அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வேள்ட் விஷன் உதவி

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட  குடும்பங்களுக்கு வேள்ட் விஷன் உதவி

•    ஜா-எல, வத்தளை மக்களுக்கு ரூ. 14 மில். பெறுமதியான உலருணவுப் பொருட்கள்
•    பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10,000 முகக்கவசங்களும் வழங்கப்பட்டன
•    ஆரம்பத்தில் 5,750 குடும்பங்களுக்குக் கிருமியழிப்புக் கருவிகளை வழங்கியது

ஒன்றுக்கு மேற்பட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட கம்பஹா மாவட்டத்திலுள்ள வத்தளை, ஜா-எல பகுதிகளைச் சேர்ந்த 4,750 குடும்பங்களுக்கு உதவுவதற்கு வேள்ட் விஷன் லங்கா அமைப்பு முன்வந்துள்ளது. அக்குடும்பங்களுக்கு 14 மில்லியன் ரூபாய் பெறுமதியிலான உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இக்குடும்பங்களில் சுமார் 8,000 சிறுவர்கள் காணப்படுவதுடன், இக்குடும்பங்களிடத்தில் 675, பெண்களால் தலைமை தாங்கப்படும் குடும்பங்களாகும்.
கொவிட்-19 நோய் காரணமாக அதிகமாகப் பாதிக்கப்பட்டு, உயர் இடர் பகுதியாகக் கருதப்படும் வத்தளை, ஜா-எல பகுதிகள், அண்மையில் தென்மேற்குப் பருவக்காற்று மழையால் ஏற்பட்ட கடும் வெள்ளத்தாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

இவ்வெள்ளம் காரணமாக அதிகமாக இடம்பெயர்ந்தோர் கம்பஹா மாவட்டத்தையே சேர்ந்தவர்களாவர். அங்கு 20,500க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்திருந்தனர். இதற்கு மேலதிகமாக, எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக் காரணமாக இப்பகுதிகளில் கரையோரப்பகுதிகளில் வாழும் மக்கள், தமது வாழ்வாதாரத்தை இழந்து காணப்படுகின்றனர்.

அப்பகுதியில் காணப்படும் நெருக்கடி தொடர்பில், இவ்வுலருணவுகளைக் கையளிக்கும் நிகழ்வில் கருத்துத் தெரிவித்த வத்தளை பிரதேச செயலாளர் பி.டி.டி.சி. ரஜிக்கா, "தமது குழந்தைகளுக்கு உண்பதற்கு இரண்டு நாட்களாக எதையும் கொடுக்கவில்லை எனத் தெரிவித்து, பெற்றோர்கள் எங்களிடம் உணவுகளைக் கோரினார்கள். எல்லோருக்கும் எங்களால் வழங்க முடியாதிருந்தது. இவ்வுலருணவுகளை வழங்குவது அவர்களுக்கு மிகப்பெரும் உதவியாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து அவர், "அனர்த்தங்களுக்கு அதிக இடரைக் கொண்டவனவாக இச்சமுதாயங்கள் காணப்படுவதோடு, தற்போது அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் நிலையென்பது, அரசாங்கத்தால் உதவியளிக்கப்படக்கூடிய நிலைமையை விட மோசமானதாக உள்ளது.

இங்குள்ளவர்களில் கணிசமானளவு குடும்பங்கள் நாட்கூலி வேலையிலேயே தங்கியிருப்பதோடு, பெருந்தொற்றுக் காலத்தில் அவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று, மீனவத் தொழிலை மேற்கொள்ளும் சமுதாயம், அண்மைய கப்பல் விபத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. என்னவாறான அனர்த்தமாக இருந்தாலும், வேள்ட் விஷன் எப்போதுமே உதவியிருக்கிறது. அதற்காக நாம் நன்றியுணர்வுடன் உள்ளோம்" என்று குறிப்பிட்டார்.

