மக்கள் காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுப்பேன்: இஷாக் றஹ்மான்

 மக்கள் காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுப்பேன்: இஷாக் றஹ்மான்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என அக்கட்சியின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் றஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பு துறைமுக நகர் தொடர்பான சட்ட மூலத்திற்கு ஆதரவளித்தமையினால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களான இஷாக் றஹ்மான் மற்றும் அலி சப்ரி றஹீம் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் சிரேஷ்ட பிரதி தலைவர் என்.எம். சஹீட் தெரிவித்தார்.

இது தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் றஹ்மான் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

"குறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவளித்தமையினால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிருந்து நீக்கப்பட்டதாக சமூக ஊடகங்கள் வாயிலான அறிய முடிந்தது. இது தொடர்பில் நேற்று (22) சனிக்கிழமை பி.ப 5.00 மணி வரை உத்தியோகபூர்வமாக எந்தவித தகவலும் கட்சியினால் மேற்கொள்ளப்படவில்லை.

எவ்வாறாயினும் குறித்த நீக்கம் தொடர்பில் உத்தியோகபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்பெற்றால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளேன். வர்த்தகரான நான் பல்வேறு கலந்துரையாடல்களின் பின்னரே கொழும்பு துறைமுக நகர் தொடர்பான சட்ட மூலத்திற்கு நான் ஆதரவளித்தேன்.

இந்த சட்ட மூலத்தினால் நாட்டுக்கோ அல்லது முஸ்லிம் சமூகத்திற்கோ எந்தப் பிரச்சினையுமில்லை. எனினும் எமது கட்சியினை சேர்ந்த சிலர் இந்த சட்ட மூலம் தொடர்பான எந்தவித அறிவுமின்றியே எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்றனர். இதுவொரு பிழையான நிலைப்பாடாகும்" என்றார்.