுக்கு Plan Sri Lanka செயற்திட்டத்தின் கீழ் 26,810,000.00 ரூபா நிதியொதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அறநெறி பாடசாலைகள் மற்றும் ஆசிரியர் வள நிலையங்கள் போன்றவற்றிற்கும் கல்வி அமைச்சினால் நிதியொதுக்க்பட்டுள்ளது.

எமது நாட்டில் காணப்படுகின்ற 25 மாவட்டங்களிலும் 99 கல்வி வலயங்கள் காணப்படுகின்றன. இதில் ஆகக் கூடிய 17 கல்வி வலயங்கள் கிழக்கு மாகாணத்திலும் ஆகக் குறைந்த ஏழு கல்வி வலயங்கள் சப்ரகமுவ மாகாணத்திலும் காணப்படுகின்றன.

அதேவேளை, ஆகக் கூடிய ஏழு கல்வி வலயங்கள் அம்பாறை மாவட்டத்திலும் ஆகக் குறைந்த ஒரு கல்வி வலயங்கள் கிளிநொச்சி மாவட்டத்திலும் காணப்படுகின்றது. அத்துடன் மன்னார், முல்லைத்தீவு, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் இரண்டு கல்வி வலயங்கள் மாத்திரமே காணப்படுகின்றன.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் 374 தேசிய பாடசாலைகளும், 9,792 மாகாண பாடசாலைகளும் காணப்படுகின்றன. இதில் ஆகக் கூடிய 1,520 பாடசாலைகள் மத்திய மாகாணத்திலும், ஆகக் குறைந்த 817 பாடசாலைகள் வட மத்திய மாகாணத்திலும் காணப்படுகின்றன.

ஆகக் கூடிய 75 தேசியப் பாடசாலைகள் மேல் மாகாணத்திலும் ஆகக் குறைந்த 22 தேசியப் பாடசாலைகள் வட மாகாணத்திலும் காணப்படுகின்றன. அத்துடன் ஆகக்கூடிய 1,466 மாகாண பாடசாலைகள் மத்திய மாகாணத்திலும், ஆகக் குறைந்த 802 மாகாண பாடசாலைகள் வட மத்திய மாகாணத்திலும் காணப்படுகின்றன.

மேற்குறிப்பிட்ட அனைத்து விடயங்களும் தகவல் அறியும் சட்ட மூலத்தின் ஊடாக நாட்டிலுள்ள ஒன்பது மாகாண கல்வி திணைக்களங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல் அறியும் விண்ணப்பங்களின் ஊடாக பெறப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.