இந்த அன்பளிப்புத் தொடர்பில் கருத்துத் தெரிவித்த கம்பஹா மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் ஜே.டபிள்யூ.எஸ். கித்சிறி, "பல்வேறு மட்டங்களிலுள்ள அரச அதிகாரிகளுடன் இணைந்து தமது பணிகளை மேற்கொள்பவர்கள் என்ற அடிப்படையில், ஏனைய அமைப்புகளை விட வேள்ட் விஷன் வேறானது.

ஒரே நபருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் உதவிகள் கிடைப்பதையும் குழப்பங்களையும் இது தடுக்கிறது. அத்தோடு, எமது வளங்களைத் திறம்பட ஒதுக்குவதற்கு இது உதவுகிறது" எனத் தெரிவித்தார்.

உலருணவுப் பொருட்களுக்கு மேலதிகமாக, டபிள்யூ.என்.ஜே இம்போர்ட்ஸ் அன்ட் எக்ஸ்போர்ட் நிறுவனத்துடன் வேள்ட் விஷன் மேற்கொண்ட பங்குடைமையைத் தொடர்ந்து பெறப்பட்ட 10,000 முகக்கவசங்கள், 2,000 குடும்பங்களிடம் பகிர்ந்தளிக்கப்பட்டன.

வேள்ட் விஷனின் இந்தப் பதிலளிப்புச் செயற்பாடு தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவ்வமைப்பின் தேசிய பணிப்பாளர் கலாநிதி தனன் சேனாதிராஜா, "இலங்கையில் வேள்ட் விஷன் செயற்பட்டுவரும் 44 ஆண்டுகளிலும், அனர்த்தங்களுக்குப் பதிலளிப்பதைச் சிறப்பாகச் செய்து வந்திருக்கிறது.

ஆனால், வத்தளை, ஜா-எல ஆகிய பகுதிகளுக்கான பல்வேறு அனர்த்தங்களுக்குப் பதிலளிக்கும் இச்செயற்பாடு, நாம் எதிர்கொள்ள வேண்டிய கடினமான பதிலளிப்புகளுள் ஒன்றாக அமைந்தது. ஊரடங்கு போன்ற பயணக் கட்டுப்பாடுகள் நாட்டில் காணப்பட்டன. அத்தோடு, கிட்டத்தட்ட முழு நாடும் கொவிட்-19க்கு அதியுயர் இடருள்ள பகுதிகளாக அடையாளங் காணப்பட்டிருந்தன.

அதில் மேல் மாகாணம் முக்கியமானது. எமது பணியாளர்களை ஒன்றுகூட்டுவது, ஏனைய அமைப்புகளோடு  இணைந்து செயற்படுவது, மக்களைச் சென்றடைவது போன்ற செயற்பாடுகள், வழக்கத்தை விடக் கடினமாக அமைந்தன.

ஆனால், எமது பதிலளிப்புச் செயற்பாடுகள் எவ்வளவு கடினமாக இருந்தாலும், எமது பணிகளிலிருந்து மக்கள் பயனைப் பெறுவதைப் பார்க்கும்போது, அப்பணிகளை மேலும் செய்ய வேண்டுமென்ற எண்ணம் ஏற்படுகிறது. இப்பணிகளில் ஈடுபட்டிருந்த அனைவரையும் நான் பாராட்ட விரும்புகிறேன், அதிலும் குறிப்பாக வத்தளை - ஜா-எலவில் காணப்படும் எமது அணியினருக்கு விசேட பாராட்டுக்கள்" என்று குறிப்பிட்டார்.

வத்தளை, ஜா-எல பகுதிகளில் அண்மையில் வெள்ளம் ஏற்பட்டபோது, மழை தொடர்ந்து பெய்துவந்த நிலையிலும், அப்பகுதிகளில் உள்ள வேள்ட் விஷன் அணியினர், அப்பகுதி மக்களுக்கான உடனடி உதவியாக 5,750 குடும்பங்களுக்குக் கிருமியழிப்புக் கருவிகளை வழங்கிவைத்திருந்தனர்.

