குவைத் செம்பிறை சங்கத்தினால் இலங்கைக்கு மருந்துப் பொருட்கள் அன்பளிப்பு

குவைத் செம்பிறை சங்கத்தினால் இலங்கைக்கு   மருந்துப் பொருட்கள் அன்பளிப்பு

அஹ்ஸன் அப்தர்

இலங்கையில் கொவிட் - 19 வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் இலங்கைக்கு தேவையான மருத்துவ பொருட்களின் ஒரு தொகுதி குவைத் செம்பிறை சங்கத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

சுமார் 167,918 அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துப் பொருட்களே அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன. இதில் 16 நவீன ரக கட்டில்கள், 20 சிறிய ஒட்சிசன் செறிவூட்டிகள், 4 நோயாளி கண்கானிப்பான்கள், 2 முக்கிய அறிகுறிகள் கண்கானிப்பான்கள் போன்ற பல மருத்துவப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

நாட்டில் கொவிட் -19 இற்கு எதிராகப் போராடும் சுகாதாரத் துறையின் திறனை குறித்த மருத்துவப் பொருட்கள் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குவைத்துக்கான இலங்கை தூதுவர் யூ.எல் மொஹமட் ஜவ்ஹர், குவைத் செம்பிறை சங்கத்தின் தலைவர் டாக்டர் ஹிலால் மவ்ஸத் அல் ஸாயரிடம் விடுத்த வேண்டுகோளிற்கு இணங்கவே இந்த மருத்துப் பொருட்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன.

இதேவேளை, குவைத்தின் ஜஸீரா எயார்வேய்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரோஹித் ராமச்சந்திரனின் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக குறித்த எயார்வேய்ஸ் நிறுவனம் தொண்டர் அடிப்படையில் முன்வந்து இந்த மருந்துப் பொருட்களை இலங்கைக்கு இலவசமாக அனுப்பிவைத்தது.

கடந்த ஜூன் 16 கொழும்பை வந்தடைந்த இந்த பொருட்களை மருந்து உற்பத்தி வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சின் செயலாளர் டாக்டர் ஆர்.எம்.எஸ்.கே. ரத்னாயக்க உத்தியோகபூர்வமாக பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்வில், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் துணை இயக்குநர் ஜெனரல் அருணா பிரசாத் லேகாங்கே, வெளிவிவகார அமைச்சின் ஆபிரிக்க விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகமும் கொவிட் - 19 மையத்திற்கான இணைப்பாளருமான பி.கந்தீபன் மற்றும் குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தின் அமைச்சர் போஷிதா பெரேரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இலங்கை உட்பட பல நாடுகளைச் சேர்ந்த ஏழை மக்களுக்கு குவைத் செம்பிறை சங்கம் தொடர்ச்சியாக உதவிகளை மேற்கொண்டு வருகின்றது. யாழ். போதனா வைத்தியசாலையில் புனர்வாழ்வு பிரிவு ஒன்றை குவைத் செம்பிறை சமூகம் அண்மையில் நிறுவியது. குவைத் செம்பிறை சங்கத்தின்  எல்லைகளற்ற இந்த ஒத்துழைப்பு எப்போதும் இலங்கை மக்களால் மதிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.