திகாமடுல்ல மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸுடன் இணைவதை மக்கள் காங்கிரஸ் நிராகரிப்பு

திகாமடுல்ல மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸுடன் இணைவதை மக்கள் காங்கிரஸ் நிராகரிப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன பாராளுமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிடுவதால் திகாமடுல்ல மாவட்டத்தை வெற்றிகொள்ளும் வாய்ப்பு கிட்டும். இதனால் சமூகம் ஒற்றுமைப்பட்டுவிட்டது என்ற பலமாக செய்தியை முழு நாட்டுக்கும் எத்திவைக்க முடியும்.

அதற்காக எத்தகைய விட்டுக்கொடுப்புகளுக்கும் தயாராக இருப்பதாக ரவூப் ஹக்கீம் நம்பிக்கை வெளியிட்டபோதிலும், அந்தக் கோரிக்கையை றிஷாத் பதியுதீன் மற்றும் வை.எல்.எஸ். ஹமீட் ஆகியோர் நிராகரித்துவிட்டதாக முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

அங்கு இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடுவதன் அவசியத்தை வலியுறுத்தி மூத்த அரசியல்வாதி ஏ.எச்.எம். பௌஸியின் ஏற்பாட்டில், அவரது இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை (16) முற்பகலிலும் இரவிலும் இரு கட்டங்களாக நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் மௌலவி எஸ்.எச்.ஆதம்பாவா தலைமையில் அம்பாறை மாவட்ட உலமாக்கள் ஆறு பேரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம், செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் கிழக்கு மகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தரப்பில் அதன் தலைவர் றிஷாத் பதியுதீன், வை.எல்.எஸ். ஹமீத், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்பின் ஆரம்பத்தில் இரண்டு கட்சிகளும் கூட்டாகச் சேர்ந்து திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடுவதனால் ஏற்படக்கூடிய நன்மைகளை முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நிசாம் காரியப்பர், முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், அக்கட்சியின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான ஏ.எல். தவம் ஆகியோர் புள்ளிவிபரங்களுடன் விபரித்துக் கூறினர்.

இவ்வாறு ஒன்றுபடுவதனூடாக மாவட்டத்தை வெற்றிகொள்ளக்கூடிய சூழ்நிலை முன்னொருபோதும் இருக்கவில்லை என்றும், இந்த வாய்ப்பை தவறவிட்டால் இனியொருபோதும் அது சாத்தியமில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

எவ்வாறாயினும் இவ்விரு கட்சிகளும் திகாமடுல்ல மாவட்டத்தில் இணைந்து போட்டியிடுவதால் போதிய வெற்றிவாய்ப்புகள் இல்லையென்று வை.எல்.எஸ். ஹமீத் அவர் பக்க கருத்துகளை சில புள்ளிவிபரங்களுடன் முன்வைத்தபோது, றிஷாத் பதியுத்தீனும் அவருக்கு ஆதரவாகவிருந்தார்.

தனித்துப் போட்டியிடுவதனாலேயே தமது கட்சிக்கான ஆசனத்தை உறுதிப்படுத்தலாம் என்ற நிலைப்பாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தரப்பினர் நெடுகிலும் இருந்ததாக முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

ஒற்றுமையின் அவசியம் மற்றும் இறைவனின் உதவி பற்றிய அல்குர்ஆன் திரு வசனங்களைக் குறிப்பிட்டு உலமாக்கள் சமூகத்தின் வெற்றியை முன்னிலைப்படுத்தி பயனுள்ள ஆலோசனைகளை இக்கலந்துரையாடலின்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

திங்கட்கிழமை காலையிலும் இரவிலுமாக ஏறத்தாழ நான்கரை மணிநேரம் இப்பேச்சுவார்த்தை இடம்பெற்றபோதிலும், திகாமடுல்ல மாவட்டத்தில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடும் விடயத்தில் ஆரம்பம் முதலே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் கலந்துகொண்டவர்கள் மத்தியில் எவ்வித நெகிழ்வுத்தன்மை காணப்படாததோடு, அக்கட்சியினர் இது விடயத்தில் ஓர் உடன்பாட்டுக்கு வர மறுத்துவிட்டதாக முஸ்லிம் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

புத்தளம் மாவட்டத்தைப் பொறுத்தவரை இவ்வாறான ஓர் உடன்பாட்டிற்கு வரமுடியுமானால் திகாமடுல்ல மாவட்டத்தில் அதற்கு பின்வாங்குவது ஏனென்ற கேள்வி எழுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.