தொற்றுக்களிலிருந்து சிறுவர்களையும் குடும்பங்களையும் பாதுகாக்கும் நோக்கில் இப்பணி முன்வைக்கப்பட்டது. சர்வதேச மருத்துவச் சுகாதார அமைப்புடன் இணைந்து வேள்ட் விஷன் மேற்கொண்ட இந்த உதவிச் செயற்பாடுகள், அப்பகுதிகளிலுள்ள கிராம சிறுவர் அபிவிருத்திச் செயற்குழுக்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டன.

வேள்ட் விஷன் லங்காவின் கொவிட்-19 பதிலளிப்புச் செயற்பாடுகளில் வத்தளை, ஜா-எல பிரதேச செயலகப் பிரிவுகள் முக்கிய கவனத்தைப் பெற்றிருந்தன. நாடு முழுவதிலும் அவ்வமைப்பு மேற்கொண்ட கொவிட்-19 பதிலளிப்புச் செயற்பாடுகளுக்காக 582.4 மில்லியன் ரூபாய் இதுவரை செலவுசெய்யப்பட்ட அதேநேரம், வத்தளையிலும் ஜா-எலவிலும் 58.4 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

வேள்ட் விஷன் லங்காவின் கொவிட்-19 பதிலளிப்புச் செயற்பாடுகளின் ஓர் அங்கமாக, 400,000க்கும் அதிகமானோரை அவ்வமைப்புச் சென்றடைந்துள்ளது. தடுப்புச் செயற்பாடுகளை மேம்படுத்துதல், சுகாதாரக் கட்டமைப்புகளையும் பணியாளர்களையும் பலப்படுத்துதல், பாதுகாப்பு, கல்வி, போசாக்கு ஆகியன மூலமாகச் சிறுவர்களுக்கு உதவுதல் ஆகியவற்றில் அவ்வமைப்பின் செயற்பாடுகள் கவனஞ்செலுத்தியிருந்தன.

வேள்ட் விஷன் இதுவரை 6,059 மருத்துவமனைகள், கிளினிக்குகள், ஏனைய சுகாதார நிறுவனங்கள் ஆகியவற்றுக்குக் கிருமியழிப்புக் கருவிகளை வழங்கி உதவியுள்ளது. கிராமிய சுகாதார நிறுவனங்கள் சிலவற்றுக்கு நெபுலைசர்கள், மின் இதயத்துடிப்புப் பதிகருவிகள், தன்வெப்பக்கருவிகள், சோதனைப் படுக்கைகள், செங்கீழ் வெப்பமானிகள் ஆகியன வழங்கிவைக்கப்பட்டன.

வேள்ட் விஷன் என்பது சிறுவர்களுடனும் குடும்பங்களுடனும் சமுதாயங்களுடனும் இணைந்து பணியாற்றி, வறுமையையும் நீதியின்மையையும் இல்லாது செய்வதற்காகப் பணியாற்றும் ஒரு கிறிஸ்தவ, உதவி, அபிவிருத்தி, பரிந்துரைபேசும் அமைப்பாகும்.

கல்வி, சுகாதாரமும் போஷாக்கும், நீரும் துப்புரவும், பொருளாதாhர அபிவிருத்தி, சிறுவர் பாதுகாப்பு ஆகியன பிரதான பிரிவுகளில் மதம், இனம், பால்நிலை வேறுபாடுகளின்றி வேள்ட் விஷன் பணியாற்றுகிறது.

வேள்ட் விஷன் அமைப்பு 1977ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் செயற்பட்டு வருவதோடு, 13 மாவட்டங்களில் 30 இடங்களில் நீண்டகால அபிவிருத்தித் திட்டங்களில் பணியாற்றிவருகிறது. 2020ஆம் ஆண்டில் அவ்வமைப்பு, கிட்டத்தட்ட 100,000 சிறுவர்களினதும் அவர்களது குடும்பங்களினதும் வாழ்வில் நேரடியான பங்களிப்பை வழங்கியிருந்தது.